அல்லிநாள் தாமரை மேல் ஆரணங்கின் இன்துணைவி
மல்லி நாடாண்ட மடமயில் – மெல்லியலாள்
ஆயர்குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை
வேயர் பயந்த விளக்கு
புதிதாக மலர்ந்த, இதழ்களையுடைய தாமரை மலரில் நித்ய வாஸம் செய்யும் பெரிய பிராட்டியார் என்னும் தேவதையின் ப்ரிய தோழியாகவும், திருமல்லி நாட்டை ஆள்கின்ற அழகிய மயில் போன்றவளாகவும், ம்ருது ஸ்வபாவத்தை உடையவளுமான ஆண்டாள் நாச்சியார், இடையர் குல வேந்தனான கண்ணன் எம்பெருமானின் திருமேனிக்கு ஒத்தவளாகவும், அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரிலே அந்தணர் குலத்தலைவரான பெரியாழ்வார் பெற்றெடுத்த விளக்காகவும் திகழ்கின்றாள்.
கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் தென் திருமல்லி நாடி செழுங்குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய
சோலைக் கிளி அவள் தூய நற்பாதம் துணை நமக்கே
அழகிய சுரியுடைய ஸ்ரீ பாஞ்சஜந்யத்தைப் பார்த்து ஆச்சர்ய செயல்களை உடைய எம்பெருமானின் சிவந்த திருவதரத்தின் சுவையை விசாரிக்கும் பெருமையை உடையவளும், அழகிய திருமல்லி நாட்டின் தலைவியும், தன்னுடைய அழகிய கூந்தலில் சூடிக்களைந்த பூமாலையைத் திருவரங்கநாதனுக்கு ஸமர்ப்பிக்கும்படியான மேன்மையை உடையவளும், சோலையில் இருக்கும் கிளி போன்றவளுமான ஆண்டாள் நாச்சியாரின் தூய்மையும் இனிமையும் பொருந்திய திருவடிகளே நமக்குப் புகலிடம்.
அழகிய கமலமலர்…..
பல்லவி
அழகிய கமல மலர் மீதமர்ந்திருக்கும்
ஆரணங்கின் தோழி மல்லிநாட்டரசி
அனுபல்லவி
குழலோன் கண்ணனின் திருமேனிக்கீடான
அழகு மயிலென விளங்கும் வேயர் குலவிளக்கு
சரணம்
அழகிய வரியுடைய சங்காழ்வார் தன்னிடம்
பழகிய கேசவனின் திருவதரச்சுவை வினவும்
குழலாளே மாலைதனை சூடிக்கொடுத்தவளின்
கழலடியே என்றென்றும் துணையாகும் நமக்கே
No comments:
Post a Comment