மும்முலை நாயகியே……
பல்லவி
மும்முலை நாயகியே தடாதகைப்பிராட்டியே
அம்புயபதம் பணிந்தேன் அருள்புரிவாயே
அனுபல்லவி
செம்பொன்னரங்கன் கேசவன் சோதரி
செம்பொன் மேனியன் மனங்கவரீச்வரி
சரணம்
கருவண்டு மொய்க்கும் மலர் சூடி அழகிய
கருங்கடலைப் பழிக்கும் கருங்குழலுடையாளே
கருநிற நிலவென இருவிழியுடையவளே
பிறையணி நுதலாளே மறை போற்றும் மாயே
வலம்புரி சங்கையொத்த கழுத்துடையாளே
செங்காந்தாள் மலரென விரல்களுடையவளே
கோவைச்செவ்வாயில் முத்துப்பல்லுடைவளே
யாழைப்பழிக்கும் தேன்மொழியாளே
பெருநலமுலையாளே வேய்யுறை தோளியளே
இருமுலை பாரம் தாங்காதொடியும் சிற்றிடையாளே
கருநாகப் படத்தையொத்த அல்குலுடையவளே
இளவாழைத் தண்டையொத்த தொடையுடையாளே
காமனின் அம்பராத்துணியாய் கணுக்கால்களிருக்க
மலர்க்கணையாக கால்விரல்கள் திகழ
அதன் மகுடமாக விரல் நகங்கள் விளங்க
பஞ்சினும் மெல்லடியள் பாதங்கள் பணிந்தேன்
No comments:
Post a Comment