Saturday, 26 March 2022

இந்தினிளம்பிறை…..

 திருக்கடையூர் கும்பாபிஷேகம் ஸ்பெஷல் !   கால சம்ஹார மூர்த்தி தரிசனம் !!.

எமபயம் போக்கும்  '' சந்திரசேகர அஷ்டகம்  '' (மார்க்கண்டேயர் இயற்றியது)

மிருகண்டு முனிவர் - மருத்துவதி அம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக பிள்ளை வரம் இல்லை. மிருகண்டு முனிவர் கடுந்தவம் இருந்ததன் காரணமாக ஈசன் குழந்தை வரம் அருளினார். குறைந்த ஆயுளுடனும், நிறைந்த அறிவும் உடைய குழந்தை பிறக்கும் என்று ஈசன் கூறினார். இதனையடுத்து தனக்கு பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு வளர்த்தார்.16 வயது ஆனவுடன் ஆயுள் பற்றிய கவலை குடும்பத்தாருக்கு பிறந்தது. தன் பிறப்பில் உள்ள பிரச்சினையைத் தெரிந்து கொண்ட மார்க்கண்டேயர் சிவதலங்களாகச் சென்று வழிபட்டார். 107 சிவதலங்களை வழிபட்ட பின் 108 வது சிவதலமாக திருக்கடையூர் வந்தார். மார்க்கண்டேயர் சிவபூஜைக்காக காசி தீர்த்தம் இல்லையே என்று வருத்தபட்டர்.  அவருக்காக சிவன், திருமெய்ஞானம் (திருக்கடவூர் மயானம்) பிரம்மபுரீஸ்வரர் கோயில் கிணற்றில் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று கங்கையைப் பொங்கும்படி செய்தார் அப்பொழுது அந்த கங்கை நீருடன் பிஞ்சிலமும் (பிஞ்சிலம் என்னும் சாதி மல்லி ) சேர்ந்து வந்தது. எமன் மார்க்கண்டேயரின் உயிரைப்பறிக்க வந்தபோது, எமனைக் கண்ட மார்க்கண்டேயர் நேரே ஓடிப்போய் அமிர்தகடேசுவரரை இறுகக் கட்டிக் கொண்டார். எமன் பாசக்கயிறை வீசினார், பாசக்கயிறு மார்க்கண்டேயர் மீது மட்டுமே விழாமல் லிங்க உருவில் இருந்த அமிர்தகடேசுவரரையும் சேர்த்து சுருக்குப்போட்டு இழுத்தது.  [ இந்த சமயத்தில் மார்கண்டேயர் , சிவப்பரம்பொருளை வேண்டி  '' சந்திரசேகர அஷ்டகம் '' பாடினார்.எமபயம் போக்கும் அற்புத பாடலாக '' சந்திரசேகர அஷ்டகம் ''  விளங்குகிறது ]

சிவபெருமான் கோபம் கொண்டு காலனை எட்டி உதைத்து சூலாயுதத்தால் சம்காரம் செய்துவிட்டார்.

மார்க்கண்டயருக்கு,”நீ என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாய் இரு,'' என்று அருளினார். காலன் சம்காரம் செய்யப்பட்டு விட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது. பூமிதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை, தேவி ஈசனிடம் முறையிட, கோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார். சிவன் எமதர்மனின் உயிரை எடுத்ததும், திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில்தான். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார்.

இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி, இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன், ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும், மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர். சாதாரணமாக காலசம்ஹாரமூர்த்தியை தரிசிக்கும்போது, எமனை பார்க்கமுடியாது. பூஜை செய்யும்போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். 

அதாவது எமன் இல்லாமல் சுவாமி, கையில் சூலத்துடன் காட்சி தருவதை "சம்ஹார கோலம்' என்றும், எமனுடன் இருப்பதை "உயிர்ப்பித்த கோலம்' என்றும் சொல்கிறார்கள்.ஒரே சமயத்தில் "சம்ஹார' மற்றும் "அனுக்கிர மூர்த்தியை' தரிசிக்கலாம். இச்சன்னதியிலுள்ள பாலாம்பிகை அருகில் லட்சுமி, சரஸ்வதியுடன் காட்சி தருகிறாள். 

