“ மாயை “
ஈசனே கேசவன் நேசனே திருமாலே
தாசனென்னுயிர் பிரிந்த பின்னிவ்வுலகில்
நீசனென்னுடலை எரித்த பின் புதைத்த பின்
ஈசனுனக்குமெனக்குமுள்ள பந்தம் சொந்தம்
ஆசானா தந்தையா தாயா பந்துவா தோழனா
கேசவனே எடுத்துரைப்பாய் ஆசையுடன் கேட்டேன்
தேசுடைய தேவனே ஆவலுடன் காத்திருக்கேன்
* * * * *
மாயை என்பது நம் உருவாக்கம் என்பது புரிந்து விட்டால் அங்கே ஞானம் பிறக்கிறது. ஞானம் என்பது இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் நமக்கு மாயைதான். மாயையிலேயே வாழ்க்கை நடந்து முடிந்து போகும். மாயை என்றால் நமக்கு வாழ்க்கையே புரியவில்லை என்றுதான் பொருள். மாயை என்றாலே ஏமாற்றம்தான். பிரமைதான். பிரமை என்றால் இல்லாததை இருப்பது போல நினைத்துக் கொள்ளும் தன்மை. பழுதைப் பாம்பாகப் பார்த்து மிரள்வது. கானல் நீரை நீராகக்கண்டு பிரமிப்பது. எது இல்லையோ அது இருக்கின்றது போன்ற நினைவில் இருப்பதுதான் பிரமை. அதுதான் மாயை. இப்படி வாழ்க்கை முழுவதும் ஏமாற்றத்திலேயே நடந்து விடலாமா? மற்றவர்களை ஏமாற்ற நினைத்தால் அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொண்டு இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்? அதுதான் மாயை.
ஆனால் மாயை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. திரைப்படங்களில் வருபவர்கள் வாழ்க்கையில் உண்மையாக இருப்பவர்களை விட உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஏனென்றால் அதுதான் மாயையின் சக்தி. மாயையின் சக்தியைத் தாண்டிப் போக வேண்டுமென்றால் ஒரு மனிதனுக்கு அவனுக்குள்ளே சிறிதேனும் ஆர்வம், முறையான நோக்கம், ஒரு தீவிரம் வேண்டும். அது இல்லாமல் அந்த மாயை என்கிற எல்லையை அவன் தாண்ட முடியாது. அதிலேயே வாழ்க்கை முடிந்து போய்விடும்.
இப்போது நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இப்படிப் பார்க்க வேண்டும். ஏதோ ஒருநாள் இறந்துவிடப் போகிறீர்கள் இல்லையா? இப்போது அடுத்த க்ஷணம் இறக்கப் போகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது வரைக்கும் நடந்ததெல்லாமே பாருங்கள். எல்லாமே மாயை என்று அப்போதுதான் தெரிகிறது.
ஒருநாள் ஒரு பெண்மணிக்கு தூக்கத்தில் கனவு வந்தது. அந்தக் கனவில் கட்டுமஸ்த்தான ஆள் ஒருவன் அப்படியே அந்த அம்மாவைத் தீவிரமாகப் பார்த்தவாறே நெருங்கி நெருங்கி வந்து விட்டான். அந்தப் பெண்மணி நடுங்கும் குரலில், "என்னை என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அவன் "இது உன் கனவுதானே, நீதானே தீர்மானிக்க வேண்டும்?" என்றான். எனவே மாயை என்பது நீங்கள் உருவாக்கிக் கொள்வது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மாயை என்பது என் உருவாக்கம் என்பது புரிந்து விட்டால் அதற்குப் பெயர் ஞானம். அது புரியாமல் அதுவே உண்மை என்று நினைத்தால் அது அஞ்ஞானம் அல்லது மாயை.
No comments:
Post a Comment