குருவாயூர் கண்ணனிடம்
ஒருநாள் யாருக்கும் தெரியாமல் கேள்வியொன்று கேட்டேன்
உண்மையைச் சொல்லவேண்டும்
பூந்தானத்தின் ஞானப்பானயா
நாராயணீயமா? இரண்டில்
எது உனக்கு மிகவும் இஷ்டம்?
ஒரு நொடி சிந்தித்தவன்
ஒரு கள்ள புன்சிரிப்பையே
எனக்கு பதிலாகத் தந்தான்.
மற்றொரு நாள் ஊட்டுப்புரை
மாளிகையில்
சப்தாஹ யக்ஞத்தில்
அவனைக் கண்டு
மீண்டும் கேட்டேன்
நாராயண நாமசங்கீர்த்தமா
செம்பை சங்கீதமா?
எதில் இஷ்டம் அதிகம்?
ஒருநொடியும் யோசிக்காது
அவனிடமிருந்து கிடைத்த பதில்
அவன் விழிகளில்
நிறைந்திருந்த புன்னகை மாத்ரமே.
ஒரு நாளிரவு கோவிலில்
அவனைக் கண்டதும்
மற்றொரு கேள்வியுடன்
அருகில் சென்றேன்.
குரூரம்மையின் தொட்டிலில்
ஆடுவதா? அல்லது கிருஷ்ணாட்டமா?
எது உனக்கு
மிகவும் பிடிக்கும்?
மந்தஹாசத்தோடு
கூடிய ஒரு கள்ளப் பார்வையே
அவன் பதிலாக இருந்தது.
ஊட்டுபுர - பக்தர்களுக்கு உணவளிக்கும் இடம்.
பி.கு: உனக்கு அவளைத்தானே பிடிக்கும் என்று இவளும், இவளைத்தானே பிடிக்குமென்று அவளுமாக இரண்டு பெண்களும் என்னை வம்பிழுக்கும்போது நான்கூட இப்படித்தான் சிரித்து மழுப்பியிருக்கிறேன்.
குருவாயூர் கண்ணனை……
பல்லவி
குருவாயூர் கண்ணனை ஒருநாள் நான் கேட்டேன்
திருவாய் மலர்ந்தருளி கேசவனே உரைப்பாயென
அனுபல்லவி
இரு வினை தீர்ப்பவனை இடர்கள் களைபவனை
குருவாயுரப்பனை ஶ்ரீமன் நாராயணனை
சரணங்கள்
குரு நாராயண பட்டத்திரி எழுதிய
நாராயணீயமா பூந்தானம் புனைந்த
ஞானபானயா உனக்கு எது அதிகம்
பிரியமென்று கூறென்று ஆவலுடன் நானும்……..
ஒரு நொடி கண்ணிமைத்து யோசிப்பவன் போல
இரு கண்ணும் விரித்து எனைப் பார்த்தவனும்
மறு மொழியெதுவும் கூறாமலே….
கள்ளச்சிரிப்பாக புன்முறுவல் செய்தான்
பிறிதொரு நாள் ஊட்டுப்புரை சப்தாகம் நடுவே
அரியவனை நாராயண நாம சங்கீர்த்தனமா
செம்பையின் கானமா எது உனக்கு அதிகம்
பிரியமென்று கூறென்று ஆவலுடன் நானும்……..
ஒரு கணமும் சிறு துளியும் யோசிக்காமலே
திருமுகத்தில் மாற்றமெதுவுமில்லாமலே
மறு மொழியெதுவும் உரைக்காமலே
புன்சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தான்
மற்றொரு நாள் நள்ளிரவு கோவிலருகில்
இன்னொரு கேள்வியுடனருகில் சென்றேன்
குரூரம்மை தொட்டிலிலாடுதோ இல்லை
கிருஷ்ணாட்டமா உனக்கெது பிரியமென்று
திருமுகத்தில் மாற்றமெதுவுமின்றி
கருணை பெருகும் இருவிழியுடனே
ஒரு கள்ளப் பார்வையெனைப் பார்த்து
மறுமொழியாய் மீண்டும் புன்னகை செய்தான்
No comments:
Post a Comment