சந்திரசேகர அஷ்டகம் (மார்க்கண்டேயர் இயற்றியது)

‍‍‍‍‍‍===============================================

1.'' ரத்ன ஸானுசராஸன ரஜதாத்ரிஸ்ருங்க நிகேதனம்

ஸிஞ்ஜினீக்ருத பந்நகேஸ்வர(ம் அ)ச்யுதானன ஸாயகம் 

க்ஷிப்ரதக்த புரத்ரயம் த்ரிதிவாலயரபி வந்திதம்

சந்திரசேகரமாஸ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:''


(ரத்தின மலையை வில்லாக வளைத்தவரும்,வெள்ளிப் பனிமலையில் உறைபவரும், வாசுகி என்ற பாம்பினை நாண் ஆக்கியவரும், மஹா 

விஷ்ணுவை அம்பாக்கி முப்புரங்களை அழித்தவரையும், முவ்வுலகமும் வணங்குபவரும் ஆகிய மதிசூடியவரை அல்லவா நான் 

வணங்குகிறேன். யமனே! உன்னால் என்ன செய்ய முடியும் என்னை!?)


2.'' பஞ்சபாதப புஷ்பதக்த பதாம்புஜத்வய சோபிதம்

பாலலோசன ஜாதபாவக த‌க்தமன்மத விக்ரஹம்

பஸ்மதிக்த கலேபரம் பவநாசனம் பவமவ்யயம்

சந்திரசேகரமாஸ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:''


(ஐந்து கல்பக மரங்களின் நறுமண மிகுந்த மலர்களால் பூசிக்கப்படும் கமல பாதங்களை உடையவரும்,மன்மதனின் உடலை நெற்றிக்கண்ணின் 

நெருப்பால் சுட்டெரித்தவரும்,உடல் முழுவதும் சாம்பலைப் பூசியவ‌ரும், வாழ்க்கைத் துன்பங்களை அழிப்பவரும், அழியாத் தன்மையைக் 

கொண்டவரும் ஆகிய மதிசூடியவரை அல்லவா நான் வணங்குகிறேன். யமனே! உன்னால் என்ன செய்ய முடியும் என்னை!?)


3.'' மத்தவாரண முக்யசர்ம க்ருதோத்தரீய மனோஹரம்

பங்கஜாஸன பத்மலோசன பூஜிதாங்க்ரி ஸரோருஹம்

தேவஸிந்து தரங்கசீகர ஸிக்தசுப்ர ஜடாதரம்

சந்திரசேகரமாஸ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:''


(மதயானையின் தோலை ஆடையாகப் போர்த்தி மனங்கவரும் தோற்றம் அளிப்பவரும், மாலும் நான்முகனும் பூசிக்கும் தாமரைப் பாதம் 

கொண்ட வரும்,புனித கங்கையின் நன்னீர் சொட்டும் சடையுடையவரும் ஆகிய மதிசூடியவரை அல்லவா நான் வணங்குகிறேன்.யமனே! உன்னால் 

என்ன செய்ய முடியும் என்னை!?)


4.'' யக்ஷராஜஸகம் பகாக்ஷஹ‌ரம் புஜங்க விபூஷணம்

சைலராஜஸுதாபரிஷ்க்ருத சாருவாம கலேபரம்

க்ஷ்வேல நீலகலம் பரச்வததாரிணம் ம்ருகதாரிணம்

சந்திரசேகரமாஸ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:''


(குபேரனின் நண்பரும், பகன் என்ற அசுரனை அழித்தவரும்,சர்பத்தை ஆபரணமாக அணிந்தவரும்,இமவான் ஆகிய மலை அரசனின் மகளை 

இடப் பாகத்தில் கொண்டவரும், கழுத்தில் விஷ நீல நிறம் உடையவரும், மானையும் மழுவையும் தரித்தவ‌ரும் ஆகிய மதிசூடியவரை அல்லவா 

நான் வணங்குகிறேன்.யமனே! உன்னால் என்ன செய்ய முடியும் என்னை!?)


