Monday, 21 March 2022

நங்கையே

 மார்ச் 22: உலக தண்ணீர் தினம்:

ஆன்மிக அமுதம்:  தண்ணீரும் தெய்வீகமும்*   திருப்பூர் கிருஷ்ணன்*

  'தண்ணீர் தெய்வீகமானது. மனிதர் செய்த பாவங்களைப் போக்கக் கூடிய ஆற்றல் புனித நீருக்கு உண்டு என்பது நம் நம்பிக்கை. 

  மகாமகம் கும்பமேளா போன்ற நாட்களில் குறிப்பிட்ட நீர் நிலைகளில் நீராடுவது பாவத்தை நீக்கும் என்று நாம் நம்புகிறோம். 

 அர்க்கியம் விடுவது என்றொரு சடங்கு பல பூஜைகளில் உண்டு. அர்க்கியம் விடுவதென்பது நீரை அர்ப்பணிப்பதுதான். 

கலசங்களில் தண்ணீரை வைத்து மந்திர ஜபம் செய்கிறார்கள். அப்போது அந்த நீர் மந்திர சக்தி ஏறிப் புனிதமடைகிறது. கும்பாபிஷேகத்தின் போது அந்தப் புனித நீரால்தான் கோயில் கோபுரத்தின் மேலிருக்கும் கும்பத்தை அபிஷேகம் செய்கிறார்கள்.     மந்திர சக்தியைத் தன்னில் ஏற்றிக் கொள்ளும் ஆற்றல் தண்ணீருக்கு உண்டு,   ஸ்ரீஅரவிந்தரின் தம்பி பரீன்  கடுமையாக நோய்வாய்ப் பட்டிருந்தார். பிழைப்பது கடினம் என்கிற நிலை. அப்போது தற்செயலாக அங்கு வந்தார் ஒரு நாக சன்னியாசி.    நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர் அரவிந்தரிடம் உடனே ஒரு கோப்பை நீர் கொண்டுவரச் சொன்னார். கொண்டுவரப் பட்ட நீரில் மந்திர ஜபம் செய்து தம்மிடமிருந்த கத்தியால் குறுக்காக ஒரு கோடிழுத்தார். பின் அந்தத் தண்ணீரை நோய்வாய்ப் பட்டவருக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.  என்ன ஆச்சரியம்..அதை அருந்திய  மறுகணமே பளிச்சென்று எழுந்து உட்கார்ந்து விட்டார் பரீன். அவர் உடல் பூரண குணமடைந்து விட்டது.     ஸ்ரீஅரவிந்தருக்கு நம் ஆன்மிகத்தின் மேல் முழுமையான நம்பிக்கை வந்ததும் மந்திரங்களின் சக்தியின்மேல் ஈடுபாடு வந்ததும் அப்போதுதான். அதன்பின்தான் அவர் ஆன்மிகத்தையே தம் வாழ்வாக மாற்றிக் கொண்டார்.   மந்திர சக்தி நீரில் இறங்குகிறது என்பது சரி. ஆனால் பொதுவாக நாம் மனத்தில் மந்திர ஜபம் செய்யும்போது என்ன நேர்கிறது?     அப்போதும் மந்திர சக்தி நீரில்தான் இறங்குகிறது. நம் உடலில் உள்ள குருதி முழுவதும் திரவம் தானே? நீரால் ஆனதுதானே குருதி?  மந்திர சக்தி நம் ரத்தத்தில் இறங்குகிறது. அந்த வகையில் உடல் முழுவதுமே மந்திர சக்தி கொண்டதாய் மாறிவிடுகிறது.    புனிதம் நிறைந்த நீரைத் தன்னிடம் கொண்டது கங்கை நதி. எல்லோரின் பாவங்களையும் போக்கக் கூடிய தன்மை கங்கைக்கு உண்டு.    பகீரதன் தவம் செய்து ஆகாயத்திலிருந்து கங்கையை பூமிக்குக் கொண்டுவந்தான். கங்கையின் ஆக்ரோஷத்தோடு கூடிய  வெள்ளப் பெருக்கு பூமியையே தகர்த்துவிடக் கூடாதே? எனவே சிவன் கங்கையைத்  தலையில் தாங்கி ஜடாமகுடத்தின் வழியே மெல்ல மெல்ல பூமியில் பாயச் செய்தார்.    இந்தச் சம்பவத்தை காளமேகப் புலவர் ஒரு வெண்பாவில் பதிவு செய்திருக்கிறார்.  `குடத்திலே கங்கையடங் கும்` என்று அவருக்கு வெண்பாவுக்கான ஈற்றடி தரப்பட்டது. அந்த ஈற்றடியில் அவர் எழுதிய வெண்பா இதோ:

