பாலூற்றி முழுக்காட்டிய…..
பல்லவி
பாலூற்றி முழுக்காட்டிய தேவி கருமாரியை
மாலவன் கேசவன் சோதரியைத் துதித்தேன்
அனுபல்லவி
வேலனவன் தாயை வேற்காட்டிலிருப்பவளை
ஆலமுண்ட நீலகண்டன் மனங்கவர் நாயகியை
சரணம்
கோலவிழியாளை கோடிவினை தீர்ப்பவளை
ஏலவார் குழலியை ஏகம்பன் மனையாளை
பாலாம்பிகையை பக்தருக்கருள்பவளை
பூலோகம் போற்றும் திரிபுரசுந்தரியை
பாலூட்டி சம்பந்தனைப் பாட வைத்த தாயை
ஆலமுள்ள அரவுதனை அணிந்திருப்பவளை
காலனையும் கலங்கவைக்கும் மாகாளி பைரவியை
ஞாலம்தனைப்படைத்த அகிலாண்டேச்வரியை
Varun Sampath Kumar கருமாரி அன்னையின் இந்த பாலாபிஷேகக் கோலத்தை பகிர்ந்திருந்தார். அழகிய அன்னைக்கு அமுதமாம் பாலபிஷேகம் ஆவதைக் கண்டதும் அவளுக்காக ஒரு பாடல்.
#கருமாரி
பல்லவி
பாலாழிப் படுத்திருக்கும் மாலோனின் சோதரியே
பாரெல்லாம் காத்தருளும் கருமாரியே
அனுபல்லவி
பாலாபிஷேகம் செய்யும் பக்தரெங்கள் துயர்தீர்க்கும்
வேற்காட்டுநாயகியே வித்தகியே
சரணம் 1
பால்குடங்கள் ஏந்தி வந்துன் பாதம் சரண்புகுந்தோம்
பார்வையொன்று பார்த்திடுவாய் பார்வதியே - உயர்
வேம்பாகிப் பாம்பாகி விளையாடும் நாயகியே
வேதனைகள் தீர்த்திடுவாய் வழிகாட்டியே
சரணம் 2
பாலுண்டு இடையனுக்கு கண்ணளித்தாய் - கோ
பாலனுடனே பிறந்து பறந்துவிட்டாய்
பால்தந்து சம்பந்தனைப் பாட வைத்தாய் - உன்
பால் வந்தேன் எந்தனுக்கு வாழ்வளிப்பாய்
No comments:
Post a Comment