5.'' குண்டலீக்ருத குண்டலேஸ்வர குண்டலம் வ்ருஷவாஹனம்

நாரதாதி முனீஸ்வரஸ்துத வைபவம் புவனேஸ்வரம்

அந்தகாந்தக மாஸ்ரிதாமர பாதபம் சமனாந்தகம்

சந்திரசேகரமாஸ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:''


(காதில் குண்டலங்களாகப் பாம்புகளை அணிந்தவரும்,நாரதரைப் போன்ற‌ முனிபுங்கவர்களால் வணங்கப்படுபவரும்,அகில பிரபஞ்ச நாயகரும், அந்தகாசுரன் என்ற அசுரனை அழித்தவரும், காலனை அழித்தவரும் ஆகிய மதிசூடியவரை அல்லவா நான் வணங்குகிறேன்.யமனே! 

உன்னால் என்ன செய்ய முடியும் என்னை!?)


6.'' பேஷஜம் பவரோகிணாம் அகிலாபதா மபஹாரிணம்

தக்ஷ யஞவிநாசனம் த்ரிகுணாத்ம‌கம் த்ரிவிலோசனம்

புக்திமுக்தி பலப்ரதம் ஸகலாகஸங்க நிபர்ஹணம்

சந்திரசேகரமாஸ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:''


(வாழ்வின் அனைத்து நோய்களையும் குணப்படுத்துபவ‌ரும்,எல்லா ஆபத்துக்களிலிருந்தும் காப்பவரும், தக்ஷ‌னின் கேடான யக்ஞத்தை 

அழித்தவரும், முக்குணங்களும் ஒருசேர உடையவரும், முக்கண்கள் உடையவரும்,புத்தி,பக்தி,முக்தி அளிப்பவரும்,எல்லா பாவங்களையும் 

போக்குபவரும் ஆகிய மதிசூடியவரை அல்லவா நான் வணங்குகிறேன். யமனே! உன்னால் என்ன செய்ய முடியும் என்னை!?)


7.'' பக்தவத்ஸல மர்சிதம் நிதி மக்ஷயம் ஹரிதம்பரம்

ஸர்வபூதபதிம் பராத்பர மப்ரமேய மனுத்தமம்

ஸோம வாரி நபோ ஸூதாசன ஸோமபானிலகா க்ருதிம்

சந்திரசேகரமாஸ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:''


(பக்தர்களுக்குப் பிரியமானவரும்,வற்றாத செல்வம் உடையவரும்,திசைகளை ஆடையாய் அணிந்தவரும்,எல்லா உயிரினங்களின் நாயகரும், அடைய முடியாத கடவுளையும் தாண்டி இருப்பவரையும், யாருக்கும் விளங்காதவரை யும்,புனிதமானவற்றுக்கெல்லாம் புனிதமானவரையும்,சந்திரன்,சூரியன்,நீர், பூமி,தீ,காற்று வெளி ஆகியவற்றால் வணங்கப்படுபவரும் ஆகிய மதிசூடியவரை அல்லவா நான் வணங்குகிறேன்.யமனே! உன்னால் என்ன செய்ய முடியும் என்னை!?)


8.'' விஸ்வஸ்ருஷ்டி விதாயினம் புனரேவ பாலன தத்பரம்

ஸம்ஹரந்தபி ப்ரபஞ்ச மசேஷலோக நிவாஸினம்

க்ரிடயந்த மஹர்நிசம் கணநாதயூத ஸமன்விதம்

சந்திரசேகரமாஸ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:''

(இந்த ப்ரபஞ்சத்தை உருவாக்குபவரும், காப்பவரும் தக்க காலத்தில் அழிப்பவரும்,எல்லா உயிரினங்களிலும் வாழ்பவரும்,எல்லா 

உயிர்களோடும் பகலிலும் இரவிலும் ஆடிக் களிப்பவரும் தலைவராக இருந்தும் சமபாவத்துடன் அனைவரிடமும் பழகுபவரும் ஆகிய 

மதிசூடியவரை அல்லவா நான் வணங்குகிறேன்.யமனே! உன்னால் என்ன செய்ய முடியும் என்னை!?)