 `விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல் 

  மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை 

  இடத்திலே வைத்த இறைவர்  ஜடாம 

  குடத்திலே கங்கையடங் கும்` 

   சிவன் தலையில் கங்கை இருப்பதை மையமாக வைத்து துறையூர் சிவப் பிரகாச சுவாமிகள் ஒரு நயமான கற்பனையைத் தம் பாடலில் எழுதியிருக்கிறார்.    சிவனுக்கும் பார்வதிக்கும் ஊடல். பார்வதி சமாதானத்திற்கு வரத் தயாராயில்லை. பார்த்தார் சிவபெருமான். ஊடலில் மனைவி காலில் கூடக் கணவன் விழலாம் என்ற மரபு உண்டு. எனவே பார்வதி காலில் விழுந்து தன்னை மன்னித்து ஊடலை விட்டு சமாதானம் அடையுமாறு வேண்டினார்.    சிவன் தன் காலில் விழுந்தது பற்றி பார்வதி அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாளாம். உண்மையில் அவள் மகிழ்ச்சி அடையக் காரணம் சிவன் காலில் விழுந்ததால் அல்ல. சிவன் காலில் விழுந்தபோது சிவன் தலையில் உள்ள கங்கையான பார்வதியின் சக்களத்தியும் அவள் காலில் விழ நேர்ந்ததல்லவா? அதற்குத்தான் மகிழ்ச்சியாம்.   கங்கை நீர் பாவத்தைப் போக்கும் என்கிறோமே? அது கங்கை சார்ந்ததா? இல்லை நம் நம்பிக்கை சார்ந்ததா? இதை விளக்கும் அழகான கதை ஒன்று உண்டு.    மனிதர்கள் கங்கையின் பாவத்தைப் போக்கும் இயல்பைச் சரிவரப் புரிந்து கொண்டிருக்கிறார்களா எனச் சோதிக்க சிவனும் பார்வதியும் முடிவு செய்தார்கள். அவர்கள் கிழவனும் கிழவியுமாக உருமாறி  காசியில் கங்கைக் கரையில் வந்து அமர்ந்துகொண்டார்கள், கிழவி மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டார் கிழவர். அவர் உடல் கிடுகிடுவென நடுங்கி ஆடத் தொடங்கியது. ஆடுபவர் தானே அவர்?  உடலும் ஆட்டம் காட்டியது.  அவ்வழியாகப் போனவர்கள் எல்லோரும் கிழவர் உடலில் ஏன் இந்த நடுக்கம் என்று கேட்டார்கள். கிழவி சொன்னாள்:   `யாராவது இவரைத் தொட்டு நிமிர்த்தி உட்கார வைத்தால் இவர் உடலின் நடுக்கம் நின்றுவிடும்` உடனே பலர் அப்படி உட்கார வைக்க முன்வந்தார்கள். அவர்களைத் தடுத்த கிழவி மேலும் சொல்லலானாள்:   `பாவமே செய்யாதவர்கள் இவரைத் தொட்டால்தான் இவர் நடுக்கம் நிற்கும், ஏதேனும் ஒரு பாவம் செய்திருந்தாலும் கூட அவர்கள் இவரைத் தொட்டால் இந்த நடுக்கம் தொட்டவர்களை ஒட்டிக் கொள்ளும். பிறகு அவர்கள் நடுங்கத் தொடங்கி விடுவார்கள்`   இதைக் கேட்டதும் கிழவரைத் தொட்டு நிமிர்த்தி உட்கார வைக்கும் எண்ணத்தை எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள். காரணம் எந்தப் பாவமுமே செய்யாதவர்கள் யார்தான் இருப்பார்கள்?   அப்போது அங்கே வந்தான் ஒரு விறகு வெட்டி. விஷயத்தை அறிந்த அவன்  `ஒரு நிமிடம் இருங்கள். இதோ வருகிறேன்` என்றான். ஓடிப்போய் கங்கையில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு வந்தான்.   `நான் கங்கையில் குளித்துவிட்டு வந்துவிட்டேன். எனவே நான் இதுவரை செய்த பாவமெல்லாம் தொலைந்தது. இப்போது நான் பாவமே இல்லாதவன்` என்று சொல்லிக் கிழவரை உட்கார வைத்தான்.  