Sunday, 6 March 2022

“சரணாலயம்”

 


                                          “சரணாலயம்”

                            “சரணாலயம்” முகப்பில் பெயர்ப் பலகை படித்த உடனேயே மனதில் பறவைகள் விலங்குகள் காப்பகம் தான் மனதில் தோன்றி மறைந்தது. கூகிள் ஆண்டவரும் அதை ஆமோதித்தார். சரணாலயங்கள் (Sanctuary) என்பவை விலங்குகள், தாவரங்கள், நிலப்பரப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவமுள்ள பொருட்கள் போன்றவற்றை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ளவை ஆகும். வனத்துறை அலுவலர்களின் அனுமதியின்றி எந்தவொரு விலங்கையும் பிடிக்க, கொல்ல தடை செய்யப்பட்டுள்ள காட்டுப் பகுதி சரணாலயம் எனப்படும். இயற்கையின் பரிணாம வளர்ச்சி சீராக நடைபெற எந்தெந்த உயிரினம், எந்தெந்த இடத்தில் உள்ளதோ அந்தந்த இடத்தில் அவை இயல்பாக வாழ, வளர அனுமதிப்பவை சரணாலயங்கள் ஆகும்.  அடுத்து இன்னொரு விளக்கமும் கூகிள் சொல்கிறது. சரணாலயம் என்ற சொல்லுக்கான தோற்றப் பொருள் யாதெனில், புனித இடம் என்பதாகும். நடைமுறையில் பாதுகாப்பான இடம் என புரிந்துணரப் படுகிறது. அரசியல் தஞ்சம், உயிரினப் புகலிடம், முதியோர் காப்பகம் போன்றவை இதன் அடிப்படையில் தோன்றியவை ஆகும். ஆக இந்தச் சரணாலயம் முதியோர் காப்பகத்தின் பெயராக வைத்திருக்கிறார்கள்.இந்தச் சரணாலயம் பற்றி நண்பர்கள் சிலாகிச்சுப் பேச அதைக் காண வேண்டுமென மனதில் ஆவல் பெருக்கிட்டது. அப்படியான யோசனையில் கிளம்பித்தான் இன்று சரணாலயம் விஜயம். நுழையும் சாலை வழியே மிக மிக ரம்யமாக இருந்தது. சாலையின் இருபுறமும் நிழல் தரும் மரங்கள். சற்று தூரத்தில் இரண்டு பக்கமும் பச்சைப் பசேலென கண்ணுக்குக் குளிர்ச்சியாக பச்சை வயல்வெளிகள். அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்பயிர்கள். செல்லும் சொகுசுக் காரில் சமீபத்தில் சங்கீத கலாநிதி விருது வாங்கிய சஞ்சய் சுப்பிரமணியத்தின் கணீர் குரலில் ஒரு அழகான ஆழ்வார் பாசுரம் ஒலித்துக் கொண்டிருந்தது மனதுக்கு இதமாக. நுழைவாயிலில் ஒரு பெரிய ஆர்ச், அதாவது அரைவட்ட நுழை வாயில், தெரிகிறது. ஆர்ச்சுக்குள் நுழைந்து தார் சாலையில் சென்றால் முதலில் கண்ணில் படுவது பெரிய அடுக்கு மாடிக் கட்டடம். அதுதான் அந்த சரணாலயத்தின் பராமரிப்பை நிர்வகிக்கும் அலுவலகம் இயங்குமிடம். வாசலில் கார் நிறுத்தும் போர்டிகோ. நல்ல  “ஹை ரூப்” சீலிங் உள்ள வரவேற்பறை. பெரிய ஹால். நாலாபுறமும் அமருவதற்கு வசதியாக மெத்தை தைத்த நீள் சாய்விருக்கைகள், அதாங்க சோபா,போடப்பட்டிருந்தது. வரவேற்பறையின் ஒரு புறத்தில் “ஹெல்ப் டெஸ்க்” அதாங்க சேவை மய்யத்தின் உதவி, தகவல்கள் பெற உதவி செய்யப்படுமிடம். நாலாபுறங்களில் அழகழகாகாப் பூத்தொட்டிகளில், வண்ணமயமான ப்ளாஸ்டிக் பூக்கள் சிரிக்கும் செடிகள் வைக்கப்பட்டிருந்தது.வரவேற்பறையின் ஒரு பக்க சுவற்றில் பள பளவென பிராஸ் தகட்டில் பெயர் பலகை அறிவித்தது. நிர்வாக இயக்குனர்கள் திரு.முத்துக்கருப்பன், திருமதி.தெய்வானை முத்துக்கருப்பன். அதன் கீழ் வரிசையாக இன்னும் சில நிர்வாகிகள் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.ஹெல்ப் டெஸ்க்கின் பின்புறம் வண்ண சேலையணிந்த இரு அழகிய யுவதிகளும் ஒரு வாலிபரும் நின்றிருந்தனர். அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு,அங்கு நான் வந்த நோக்கத்தைத் தெரிவித்து, முத்துக்கருப்பன் தம்பதிகளை சந்திக்கும் விருப்பத்தையும் தெரிவித்தேன். முன்னறிவிப்பு, அப்பாயிண்ட்மெண்ட் செய்திருக்கிறீர்களா என்ற அவர்கள் கேள்விக்கு, ஆமென்று பதிலளித்தேன்.




No comments:

Post a Comment