இப்பாடலை வாசிப்பதனால் ஏற்படும் பலன் என்ன? மிருகண்டு முனிவ‌ரின் குமாரரால் இயற்றப்பட்ட இந்தப் பாடலைப் பாராயணம் செய்தால், யமபயம் நீங்கும், ஆரோக்கிய வாழ்வு ஏற்படும்,தன தானிய நிறைவு உண்டாகும், இறுதியில் மதிசூடியார் முக்தியும் அளிப்பார்திருச்சிற்றம்பலம் !


                                                    இந்தினிளம்பிறை…..


                                      இந்தினிளம்பிறை சூடிய சிவனை

                                      சந்திரசேகரனின் பாதம் பணிந்தவனை


                                      சந்ததமவனையே துதித்திடுமெந்தனை

                                      அந்தகனே உன்னால் என்ன செய்ய இயலும்

                                                                                                             

                                      மேருவை வில்லாக்கி வளைத்த சிவனை

                                      பாருலகோர் புகழ் கயிலாயவாசனை

                                      வாசுகியை நாணாக்கிக் கேசவனை அம்பாக்கி

                                      முப்புரமெரித்தவனை மகாதேவனை


                                      அஞ்சு வித நறுமண மலர்தூவித் துதித்திடும்  

                                      பஞ்சாட்சரனை சாம்பலை ப்பூசிய

                                      செஞ்சடாதரனைக் காமனையெரித்தவனை

                                      நஞ்சுண்ட கண்டனை பவ பயம் களைபவனை


                                      அங்கம் தனில் அழகுடன் கரித்தோல் போர்த்திய

                                      கங்கை நீர் பெருகும் செஞ்சடாதரனை 

                                      பங்கய நாபனும் பங்கயாசனனும் துதிக்கும்

                                      பங்கயப் பாதம் கொண்ட கங்காதரனை

                                       

                                      பொங்கரவணிந்தவனைக் குபேரன் நேசனை

                                      பகனையழித்த  விட முண்ட கண்டனை 

                                      மங்கை மலைமகளை இடம் கொண்ட ஈசனை

                                      செங்கையில் மான் மழுவேந்திய சங்கரனை


                                      காதணிகளாகப் பாம்பணிந்தவனை

                                      பாதகனந்தகாசுரனையழித்தவனை

                                      பூதலம் போற்றும் காலகாலனை

                                     சாதித்த புண்ணியரும் நாரதரும் பணிபவனை

                                     

                                     பவ வினை நோய்களனைத்தையும் களைபவனை

                                     உவகையுடன் தட்சன் வேள்வியை அழித்தவனை

                                     முக்குணமுடைய முக்கண்ணனை 

                                     பக்தி செய்பவர்க்கு முக்தியளிப்பவனை


                                     புனிதனைப் புண்ணியனை பூதநாதனை

                                     திசைகளையணிந்தவனை தனங்களுக்கதிபதியை

                                     உயிர்களுக்குயிரான சர்வேச்வரனை

                                     புரியாத புதிரான பக்தர்களின் நேசனை

                                     

                                     படைத்தும் காத்துமழித்தும் பராமரிக்கும்

                                     விடை வாகனனை பக்தவத்சலனை

                                     சடையனை சாது ஜனங்களின் ரட்சகனை

                                     கடைக்கண்ணருள் தந்தெனைக் காப்பவனை                                  

                                     

                                     

                                                                                         

                                      

                                     

                                                   

                                                                                                        

                                                                     

No comments:

Post a Comment