பக்தியும் சரணாகதியும்
ஆலயங்களில் நாம் பக்தியோடு வழிபாடு செய்கிறோம் ,ஆண்டவனை நினைக்கிறோம். ஆனால் எந்தவித பக்தியோடு வழிபாடு செய்கிறோம் என்பது தான் முக்கியம். நம் வேண்டுதலை நிறைவேற்ற கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம். நிறைவேறினால் காணிக்கை தருகிறோம் இன்னும் நேர்த்திக்கடன் பண்ணுகிறோம் என்று வேண்டிக்கொள்கிறோம். இதுபோல வேண்டுதல்கள்/ பக்தி கடவுளிடம் நாம் செய்யும் வியாபர ஒப்பந்தம். கடவுள் எதையும் நம்மிடம் எதிர்பார்த்து இருப்பதில்லை. அவர் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்பவர். கடவுளிடம் பரிபூரணமாக சரணாகதி அடைவது தான் உண்மையான பக்தி.கடவுளிடம் எதையும் எதிர்பார்த்து கேட்கத்தேவையில்லை. அவராகவே செய்வார். கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு, சரணாகதி மட்டும் தான். குழந்தை உள்ளத்தோடு கடவுளிடம் நம்மை ஒப்படைத்தால் கருணை கொண்டு வாழ்க்கை பாதையை கடப்பதற்கு உதவி செய்வார். எவ்வித பலன் கருதாமல், தங்களை உடல் அளவிலும், ஆன்ம அளவிலும் முழுவதுமாக, பரம்பொருளிடம் ஒப்புவிக்கும் ஒரு வகையான பக்தியாகும், சரணாகதி தத்துவம். இறைவனருள் பெறவும் இறைவனோடு சேரவும் சுலபமான வழி பக்தி மார்க்கமே.பக்தி முத்தினால் சரணாகதி. அதன்றி சரணாகதிக்குத் தனி வழியென்று ஏதுமில்லை. ஆழ்வார்களும் நாயன்மார்களும் மற்றும் பல அடியார்களும் இதையே வலியுறுத்தி உள்ளனர். மனம், வாக்கு, காயம் இவை மூன்றாலும் இறைவனுக்குத் தொண்டு செய்வதே சரணாகதியாகும். வாக்கினால் இறைவன் புகழ் பாட வேண்டும், இறை நாமாக்களைத் தோத்திரம் செய்ய வேண்டும். செவி எப்போதும் ஈச்வர நாமத்தை,ஈச்வரன் புகழை,ஈச்வரனுடைய கல்யாண குணங்களைக் கேட்க வேண்டும். மனதில் எப்போது இறைவனையே நினைக்க வேண்டும். முப்போதும் எப்போதும் அனுதினமும் கடவுள் சிந்தனையாகவே இருக்க வேண்டும்.கடவுளுக்குப் படைத்ததை பிரசாதமாக ஏற்றுக் கொள்கிறோம். அப்படி நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஈச்வரார்ப்பணமாகச் செய்து பழக வேண்டும். தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும் போகப் போகப் பழகிவிடும். இதையேதான் கேசவன் கீதையில் “ கர்மண்யேவ அதிகாரஸ் தே, மா பலேஷு கதாசந'என்று கூறுகிறார். இப்படி பலன் மேல் புத்தி செல்லாமல் கர்மாவைச் செய்து கொண்டிருந்தால் சரணாகதி தானாவே அமைந்துவிடம். ஆம், சொல்வது எளிது நிறைவேற்றுவது கடினம். கீதையிலும் கண்ண பெருமான் ஸர்வதர்மாநு பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜமி அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:மிமி “ எல்லாத் தர்மங்களையும் அறவே விட்டு என்னையே சரணடைவாய். பாவங்கள் அனைத்தினின்றும் உன்னை நான் விடுவிப்பேன். வருந்தாதே''என்று பார்த்தனுக்கு உபதேசிக்கிறார். ஆக முழு அர்ப்பணிப்போடு அவன் பாதமே கதியென்று பலனெதுவும் வேண்டாமல் சரணடைவதே உண்மையான பக்தி மெய்யான சரணாகதி. அப்படிச் சரணடைவோரை இறைவன் ஒருபோதும் கை விடுவதில்லை. “ நாராயண,நாராயண,நாராயண.
No comments:
Post a Comment