ஆதி ஆதி ஆதி நீ; ஓர் அண்டம் ஆதி; ஆதலால்
சோதியாத சோதி நீ அது உண்மையில் விளங்கினாய்!வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதி ஆகி, ஆயன் ஆய மாயம் என்ன மாயமே? (எண்.785)
பெருமானே! உலக உற்பத்திக்கு அடிப்படையான முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தக் காரணம் என்கிற மூன்று விதமான காரணமும் நீயே ஆகிறாய்; அண்டத்துக்குட்பட்ட எல்லாப் பொருள்களுக்கும் த்லைவனாகிறாய். இப்படிச் சகல காரண பூதனாகையாலே, சோதித்தறிய வேண்டாத பரஞ்சோதி நீயே! அவ்வாறாக என்றுமுள்ள வேதத்தில் ஒளி விடுபவனே! வேதங்களுக்குத் தலைவனே! அந்த வேதத்தில் சொல்லப்படும் யாகத்தால் ஆராதிக்கப்படுபவனே! இவ்வுலகத்திற்கும், பரமபதத்திற்கும் தலைவனே! இவ்வாறு எல்லாவற்றுக்கும் காரணனாய் இருந்தும் இடையனாய்ப் பிறந்த மாயம் என்ன ஆச்சர்யம்?
பூதலம் போற்றும்……
பல்லவி
பூதலம் போற்றும் பரமபதநாதனே
தீதின்றி உனையே தினமும் துதித்தேன்
அனுபல்லவி
மேதினியில் நீ ஆயர் குலத்துதித்த
சேதியில் சொல்லும் மாயமென்னவோ
சரணம்
ஆதியும் நீயே அந்தமும் நீயே
வேதியரோதும் வேதமுமதன் பொருளும்
சோதியும் சுடரும் விண்ணும் மண்ணுமான
ஆதிகேசவனே அனைத்துமானவனே
No comments:
Post a Comment