அபிராமி அந்தாதி 84
உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.
நுண்ணிய......
பல்லவி
நுண்ணிய நூலென சிற்றிடையுடையாளை
தண்மதி பிறையினை சூடிய செஞ்சடையாளை
அனுபல்லவி
வண்ணம் சிவந்த பட்டுடையணிந்தவளை
எண்ணத்தில் வஞ்சம் உடையாரை அடையாளை
சரணம்
கண் மூன்றுடைய எம்பெருமானிடையாளை
திண்ணமுற அனைத்துமே தன்வசமுடையாளை
என்னை இனிப் படையாளைக் கேசவன் சோதரியை
மண்ணிலினிப் பிறவா நிலைபெற வணங்கிடுவீர்
No comments:
Post a Comment