கிழவரும் கிழவியும் பரமசிவனும் பார்வதியுமாக அந்த விறகுவெட்டிக்குக் காட்சி தந்து `நம்பிக்கை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்` என அவனை ஆசீர்வதித்துவிட்டு மறைந்தார்களாம்.    எனவே கங்கை நீரின் பாவத்தைப் போக்கும் தன்மை கங்கையைச் சார்ந்தது மட்டுமல்ல, நம் நம்பிக்கையையும் சார்ந்தது, ஆன்மிகம் என்பதே நம்பிக்கை சார்ந்த உளவியல் விஞ்ஞானம்தான். சந்தேகமில்லாத ஆழ்ந்த நம்பிக்கை பல அற்புதங்களை நிகழ்த்தக் கூடியது.  ஷிர்டி பாபா தம் மசூதியில் விளக்கேற்ற அங்குள்ள எண்ணெய் வியாபாரிகளிடம் எண்ணெய் பெறுவது வழக்கம். ஒருநாள் வியாபாரிகள் ஒன்றுகூடி இவருக்கு ஏன்  இலவசமாக எண்ணெய் தரவேண்டும் என யோசித்தார்கள். ஒரு முடிவெடுத்தார்கள்.    அன்று பாபா வந்து எண்ணெய் கேட்டபோது யாருமே எண்ணெய் தரவில்லை. பாபா நகைத்தவாறே மசூதியை நோக்கி நடந்தார். அவர் விளக்கேற்ற முடியாமல் தவிக்கப் போவதைப் பார்க்கும் எண்ணத்தில் வியாபாரிகள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.   மசூதிக்குச் சென்ற பாபா கிணற்றிலிருந்து நீர் இறைத்தார். எல்லா விளக்குகளிலும் எண்ணெய்க்கு பதிலாக தண்ணீரை விட்டார். பிறகு திரியிட்டு விளக்கேற்றினார். விளக்கு வழக்கம்போல் பிரகாசமாக எரியத் தொடங்கியது.   நீரால் விளக்கெரிந்த அதிசயத்தைப் பார்த்த வியாபாரிகள் வெலவெலத்துப் போனார்கள், ஓடோடிச் சென்று பாபா காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்கள்.    பாபா வாழ்வில் நிகழ்ந்ததைப் போன்ற ஒரு சம்பவம் வள்ளலார் வாழ்விலும் வருகிறது. இரவு நேரத்தில் திருஅருட்பாப் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் வள்ளலார். விளக்கில் எண்ணெய் தீர்ந்து போனதும் எண்ணெய் என நினைத்துத் தண்ணீரை விளக்கில் ஊற்றினார். தண்ணீரை எண்ணெயாக ஏற்றுக் கொண்டு விளக்கு தொடர்ந்து எரிந்ததுதான் ஆச்சரியம்.   ராமாயணத்தில் கங்கை நதியின் பெருமை பேசப்படுகிறது. குகன் இயக்கிய ஓடத்தில் ராமனோடும் லட்சுமணனோடும் சீதை கங்கையின் இக்கரையிலிருந்து அக்கரைக்குப் பயணம் செய்தாள். அப்போது மலர்களைச் சொரிந்து இருகரம் கூப்பி கங்கா மாதாவை சீதை வழிபட்ட செய்தி ராமாயணத்தில் இடம்பெற்றுள்ளது. மகாபாரதத்திலும் கங்கை வருகிறது, நதியான கங்கை மனித வடிவெடுத்து வருகிறாள். சந்தனு மகாராஜாவைத் திருமணம் செய்து கொள்கிறாள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைதான் மகாபாரதத்தின் முக்கியமான பாத்திரமான பீஷ்மர்.   முருகனைக் கங்கையின் மைந்தன் என்று கூறுவதுண்டு, சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தெறித்த ஆறு நெருப்புப் பொறிகளிலிருந்து தோன்றியவன் முருகன்.  அந்த ஆறு நெருப்புப் பொறிகளைச் சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தது கங்கை நதிதான். அவ்வகையில் முருகன் கங்கைக்கும் மகனாகிறான்.   