கஞ்சனூர் அம்பாள் என்ன ஒரு அருளழகு அற்புத வடிவழகு
ஆனந்தம் கோர்த்திடும் அழகு
பார்க்கும் போது மனதை கொள்ளை தான் கொள்கிறாள்.
பிச்சிப் பூ வாசம் இனிய தென்றல் காற்றாய் வருடிட
உச்சித் திலகமது சந்திர பிம்பச் சுடராய் மின்னிட
வழித்துணையாய் வரும் வேலவன் தாயே உந்தன் அழகு
விழிச் சுடரொளியோ கோடி சூர்ய ப்ரகாஸமாய் ஒளிர்ந்திட
பாதச் சிலம்பொலியோ அழகு பண்ணிசை பாடிட
கை வளையோசை வேங்குழலிசையாய் இனித்திட
பின்னலழகோ மனோரஞ்சித வாசமாகி மனோலயம் தந்திட
எழில் கொஞ்சும் கஞ்சனூர் வடிவழகே ஏற்றம் தந்திடும் ஏந்திழையாளே
அஞ்சுக மொழியே அழகு கற்பகத் தாயே
கொஞ்சும் அழகே கொடியிடையாளே கோமேதகமே
வேதநாயகி நீயே ரம்ய ராகஸ்வரூபிணி நீயே
வேண்டும் வரம் தந்திடும் வேதவல்லி தாயே
சாமகானப் ப்ரியே சர்வ மங்களம் தந்தருளும்
சர்வ லோக நாயகியே சரணம் சரணம் தாயே
Kamakshi Muthukrishnan
கஞ்சனூரம்பிகையே……
பல்லவி
கஞ்சனூரம்பிகையே மலர்ப்பதம் பணிந்தேன்
தஞ்சமடைந்தயெனைக் காத்தருள்வாயென
அனுபல்லவி
அஞ்சுகமே அழகே கேசவன் சோதரியே
வெஞ்சமரிலரக்கன் மகிடனை மாய்த்தவளே
சரணம்
கொஞ்சும் மொழி பேசும் தேன்மொழியாளே
அஞ்சம்பும் கரும்பு வில்லுமேந்தும் மலர்க்கரத்தளே
நெஞ்சில் வஞ்சமில்லா கற்பகத் தருவே
மிஞ்சுமெழிலுடைய கொடியிடையாளே
கண்கள் கதிரவனின் ஒளியை மிஞ்சவும்
பெண்ணவளின் திலகம் தண்மதியைப் பழிக்கவும்
விண்ணாளும் வேதநாயகியாய் விளங்கும்
மண்ணுலகோர் புகழும் வேதவல்லியே
வேதமெனும் சாம கானத்தை ரசிப்பவளே
பாதச்சிலம்பொலியில் கீதமிசைப்பவளே
நாதக்குழலோசை கைவளையிலளிப்பவளே
ஏதமிலாதவளே மாதரசே மரகதமே
No comments:
Post a Comment