Monday, 7 March 2022

திரு உன்னைச்…..

 #ஸ்ரீமாத்ரே_நம:

< ஸ்ரீ மஹாலக்ஷ்மி கடாக்ஷம்  >> ஆதிலக்ஷ்மி நமஸ்தேஸ்து பரப்ரம்ஹஸ்வரூபிணி

யசோ தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாமச்ச தேஹிமே"

 "ஸ்ரீலக்ஷ்மி" என்ற அம்பிகையின் நாமமே ஸர்வ மங்களங்களும் நிரம்பியது. இவ்வுலகில் லக்ஷ்மி கடாக்ஷத்திற்கு ஏங்காதவர் யார்?. செல்வம் வேண்டுபவரிலிருந்து முற்றும் துறந்த ஞானி வரை அனைவரும் எதிர்பார்ப்பது ஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷமே. செல்வம் விரும்புபவர்க்கு அவளே  சௌபாக்யலக்ஷ்மி. முக்தி வேண்டும் ஞானிகளுக்கோ அவளே மோக்ஷலக்ஷ்மி. ஆக மஹாலக்ஷ்மி கடாக்ஷம் இல்லையெனில் இப்பரபஞ்சம் இயங்காது. அப்பெருமாட்டியின் வைபவத்தை நாராயணனாலும் கூற இயலுமோ?! எனின் இயலாது என்றே கூறலாம்!! ஆம் வேதமும் புருஷ ஸுக்தத்தில் ஸ்ரீவிஷ்ணுவை நமஸ்கரிக்கிறதே அன்றி சரணடையவில்லை. அவ்வேதமே மஹாலக்ஷ்மியையே "தாம் பத்மினீமீம் சரணமஹம் பரபத்யே" என இப்பெருமாட்டியையே சரணமடைகின்றது. ஆம்!! ஸ்ரீ எனும் பதத்திற்கே மங்களம் எனும் பொருள். ஆழ்வாரும் "அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறை மார்பா!!!" என்றே சாதிக்கின்றார்.  அந்த ஸ்ரீ யான மஹாசக்தி பெருமானோடு சேர்ந்தாலே அவன் "ஸ்ரீமந்நாராயணன், ஸ்ரீநிவாஸன்" ஆகின்றான். "திருமால்" என தமிழிலும் அவனை திரு எனும் லக்ஷ்மியோடு சேர்ந்தவனாகவே போற்றுகின்றோம். லக்ஷ்மியான பகவதி இல்லாமல் பரமாத்வால் இயங்கமுடியாது. அவன் பரமாத்மா என இருப்பதற்கு காரணமே ஸ்ரீலக்ஷ்மியோடு சேர்ந்திருப்பதால் மட்டுமே. ஸ்ரீ வைஷ்ணவம் நாராயணனை பரப்ரும்மமாய் கூறுவதும் ஸ்ரீ எனும் லக்ஷ்மியோடு சேர்ந்ததாலேயே. க்ஷேத்ரத்ரயம் எனும் மூன்று வைஷ்ணவ க்ஷேத்ரங்களில் பரப்ரும்மமான மஹாலக்ஷ்மியே ஜ்வலிக்கின்றாள். ஸ்ரீரங்கமதில் "ஸ்ரீரங்கநாயகி" எனவும், திருப்பதியின் கீழ் திருச்சானூரில் "ஸ்ரீபத்மாவதி" எனவும், காஞ்சிபுரத்தில் "ஸ்ரீபெருந்தேவீ" எனவும் எம்பிராட்டி ஜ்வலிக்கின்றாள்.   பரந்தாமன் பத்து அவதாரங்கள் எடுத்த போதும் ஒவ்வொன்றிலும் பிரியாது அவனைத் தொடர்ந்து வந்தவள் எம்பிராட்டி. ஸ்ரீ ராமாவதாரத்தில் "ஜானகி, வைதேகீ, சீதா, மைதிலீ" என தேன் சொட்டும் நாமங்கள் எம்பிராட்டிக்கு. ஸ்ரீக்ருஷ்ணனான போதோ "ருக்மிணீ" என அவனையே பின் தொடர்ந்தனள் இப்பரதேவதை.  பிறப்பிறப்பற்றவளாய் என்றும் பகவானை விட்டு பிரியாதவள், தனது அவ்யாஜமான கருணையாலே பாற்கடலின் பெண்ணாக  பிறந்தாள். "வ்யாஜம்" என்றால் காரணத்தோடு கூடியது. "அவ்யாஜம்" என்றால் காரணம் இல்லாதது. காரணமின்றி கருணையைப் பொழிபவள் இப்பரதேவதை. த்ரிலோகத்திற்கும் இவளே அன்னை.மூவுலகிற்கும் தாயார். நாம் அனைவரும் அவளின் பிள்ளைகள். க்ஷீர ஸமுத்ரம் செய்த அளவற்ற தவத்தின் பயனாக கடலரசனுக்கு பெண் என பிறந்தாள் ஆதிலக்ஷ்மி. இப் பரதேவதையையே சரணமடைவோம்.


                                         திரு உன்னைச்…..


                                                         பல்லவி

                               திரு உன்னைச் சேர்ந்ததனால்  திருமாலே கேசவனே

                               பெருமை உனக்கென்றே உனதடியார் சொல்கின்றார்

                                                       அனுபல்லவி

                               திருவுறை மணிமார்பா அலமேலுமணாளா

                               திருவின் நாயகனென்றே ஆழ்வாரும் அழைக்கின்றார்

                                                           சரணம்

                               அருமறைகளுமே அவளையே சரணடைகிறது           

                               திருச்சேர்ந்ததாலேயே பரமாத்மாவென ஆனாய்

                               ஶ்ரீ மந்நாராயணன் ஶ்ரீநிவாசன் என

                               ஶ்ரீ சேர்ந்ததாலேயே சிறப்படைந்ததுன் நாமம் 

   

                               திருவரங்கம் தனிலே திருவரங்க நாயகியாய்

                               திருச்சானூரில் பத்மாவதி தேவியென்றும்

                               திருக்காஞ்சிபுரத்தில் பெருந்தேவி தாயெனவும்

                               திருமகளழகோடும் புகழோடுமிருக்கின்றாள்


                               அவதாரமீரைந்து நீ எடுத்த போதும்

                               அகலக்கில்லேனென்று அலமேலுமங்கையும்

                               கண்ணுக்கு ருக்மிணியாய் ராமனுக்கு ஜானகியாய்

                               திருபாற்கடலுதித்து எப்போதுமுடனிருந்தாள்

     

                                                                     

   

No comments:

Post a Comment