Sunday, 11 February 2024

நீயும் நானும்…….

 


நீயும் நானும்…….


                     பல்லவி


நீயும் நானும் ஒன்றன்றோ  ஶ்ரீராமா

ஆயின் பொருளெதுவும் வேண்டேனென்றான்


                    அனுபல்லவி


நியாயமன்றோ கேசவனேயவன் சொன்னவாக்கு

நேயமுடனேயறிந்து நானுமுனைத் துதித்தேன்

                  

                        சரணம்


தாயினும் மேலான பரிவுடைய ராமனிடம்

தூய அன்போடு ஓடக்காரன் குகன் சொன்னான்

நோயெனும் பவசாகரம் கடக்க நீ உதவுகின்றாய்

பாயும் நதி கடக்க நானுதவி புரிவதனால்

                  ****

ராமர் சீதை லக்ஷ்மணருடன் வனவாசம் மேற்கொள்கிறார். வழியில் ஒரு சிறிய ஆறு..

அங்கிருந்த ஓடக்காரன் ராமனை ஏற்றிக் கொள்ள மட்டும் ஒரு நிபந்தனை விதிக்கிறான்.. 
உன் கால்களை நன்றாக கழுவிய பின்னரே ஓடத்தில் கால் வைக்க வேண்டும்.. என்னிடம் இருப்பது இந்த ஒரே ஒரு ஓடம் தான்.. உன் பாதம் பட்டு அதுவும் பெண்ணாகி விட்டால் என்ன செய்வது..?

சொன்னதோடல்லாமல், அவனே தன் கைகளால் கண்ணீர் மல்க, ராமனுக்கு பாதபூஜை செய்கிறான்...

ஓடம் மறுகரையை அடைந்தவுடன், ராமன் தான் அணிந்திருந்த ஒரு கணையாழியை பரிசளிக்க,
ஓடக்காரனோ அதை மறுத்ததோடு,
ஒரு ஓடக்காரனிடம் இன்னொரு ஓடக்காரன் பரிசில் பெறக் கூடாது என்கிறான்..

கோபமடைந்த லக்ஷ்மணன், என்ன உளறுகிறாய்..?
அவர் ஓடக்காரன் அல்ல, இளவரசர் என்கிறான்..

ஓடக்காரன் கை கூப்பியபடி, அமைதியாகச் சொல்கிறான்.. எனக்கு அவர் இளவரசர் அல்ல..

நான் இந்தச் சிறிய ஆற்றைக் கடக்க உதவும் சின்ன ஓடக்காரன்...
அவர் இந்தப் பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்க வைக்கும் பெரிய ஓடக்காரன்...

ராமன் அவனை அன்போடு ஆலிங்கனம் செய்து கொள்கிறான்..
அவனே குகன்..

No comments:

Post a Comment