வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே
- வெங்காயம் என்பதில், காயம் என்பது உடம்பு, எனவே, வெங்காயம் என்பது வெறுமையான காயம், அதாவது, வெறுமையான இந்த உடம்பு,
- சுக்கானால், அதாவது சுக்கைப்போல வாடி வதங்கிப் போனால்,
- வெந்தயத்தால் ஆவதென்ன? வெந்த அயம் என்பது உயிர் தரிப்பதற்காக உண்ணப்படும் அயச் செந்தூரம் என்ற பொருளில் வரலாம் எனக் கூறப்படுகின்றது. எனவே உடம்பு கெட்டுப் போனால் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளும் இந்த அயச் செந்தூரத்தால் என்ன பயன்?
- இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை, அதாவது, அதன் பிறகு யார் இந்த உடலைச் சுமந்து கொண்டு இருக்க விரும்புவார்கள்?
- சீரகத்தைத் தந்தீரேல் என்பதில் சீர் + அகம், அதாவது சிறந்த மனத்தை அல்லது சிறந்த வீட்டை, அல்லது வீடுபேற்றைத் தருவீரேயானால்,
- வேண்டேன் பெருங்காயம், பெருங்காயம் என்பது பெரிய + காயம், அல்லது பெரிய உடம்பு, அதாவது, மீண்டும் மீண்டும் பிறந்து வினையினால் அவதிப்படும் இந்த பெரிய உடம்பைக் கேட்க மாட்டேன்..
பெருங்காயம் வேண்டேன்……
பல்லவி
பெருங்காயம் வேண்டேன் பெருமாளே கேசவனே
சீரகமே போதுமிப்பாரில் உனதருளால்
அனுபல்லவி
கருங்காயம் கொண்டவனே கண்ணபெருமானே
சுருங்கிச் சுக்காகும் காயத்தாலென்ன பயன்
சரணம்
கரும்பு வில்லேந்தும் மதனைப் படைத்தவனே
விரும்பித் திருமகளை மார்பில் சுமப்பவனே
வருந்தித் துதிப்பவரின் இருவினைப் பயன் நீக்கும்
திருமாலே வேங்கடவா திருப்பாதம் பணிந்தேன்
No comments:
Post a Comment