#நரவுருவெடுத்த…..
பல்லவி
நரவுருவெடுத்த ராமனும் கண்ணனுமே
கரம் சிரம் பணிந்து நான் வணங்கும் வீரராகவன்
அனுபல்லவி
அரனயன் பணிந்திடும் திருமாலுமவனே
திருமகள் கனகவல்லி நாயகனுமவனே
சரணம்
காவித்துணி உடுத்தியுடல் மறைத்து
தாவிப் பஞ்சவடி வந்து காதல் செய்த
பாவியரக்கனை வதம் செய்தவனமர்ந்த
திருவெவ்வுள்ளெனும் அழகிய திருத்தலம்
அரியொத்த தோளுடைய இடைக்குலப் பெண்டிர்
உறி வெண்ணை திருடி உண்டவனிவனெனப்
பரிகசித்த மாதவன் கேசவன் வந்தமர்ந்த
திருவெவ்வுள்ளெனும் திவ்ய க்ஷேத்திரம்
* * * * *
திருஎவ்வுள் (திருவள்ளூர்)- பெரிய திருமொழி1058
காசை யாடை மூடியோடிக்
காதல்செய் தானவனூர்,
நாச மாக நம்பவல்ல
நம்பி நம்பெருமான்,
வேயி னன்ன தோள்மடவார்
வெண்ணெயுண் டானிவனென்று
ஏச நின்ற வெம்பெருமா
னெவ்வுள் கிடந்தானே.
காஷாய வஸ்த்ரத்தினால் உடம்பை மறைத்துக்கொண்டு
(பஞ்சவடிக்கு) ஓடிவந்து (பிராட்டியிடத்தில்) ஆசை கொண்டவனான இராவணனுடைய ஊராகிய இலங்கையானது நாசமாகும் படிச் செய்த
பரிபூர்ண சக்தியை உடையவனும் நமக்கிறைவனான
மூங்கிலோடு ஒத்த தோள்களை உடைய இடைச்சியர் ‘இவன் வெண்ணெய் திருடி உண்டவன்’ என்று சொல்லிப் பரிகாசிக்கும்படி நின்றவனுமான எம்பெருமான்
திருவெவ்வுளூரில் எழுந்தருளி நின்றான்.
முன்னிரண்டடிகளால் ஸ்ரீராமாவதாரத்தையும், பின்னிரண்டடிகளால் ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்தையும் அநுஸந்தித்து, இப்படி ராமகிருஷ்ணாதி அவதாரங்கள் செய்தருளின பெருமானன்றானே திருவெவ்வுள் தனில் வந்து சாய்ந்தருளி நின்றான் என்கிறார்.
No comments:
Post a Comment