வைணவத்தில் திருமால் வாமன அவதாரம் எடுத்த புராணம் உண்டு. வாமனன் திருவிக்கிரமனாகப் பேருருவம் கொண்டு ஓர் அடியால் வானை அளந்தார். அப்போது பிரம்மன் ஆகாய கங்கை நீர்கொண்டு திருமாலின் பாதங்களை நீராட்டிப் பூஜித்தார். அதனால் திருமாலின் பாதங்களிலிருந்து தோன்றியவள் கங்கை என்பது வைணவ நம்பிக்கை.    திருவிசநல்லுர் ஸ்ரீதர ஐயாவாள் வரலாற்றில் ஒரு சம்பவம் வருகிறது. சிராத்த தினத்தன்று நீத்தார் கடன் நிகழ்த்துவதற்கும் முன்பாக பசியால் துடித்துக் கொண்டிருந்த ஓர் ஏழைக்கு அன்னமிட்டார் அவர்.   அது சாஸ்திர விரோதம் என்றும் அவர் கங்கையில் குளித்துப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள் ஊர்க்காரர்கள். ஐயாவாள் தன் வீட்டுக் கிணற்றடிக்குச் சென்று உள்ளம் உருகி கங்காஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்தைப் பாடினார். மறுகணம் கிணற்றிலிருந்து கங்கை பொங்கி வீதியெல்லாம் வெள்ளப் பெருக்கெடுத்துப் பாய்ந்தாள்.   ஐயாவாள் மகிமை உணர்ந்து மக்கள் அவர் காலில் விழுந்து வணங்க அவர் இன்னொரு சுலோகம் பாடினார். அதன்பின் தான் வெள்ளப் பெருக்கு நின்றது என்கிறது அவர்  சரிதம்.   தண்ணீர் தெய்வீகமானது. இறைவனைத் தண்ணீரால்தான் அபிஷேகம் செய்கிறோம். துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப் படுகிறது.  தண்ணீரின் தெய்வத் தன்மையை உணர்ந்தால் ஆராதனைக்குரிய தண்ணீரை வீண்செய்ய மனம் வராது.  (நன்றி: மாலை மலர்.)


                                                                 நங்கையே….


                                                                   பல்லவி 

                                                     நங்கையே காமாக்ஷி  மலரடி பணிந்தேன்

                                                     பொங்கரவணிந்தவளே எனக்கருள் புரிவாய்

                                                                அனுபல்லவி 

                                                    திங்களைச் சூடிய அங்கயற்கண்ணி

                                                    பங்கய நாபன் கேசவன் சோதரி

                                                                 சரணம்                                                        

                                                    சங்கரியுந்தன் பிணக்கம் போக்கிட 

                                                    சங்ரன் சிரம் தாழ்த்தி உன் பதம் பணிந்தான்

                                                   கங்கையுமதனாலுன் பாதம் தழுவியதால்

                                                   மங்கை நீ மகிழ்ந்ததை நானுமறிந்தேன்.

                                                    


                                             


No comments:

Post a Comment