திருப்பங்கள் தரும் திருவாசி ஈசன்
**********
சோழ மன்னன் திருப்பணி செய்த திருக்கோவில், திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடிய திருத்தலம், அன்னை பார்வதி அன்னப் பறவையாய் இறைவனை வழிபட்ட தலம், சுந்தரருக்கு இறைவன் பொற்கிழி தந்த கோவில், கொண்டை சடையோடு அரவத்தை அழுத்திய படி ஆனந்தத் தாண்டவமாடும் அபூர்வ நடராஜர் அருளும் ஆலயம் என பல்வேறு தனிச் சிறப்புகள் கொண்ட தலமாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள, திருவாசி வடகரை தேவாரத் தலம் திகழ்கிறது. ஐந்து நிலை ராஜகோபுரம், எதிரே நான்கு கால் கல் மண்டபம் என எழிலாக காட்சி தருகிறது, இந்த ஆலயம். ராஜகோபுரத்தைக் கடந்ததும், தென்பகுதியில் பாலாம்பிகை அம்மன் சன்னிதி இருக்கிறது. அம்மன் சன்னிதிக்கு எதிரே அன்னமாம் பொய்கை தீர்த்தம் மற்றும் வன்னி மரம் உள்ளது. முதல் கோபுரம் மற்றும் இரண்டாம் கோபுரத்தின் இடையே ‘ஆவுடையாப்பிள்ளை மண்டபம்’ எனும் பெயர் கொண்ட மகாமண்டபம் அமைந்துள்ளது. இதில் கொடிமரம், பலிபீடம், நந்தி சிலை உள்ளன. சகஸ்ர மண்டபத்தில், 1008 லிங்கம் அமைந்துள்ளது. தென் மண்டபத்தில் அறுபத்து மூவர், கோடி விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், திருமால், கஜலட்சுமி, சந்திரசேகரர் மண்டபம் என ஒருங்கே அமைந்துள்ளன. இங்கு திருஞானசம்பந்தர் வலக்கை சுட்டுவிரல் நீட்டியபடி, இடக்கையில் கிண்ணம் தாங்கி நிற்கிறார். சுந்தரர் இரண்டு கைகளாலும் தாளங்களைக் கொண்டு நின்றகோலத்தில் காட்சியளிக்கிறார். இவை இரண்டுமே அபூர்வமானவை. ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமியை முடிவாகக் கொண்டு, புனர்பூச நட்சத்திரத்தில் கொடியேற்றி, 10 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர மாதந்தோறும் சிவாலய விழாக்கள் எந்த வித குறைகளும் இன்றி நடத்தப்படுகின்றன. வன்னி மரம் இந்த ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது. தலத் தீர்த்தமாக அன்னமாம் பொய்கை விளங்குகிறது. இதற்கு பிரம்ம தீர்த்தம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சுவாமி தரி சனம் செய்யலாம். திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லூர் வட்டத்தில் திருவாசி அமைந்துள்ளது. இதன் பழங்காலப் பெயர் ‘திருப்பாச்சிலாச்சிராமம்’ என்பதாகும். திருச்சியில் இருந்து முக்கிய சாலை வழியாக சேலம் செல்லும் வழித்தடத்தில் சமயபுரம் டோல்கேட் உள்ளது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் திருவாசி இருக்கிறது.
காண வேண்டும்….
பல்லவி
காண வேண்டும் திருவாசி ஈசனை
பேண வேண்டுமவன் கமல பதந்தனை
அனுபல்லவி
ஆணழகனையந்தக் கயிலாயவாசனை
மாணப்பெரிய மகாதேவனை
சரணம்
வேணுவை வைத்திருக்கும் கேசவன் நேசனை
தாணுமாலயனாய்க் காட்சி தரும் பெம்மானை
நாணமுடன் பார்வதி அன்னமாய்த்துதித்தவனை
வாணுதலாள் பாலாம்பிகை போற்றும் சிவனை
துரிதம்
நந்தி கணங்கள் கந்தன் கணபதி
இந்திரன் சந்திரன் நரர் சுரர் நான்முகன்
சுந்தரர் சம்மந்தர் சுகசனகாதியர்
வந்தனை புரிந்திடும் சந்திரசேகரனை
No comments:
Post a Comment