ஆடிடுவாய்…..
பல்லவி
ஆடிடுவாய் ஆறுமுகனே உனக்கு
பாடிடுவேன் நான் ஊஞ்சல் பாட்டு
அனுபல்லவி
ஈடிணையில்லாக் கேசவன் மருகனே
காடுறை ஈசனின் அருமை மகனே
சரணம்
நாடிடுமடியார் குறைதீர்ப்பவனே
கோடிவினை தீர்க்கும் முத்துக்குமரனே
தேடிப் பணிவோர்க்கு அருள்புரிபவனே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
பாடுகள் குறைந்தே பின்சின் மாந்தரெல்லாம்
ஓடி வந்துனைத் துதித்து பாடும் வண்ணம்
கூடிக் கொண்டாடிட வேண்டுமென்று
ஆடுகவே முருகா ஆடுகவே
விழிக்குத் துணை நீயே வேலவனே என்
வழிக்கும் துணை நீயே திருமுருகா
அழிக்கும் வேலென் பழிக்குத்துணையென
ஆடுகவே கந்தா ஆடுகவே
சீரடி பணிந்தே உனைத் துதித்தோம்
செல்வா குமரா அருள் தருவாய்
ஆரிருள் விலகி ஒளிபெறவே
ஆடுக பொன்னூஞ்சல் ஆடுகவே
ஆடகப்பொன்னால் ஊஞ்சலிட்டு
அதற்கொரு வயிரக் கயிறுமிட்டு
கூடிடுமடியார் ஆட்டிடவே
குகனே சண்முகனே நீ ஆடிடுவாய்
விண்ணாளுமிந்திரன் பெண்ணை மணந்தவனே
வேடர் குலக்குறத்தி வள்ளி மணாளனே
பாடித்துதித்தோமுன் பாதகமலங்களை
ஆடுகவே குமரா ஆடுகவே
குன்றுதோராடும் வேல் முருகா
இன்றிங்கு வந்தாடு மால் மருகா
என்றுமுனைப் பணிந்தோம் கதிர்வேலா
ஆடுகவே ஊஞ்சல் ஆடுகவே
No comments:
Post a Comment