என்றுனைக் காண்பேனோ….
பல்லவி
என்றுனைக் காண்பேனோ ஶ்ரீமந் நாராயணா
இன்றே உனைக் காண விழையுதே என் மனம்
அனுபல்லவி
கன்று பசுவையழைப்பது போலுனையழைத்தேன்
நன்றும் தீதும் நானறிந்திலேன் கேசவா
சரணம்
அன்றொரு நாள்ஆதி மூலமே வேதப் பொருளே
என்றழைத்த கஜராஜன் மனம் மகிழக் காட்சி தந்தாய்
மன்றாடி வேண்டிய திரௌபதியின் மானம் காக்க
நின்ற இடத்திருந்தே உனதருளளித்தாய்
இன்றுநீ உனது அனந்த சயனத்தில்
நன்று கிடந்த வாறு அன்னையருகிருக்க
என்றும் போல் தேவரும் மூவரும் முனிவரும்
நின்றுனை வணங்கிடும் கோலத்தில் நானும் …… ( என்றுனைக்…)
சங்கும் சக்கரமும் கதையும் கையிலேந்தி
திங்களும் சூரியனும் கண்களாய் விளங்க
பங்கயநாபனே உன் விராட உருவத்தில்
இங்கெழுந்தருளி காட்சியளித்திட ……. ( என்றுனைக்….)
கரத்தில் கமண்டலமும் ஓலைக்குடையுமேந்தி
சிரத்தில் சிறு சிகையுடனே முகத்தில் புன்னகை தவழ
பரம் பொருளே உன் வாமன வடிவத்தில்
குறளுருவாய் இருக்குமுன் அழகிய தோற்றத்தில்…( என்றுனைக்…)
புல்லாங்குழலேந்தி புன்னகை முகத்தோடு
நல்லதொரு மயில்பீலி கொண்டையிலணிந்து
உல்லாசமாகவே பாமா ருக்மணியோடு
சல்லாபமாய்ப் பேசி நீ நிற்குமழகோடு…..( என்றுனைக்…..)
அரியணையனுமன் தாங்க அங்கதனுடை வாளேந்த
இருபுறமுமிலக்குவனும் தம்பியும் கவரி வீச
பரதன் வெண்குடையேந்த சீதையருகிருக்க
அரியாசனத்தமர்ந்த பட்டாபி ராமனாய்…( என்றுனைக்….)
சிறுவன் பிரகலாதனுக்கருள் தர வேண்டியும்
இரணியனையழித்திடவும் தூணினைப் பிளந்து
நரசிம்மனாய் இப்புவியில் எழுந்தருளி
அரியுருவாய்க் காட்சி தரும் அழகு மூர்த்தியாய்…( என்றுனைக்…)
அன்றொருநாளாயர் குலம் காக்கவென்று
மீனாயாமையாய் பன்றியாய்க் கல்கியாய்
வானளவு புகழ் கொண்ட பரசுராமனுமாக
ஆன பல அவதாரம் மெடுத்த கேசவனே
தானே எனக்கருள ஏதோ ஒரு வடிவத்தில்….( எனழறுனைக்…)
No comments:
Post a Comment