Tuesday, 13 February 2024

செஞ்சு லட்சுமியை…..

 செஞ்சு_லட்சுமியை ஆதுரத்துடன் பார்க்கும் சிருங்கார_நரசிம்மர் சிற்பம்..!!


அஹோபிலம் பகுதியில் பல நூற்றாண்டுகளாக வாழும் வனவாசி மக்கள் சமுதாயத்தினர் செஞ்சுக்கள் என்று அழைக்கப் படுகின்றனர். கரிய கட்டுறுதி கொண்ட உடலமைப்பும், கூர்மையான நாசியும், முகவெட்டும் கொண்டவர்கள் இவர்கள். கானகவாசிகளின் இந்தக் கட்டழகில் கடவுளே மயங்கி விட்டார் போலும்.

 செஞ்சுக்களின் குடியில் பிறந்த ஒரு பெண் மீது காதல் கொண்டு நரசிம்மரே இங்கு வந்து அவளை மணம் புரிந்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. அவள் செஞ்சு_லட்சுமி என்ற திருநாமத்துடன் நரசிம்மரின் நாயகியாக அருள்பாலிக்கிறாள்..!!



                                      செஞ்சு லட்சுமியை…..


                                                 பல்லவி

                             செஞ்சு லட்சுமியைக் கொஞ்சுமழகனே

                             கஞ்சனைக் காய்ந்தவனே உனையே துதித்தேன்

                                              அனுபல்லவி

                             வெஞ்சமரில் அரக்கர்களை மாய்த்த கேசவனே

                             நஞ்சுண்ட கண்டன் சிவபெருமான் நேசனே

                                                   சரணம்

                             அஞ்சி உனைப் பணிந்த பாலனுக்கருள் செய்ய

                             பஞ்செனத் தூணினைப் பிளந்து வந்து நீயும்

                             வஞ்சகணிரணியனை மாய்த்த நரசிம்மனே

                             தஞ்சமடைந்த எனக்கருள் புரிவாயே

No comments:

Post a Comment