அஞ்சனை புத்ரா ஆஞ்சநேயா எதையும் எதிர்கொள்ளும் 'மன வலிமை' தருவாய்
அதி வியாகரண பண்டிதா சூரியனிடம் படித்தவா 'புத்திர் பலம்' தந்திடுவாய்
அன்னை சீதா தேவியிடம் அடக்கமாக பணிவோடு கணையாழி பெற்றவனே
அரக்கன் ராவணனுக்கு முன்னால் வாலினால் சிம்மாசனம் அமைத்து சரிசமமாக அமர்ந்தவனே
அந்த மனோபாவமான சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ற நடக்கும் 'பணிவு, தைர்யம்'தருவாய்
அற்புத நாமம் ஜெய் ஸ்ரீ ராம் என ஒரு சொல்லுக்கு மயங்குபவனே 'ஆத்ம வலிமை' தந்திடு
அற்புதமாக ஒரே சொல் 'கண்டேன் சீதையை' என வெற்றி பெற்றதை சொன்னவனே
அடியேனுக்கும் அதேபோல் 'வாக் சாதுர்யம்' ஏற்பட அருள் செய்வாயே சிவஸ்வரூபனே
அற்புத உயிர் கொடுக்கும் மூலிகை தேடி தெரியாதலால் 'சஞ்சீவி மலை'யையே கொணர்ந்தாயே
அடியேனுக்கும் 'தேஹ பலம்' தந்து தேக உபாதை இல்லாமல் வாழ அருள்வாய்
என்றும் சிரஞ்சீவியாக இருப்பவனே, அனுமனே சனிக்கிழமையில் உன்னை பூஜிக்கிறேன்
கடலைக் கடந்து தடைகளைத் தகர்த்து அசோகவனத்தினில் அன்னையைக் கண்டவனே
துளசி மாலை சாற்றி ஜெய் ஸ்ரீ ராம் என சொன்னால் ஆனந்த கண்ணீர் பொழிபவனே
வெற்றிலை வெண்ணெய் வடைமாலை சாற்றினோம் வெற்றிகள் அருளிடுவாய் எங்களுக்கு ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயரா Prema / Sankara Narayanan
அஞ்சனை மைந்தனை…..
பல்லவி
அஞ்சனை மைந்தனை ஆஞ்சநேயனை
தஞ்சமடைந்தேன் தயை புரிவாயென்று
அனுபல்லவி
வஞ்சி சீதையிடம் கணையாழி பெற்றவனை
சஞ்சலம் களைந்து ஆத்மபலம் பெற வேண்டி
சரணம்
வஞ்சகமாய் சீதா தேவியைக் கவர்ந்த
வஞ்சகன் ராவணனுக்கிணையாக அவன் முன்
வாலினால் சிம்மாசனம் செய்தமர்ந்தவனை
கேசவன் நேசனை ராம தூதனை
சஞ்சீவி மலை கொண்டு இளையவரைக் காத்தவனை
ஞாயிறிடம் பயின்ற வியாகரண பண்டிதனை
ஆன்ம பலம்,தேக பலம்,மனோ பலம், புத்தி பலம்
அனைத்துமெனக்களிக்க வேண்டுமெனத் துதித்தேன்
மண் மீது புகழ் விளங்க கடல் கடந்திலங்கை சென்று
கண்மணி சீதையை அசோக வனத்தில் கண்டு
கண்டேன் சீதையென ஒரு சொல்லாலனைத்தும் சொன்ன
திண் தோளன் அனுமனிடம் சொல் வளம் தர வேண்டினேன்
எங்கெங்கு ராம நாமம் ஒலிக்கிறதோ
அங்கெல்லாமிருக்கும் சிவரூபனனுமனை
பங்கய பதம் பணிந்து துளசி மாலை சாற்றி
அங்கம் புழுதி பட விழுந்து வணங்கினேன்
வெண்ணை வடைமாலை வெற்றிலை மாலை
கண் குளிரச் சாற்றி சனி வாரம் துதித்தேன்
கண் கவரழகனே வாயுகுமாரனே
பண்ணிசைத்துப் பாடிடும் எனக்கருள் புரிவாயே
No comments:
Post a Comment