ஸ்ரீ” என்கிற திருநாமத்தின் ஆறு பெருமைகள்:–
1. ஸ்ரீயதே (ஆச்ரயிக்கப்படுகிறார்) நம்மைப் போன்ற ஜீவர்களால் உய்வதற்காகச் சரணமாக அடையப்படுகிறார்.
2. ச்ரயதே (ஆச்ரயிக்கிறார்) தன்னை அடைபவர்களை உய்விப்பதற்காக,தான் பெருமாளை அடைந்திருக்கிறார்.
3. ச்ருணோதி (கேட்கிறார்) “தவறிழைத்த எங்களைப் பெருமாள் திருவடிகளிலே காட்டிக்கொடுத்தருள வேணும்” என்னும் அடியார்களின்
வேண்டுதலைக் கேட்கிறார்.
4. ச்ராயவதி (கேட்கும்படி சொல்கிறார்) நம் வேண்டுதலை பெருமாளிடம் எடுத்துச் சொல்லி,நம்மை அவனிடம் சேர்க்கிறார்.
5.ச்ருணாதி(நீக்குகிறார்) நமக்குத் தடையாக உள்ள பாபங்களைப் போக்குகிறார்.
6.ஸ்ரீணாதி(பக்குவமாக்குகிறார்) நாம் கைங்கர்யம் செய்வதற்கு ஏற்றவாறு நம் குணங்களை பரிபக்குவம் ஆக்குகிறார்.எ
ஶ்ரீ: .....!!!
ஸ்ரீ என்கின்ற மகாலட்சுமியை குறிப்பிடும் ஓரெழுத்துச் சொல்லுக்கு ஆறு அர்த்தங்கள் உண்டு.
1. ஸ்ரீயதே:நம் எல்லோராலும் ஆஸ்ரயிக்கப்படுபவள் என்று பொருள். அவள் திருவடியைப் பற்றினால் உத்தமமான பலன் கிடைக்கும். அவளுக்கு தண்டிக்கவே தெரியாது. பற்றுவதற்கு எளிமையானவள்.
2. ச்ரயதே:மகாலட்சுமி, தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். அந்த தாமரை மலரோ, பகவானின் திருவடிகளின் மென்மையோடு போட்டி போடுகின்றனவாம். மகாலட்சுமியின் மென்மையான கைகள் பட்டாலே அவன் திருவடிகள் கன்றிப் போய் விடுகிறதாம். அப்படிப்பட்ட பகவானின் திருவடிகளை, மகாலட்சுமி தன்னுடைய மென்மையான திருக்கைகளால் பற்றி வருடுகிறாள். பகவானின் திருவடிகளை சார்ந்து இருக்கிறாள். அவளை நாம் சார்ந்து இருக்கிறோம். ``ச்ரயதே’’ என்றால் பகவானை ஆஸ்ரயித்திருப்பவள் என்று பொருள்.
3. ச்ருனோதி:நம் கஷ்டங்களைக் கேட்கின்றாள். ராமானுஜர் அகில ஜெகன் மாதரம் அஸ்மின் மாதரம் என்றும் உலகத்துக்கும் தனக்கும் தாயாக பிராட்டியை சொல்லியிருக்கிறார். தாய் தன் குழந்தையின் துன்பத்தை எப்படிப் பொறுமையாக கேட்பாரோ, அப்படி மகாலட்சுமி கேட்பதால், அவரிடம் மன ஈடுபாட்டோடும், இயல்பாகவாவும், பிராத்தனை செய்கின்றோம். ``ச்ருனோதி’’ என்பதற்கு தன்னைத் தேடி வரும் அன்பர்களின் பிரார்த்தனையை முதலில் காது கொடுத்துக் கேட்கிறாள் என்று பொருள்.
4. ச்ராவயதி:தான் கேட்பதைபோலவே பகவானை கேட்கச் செய்கிறாள். நம்முடைய பாவங்களையெல்லாம் போக்கி, சரியான சந்தர்ப்பம்பார்த்து பகவானிடம் நம்மை பற்றிச் சொல்லிக் காப்பாற்றுகிறாள். ``ச்ராவயதி’’ என்பதற்கு பகவானிடம் கேட்கச் செய்பவள் என்பது பொருள்.
5. ச்ருணாதி:பாபங்களை நீக்குபவள் என்று பொருள். நமக்கு நன்மைகள் கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் நாம் செய்த பாவங்கள் அல்லவா. கண்ணாடியில் அழுக்கு படிந்திருந்தால், அந்த அழுக்கை நீக்கினால் போதும், கண்ணாடி பளிச்சென்று ஆகிவிடும். அதனுடைய உபயோகம் மேம்படும். அதைப்போலவே ஒருவருடைய பாவங்களைத் துடைத்துவிட்டால் அவருக்கு கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் உதயமாகிவிடும். கண்ணாடியின் அழுக்கைத் துடைத்துச் சுத்தப் படுத்துவது போல, தன்னை வணங்குபவர்களின் பாவங்களைத் தீர்த்து அருள்புரிகின்றாள் என்பது இதற்குப் பொருள்.
6. ச்ரீணாதி:ஒரு மனிதனுக்கு பக்குவம் இருந்தால்தான் அவன் தன்னை உணர்வான். தன்னைச்சுற்றி உள்ளவர்களையும் உணர்வான். தான் எதற் காகப் படைக்கப்பட்டோம் என்பதையும் உணர்வான். தனக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருப்பான். இப்படி தன்னை அண்டி நிற்பவர் களை பலவகையிலும் பக்குவப்படுத்தி அவர்கள் மற்றவர்களுக்கும் எம்பெருமானுக்கும் தொண்டு புரியும்படியாக நியமிப்பவள்.🙏🌹
திருவென்னும்……
பல்லவி
திருவென்னும் பெயராளைத் திருமகளைத் துதித்தேன்
பொருள் தரும் ஶ்ரீ மகாலக்ஷ்மியெனும் தாயாரை
அனுபல்லவி
பெருமைக்குரிய கேசவன் திருமார்பிலுறை
அருள் பலவுமடியார்க்கு அள்ளியளித்திடும்
சரணம்
பொருள் பல உடையது திருவென்னும் திருநாமம்
கருணையன்றி வேறு தண்டனைகளளிக்காத
ஒரு நாமம் பற்றுதற்கு எளிதானவள் நாமம்
ஒரு குறையுமணுகாமல் நமைக் காக்கும் நாமம்
திருமாலின் திருவடியை வருடுபவள் நாமம்
அரவிந்த மலர் மீது அமர்ந்திருப்பவள் நாமம்
குறையனைத்தும் கேட்டதனை அவன் காதிலோதும்
கருணைமிகு அன்னையின் அழகிய திருநாமம்
ஆடியில் படிந்த மாசுகளைத் துடைப்பது போல்
ஓடி வந்து நாம் செய்த வினைப்பயன்களை நீக்கி
நாடித்துதிக்கும் நமக்கு நல்லருளளிக்கின்ற
வேடிக்கையைச் செய்யும் தயையுடைவள் நாமம்
தன்னையறிந்து செயல்களைச் செய்பவன்
தன்னுடனிருப்பவர் நன்னலமறிவான்
தன்னத்தானுணர்ந்தவன் தன் செயலாலே
அன்னையினருளை அடைந்திடச் செய்யும்
No comments:
Post a Comment