கற்சிலை என்றாலும் களிமண் என்றாலும் உன் வடிவத்தை
களிப்புடன் செய்து கரையோரம் விளையும் அருகம்புல்லை கொண்டு
கருத்துடன் பூஜை செய்து கனிவகைகள் மோதகம் சக்கரை பொங்கல்
கரும்போடு நைவேத்தியம் செய்யும் அடியாரின் விருப்பங்களை நிறைவேற்றுபவனே
கணநேரமும் உனை மறவாதிருக்கும் மனம் எனக்கு அருளினாய்
கணநேரத்துக்கும் நீ எனை விட்டு பிரியாமல் இருந்து காப்பாற்றுகிறாய்
கண் விழிக்கும் போது அதிகாலையில் பாலவிநாயகா என சொல்லி எழும் மனம் செயல் கொடுத்தாய்
கங்கையை சிகையில் வைத்த சங்கரன் திரிபுரசுந்தரி சங்கரியின் புதல்வனே
கணேசா கதி நீயே என சங்கடஹரசதுர்தியில் உன் சந்நிதியில் நிற்கும் அடியேன்
கலங்காமல் இப்பிறவி முடிவில் உன் பாதங்களில் சேர்ந்திட அருள்வாய்
கஜமுகன், கணபதி,கரிமுகன், கபிலன், கஜகர்ணன், கணாதிபன் என பலபெயர் கொண்டவனே. Prema / Sankara Narayanan
கணநேரமுமுனை…..,..
பல்லவி
கணநேரமுமுனை மறவா மனமருளும்
கணபதியே அனுதினமுனைத் துதித்தேன்
துரிதம்
கணபதி கஜமுகன் கரிமுகன் கபிலன்
கணாதிபன் கஜகர்ணன் கபிலன்
விக்ன விநாயகன் தூமகேதுவென
பலப்பல பெயர் கொண்ட கணநாயகனே
அனுபல்லவி
வணக்கத்திற்குரிய கேசவன் மருகனே
தணலேந்தும் நெற்றிக் கண்ணன் மகனே
சரணம்
கண் விழிக்கும் போதே பாலவிநாயகனே
உன் நாமம் சொல்லும் பாக்கியமளித்தாய்
களிமண்னானாலும் கற்சிலையென்றாலும்
களிப்புடன் அருகம்புல் அருச்சனை புரிந்தேன்
கனிவகை மோதகம் சர்க்கரைப்பொங்கல்
கரும்புடனளித்திடும் பக்தருக்கெல்லாம்
விரும்பும் வரம் தந்து காத்தருள்பவனே
கரிமுகனே எனை நீங்காதிருப்பவனே
கங்கையைத் தாங்கும் கங்காதரனும்
சங்கரியும் விரும்பும் அன்புச்செல்வனே
சங்கடஹர சதுர்த்தி எனும் திருநாளில்
பங்கய பதம் பணிந்தேன் எனக்கருள் புரிவாய்
No comments:
Post a Comment