ஓமாம்புலியூர்…….
பல்லவி
ஓமாம்புலியூர் சிவனைத் துதித்தேன்
சாம கானந்தனில் மனம் மயங்கிடும்
அனுபல்லவி
காமனின் வைரியை கேசவன் நேசனை
ஓமெனும் மந்திரப் பொருளுக்கு விளக்கம் சொன்ன
சரணம்
அப்பரும் புலிக்கால் முனிவரும் ஞான
சம்பந்தரும் போற்றிப் பாடிப்பரவிய
ஒப்பிலாமணியைப் பூங்கொடியாள் நாதனை
இப்பிரபஞ்சமே போற்றுமீசனை
#ஓமாம்புலியூர்
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசுப் பெருமான் இருவராலும் பாடல் பெற்ற திருத்தலம். காட்டுமன்னார்கோவிலில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்துகள் ஓமாம்புலியூர் கூட்டுரோட்டில் இறக்கிவிடுகின்றன. அங்கிருந்து 2 கிமீ தூர நடை அ ஆட்டோ பயணத்தில் கோவில் உள்ளது.
பிரணவத்தின் பொருளை சக்திதேவிக்கும் முருகனுக்கும் உபதேசித்த தலமாக இருப்பதால் குருஸ்தலமாக உள்ளது. புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர் பூஜித்ததால் வியாக்ரபுரீஸ்வரர் என்றும் பிரணவப் பொருள் உரைத்ததால் பிரணவவ்யாக்ரபுரீஸ்வரர் என்றும் அடியார்கள் இன்னல்களை உடனே களைவதால் துயர்தீர்த்தநாதர் என்றும் இறைவன் வழங்கப்படுகிறார். இறைவன் சந்நிதி துவாரபாலகர்கள் யானை மற்றும் சிங்க வாகனத்துடன் உள்ளனர்.
அம்பிகை பூங்கொடியாள் எ புஷ்பலதாம்பிகை. அவ்வளவு அழகு தனி சந்நிதியில். இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் பொதுவாக நடராஜர் இருக்கும் இடத்தில் இங்கு தக்ஷிணாமூர்த்தி உள்ளார். நல்ல பெரிய அழகிய உருவினர். இவரே உபதேசம் செய்த குருவாக அறியப்படுகிறார்.
நடராஜப்பெருமான் வெளியே கோஷ்டத்தில் விநுயகருக்கும் முன்பாக உள்ளார். புலிக்கால் முனிவருக்கு காட்சி தர விரைந்து வந்துள்ளதாக சொல்கிறார்கள். மிகவும் அழகிய அமைதியான திருக்கோவில். கல்வெட்டுகளும் உள்ளன.
கோஷ்ட சிற்பங்கள் மற்றும் தனி சிற்பங்கள் முக்கியமாக ஒரு அழகிய சாஸ்தாவும் நம்மை கவர்ந்து விடுகின்றனர்.
காட்டுமன்னார் கோவில் பக்கம் செல்பவர்கள் நிச்சயமாக தரிசியுங்கள்.
No comments:
Post a Comment