Saturday, 24 June 2023

நாராயணாவெனும்…….

 பெரிய திருமொழியின் 1ம் பத்து வாடினேன் பதிகத்தின் 10ம் பாசுரம்


மஞ்சுலாஞ்சோலை வண்டறை மாநீர்
மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை
இவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்
துயரிலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு
நாராயணா என்னும் நாமம்.10
 
மேகங்களானவை மென்மையாக உலவுகின்ற சோலைகளையும்,வண்டுகள் சதா ரீங்காரம் செய்கின்றதான நீர் வளப்பத்தினையும்,நில வளங்களையும் கொண்டதான திருமங்கை என்கின்ற நாட்டின் மன்னனும்,ஒளி வீசிப் பளபளக்கின்ற பெரிய வாளினை தன் கையில் ஏந்தியவருமான திருமங்கையாழ்வாரால் அருளிச் செய்யப் பெற்றதான சிறந்த சொற்களால் தொடுக்கப் பெற்றதான இந்த அழகிய மாலையினை தொண்டர்காள் நீங்கள் உங்கள் நாவினில் கொண்டு வாழும் காலத்திலும்,வாழ்நாளில் துயர் வருகின்ற சமயத்திலும்,வாழ்நாளானது முடிகின்ற சமயத்திலும் எக்காலத்திலும் நாராயணா என்று சொல்லுங்கள்,அது நஞ்சு போன்று நம்மைக் கொல்கின்ற வினைகள் அனைத்தையும் அழித்தொழித்துவிடும் என்று அருளிச் செய்கிறார்.



                                                                நாராயணாவெனும்…….


                                                                     பல்லவி

                                                     நாராயணாவெனும் திவ்ய நாமத்தையென்றும்
                                                     பாராயணம் செய்வோமனுதினமும் நாமே

                                                                    அனுபல்லவி

                                                     தீராவினையென்னும் நஞ்சுதனையழிக்கும்
                                                     ஆராவமுதன் கேசவன் அவனது

                                                                       சரணம்

                                                     வான்மேகம் உலவுகின்ற பூஞ்சோலைகளையும்
                                                     தேன் சுமந்த மலர்மீது மொய்க்கின்ற வண்டினையும்
                                                     தான் கொண்ட அழகிய திருமங்கை நாட்டின் 
                                                     கோன் செய்த பாமலை புகழ்ந்தேத்துமந்த
                                                       

No comments:

Post a Comment