பூமாலை சூடிய…..
பல்லவி
பூமாலை சூடிய கேசவனே உனைப்போற்றிப்
பாமாலை பாடிய எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
மாமாயக் கண்ணனே மதுசூதனனே
நாமமாயிரம் கொண்ட நெடுமாலே கோவிந்தா
சரணம்
பூமகளைத் திருமார்பில் வைத்திருக்கும் திருமாலே
கோமானே கோபியர்கள் கொண்டாடும் சீமானே
ஓமெனும் மந்திரத்தினுட்பொருளானவனே
சாமானியர் வணங்கும் சாது ஜன நேசனே
தாமோதரனே தரணியை ஆள்பவனே
காமனைப் பிரமனைப் படைத்த மாதவனே
ஆமருவியப்பனாய் ஆநிறைகள் மேய்த்தவனே
சாம முதல் மறை போற்றும் தாமரை நாபனே
காமக்ரோதாதி அறுபகைகள் அகலவுன்
நாமமே போற்றித் தாளினைப் பணிந்தேன்
தூமலர் தூவியுன் மலரடி துதித்தேன்
பூமண்டலம் போற்றும் ஶ்ரீமன் நாராயணனே
No comments:
Post a Comment