முருகனின் பலவித…..
பல்லவி
முருகனின் பலவித கோலங்கள் கண்டு
அருள் பெற வேண்டி அனைவரும் துதிப்போம்
அனுபல்லவி
பெருமைகள் நிறைந்த தமிழ் க்கடவுளவன்
கருணை மிகுந்தவன் சிவனுமை பாலன்
சரணம்
ஞானசக்திதரனை துதித்தால்
நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்
ஆனைமுக சோதரன் கேசவன் மருகன்
திருத்தணிகை வளர் தணிகாசலன்
ஞானபண்டிதன் கந்தசாமியைத் தொழுவோர்க்கு
எடுத்த செயல்களனைத்தும் வெற்றி பெரும்
ஆண்டியாய் கோலம் கொண்டு காட்சியளித்திடும்
பழனிமலையிலுறை ஆண்டவனிவனே
சென்னிமலையாண்டவர் திருகோயில் தனிலே
முன்னிருக்கும் மாடம்தனில் அழகுடன் வீற்றிருக்கும்
ஆறுமுக தேவசேனாபதியை
நேர் நின்று துதிப்பவர் நல்வாழ்வு பெறுவர்
திருவிடைக்கழி ஆலயத்தில் காட்சி தரும்
அருள்மிகு சுப்பிரமணியனைத்துதிப்பவர்க்கு
கரும வினைப்பயன்களனைத்தும் விலகிடும்
பெருமையும் நல்வாழ்வும் ஆனந்தமும் கிடைக்கும்
திருமருகல் மேல்பாடி சிதம்பரம் கோயில்களில்
ஆனைமீதமர்ந்த கஜவாகனரை
சேனாபதியை தேவானை நாதனை
வணங்கிடுமடியார்க்குத் துன்பங்கள் நீங்கிடும்
திருப்போரூர் சென்னிமலை தலத்துறையும் சரவணனை
பெருமை மிகு சண்முகநாதனை குருகுகனை
கருத்துடன் துதித்திடுமனைத்து அடியார்க்கும்
மங்கலம்,ஒலி,கொடை, சாத்வீக குணம் கிடைக்கும்
கும்பகோணம் தாராசுரம் கோயில்களில் குடியிருக்கும்
கீர்த்தி மிகு கார்த்திகேயனைத் தணிகாசலனை
நேர்த்தியுடன் கார்த்திகை நாட்களில் பணியும்
சீரடியாரனைவருக்கு நலமனைத்தும் கிடைக்கும்
நாகர் கோயில் கங்கை கொண்ட சோழபுரம்
ஆகிய தலத்தில் வீற்றிருந்து காட்சி தரும்
குமாரசாமியெனும் கந்தனைத் துதிப்போர்க்கு
ஆணவம் கன வினையனைத்தும் நீங்கிடும்
திருச்செந்தூர் திருப்பதியில் குடிகொண்டிருக்கும
சண்முகப்பெருமானை செந்தில்நாதனை
உருகி மனமார வழிபடுவோர்க்கெல்லாம்
சிவசக்தி யருளும் நற்கதியும் கிடைக்கும்
தாரகாசுரனை சூரபத்மனை
வீரமுடன் கொன்றழித்த தாரகாரியை
விராலிமலை வளர் முருகப்பெருமானை
வழிபடுமடியார்க்கு மாயை இருளகலும்
தேவிகாபுரம் தலத்தில் கோயில் கொண்டிருப்பவனை
நாவல் பழம் தந்து ஔவையை ஆட்கொண்டவனை
சேவற்கொடியோனை சேனானியைத் துதிப்பவர்க்கு
மூவாசைப்பிணி போகும் பொறாமை பகை நீங்கும்
குமரகோட்டம் ஆனூர் பாகசாலை
சிறுவாபுரியென்னும் தலங்களில் வீற்றிருக்கும்
பிரம்ம சாஸ்தாவை வேலனை ப்பணிவோர்க்கு
சகலகலைகளும் கல்வியும் பெருகும்
திருப்போரூர் திருத்தலத்துத் தூணில் காட்சி தரும்
வள்ளி கல்யாணசுந்தரனை சிவன் மகனை
வழிபடும் கன்னியர்க்கும் காளையர்க்கும்
திருமணத்தடை நீங்கும் விவாகம் நேரும்
ஆண்டாள் கும்பம் பாலசுவாமியை
திருக்கண்டியூர் திருச்செந்தூர் முருகனை
வேண்டித்துதித்திடும் பக்தரனைவருக்கும்
உடலூனம் விலகும் ஆரோக்கியம் பெருகும்
திருநளிப் பள்ளி, திருக் குறுங்குடி மற்றும்
திரு நெல்லிக்காவிலுறை முருகப்பெருமானை
சிரவுபஞ்சபேதனனெனும் பெயருடையானை
வணங்குவோரனைவருக்கும் சஞ்சலம் நீங்கும்
அனைத்து தலங்களிலும் அழகுற வீற்றிருக்கும்
ஆறுமுகனை சிகிவாகனனை
நினைத்து த்துதித்திடுமடியாரெல்லாம்
வினைப்பயன் நீங்கி நலமுடன் வாழ்வார்
வைகாசி விசாகம்🙏🙏
🔯🔯 முருகனின் பல்வேறு கோலங்கள்!!
ஞானசக்திதரர் :
இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும்
மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.
கந்தசாமி :
இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.
ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிப ட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும்.
சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திரு வுருவம் உள்ளது.
சுப்பிரமணியர் :
இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்க கூடியவர்.
நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.
கஜவாகனர் :
இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.
சரவணபவர் :
தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர்.
சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.
கார்த்திகேயர் :
இ வ
கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும்.
கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வ ரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.
குமாரசாமி :
இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும்.
நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு.
கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.
சண்முகர் :
இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும்.
திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.
தாரகாரி :
ஹதாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார்.
உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது.
விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.
சேனானி :
இவரை வழிபட்டால் பகை அழியும்.
போட்டிகளில் வெற்றிகிடைக்கும்.
பொறாமை நீங்கும்.
தேவிகாபுரம் ஆலயத் தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.
பிரம்மசாஸ்தா
: இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம்.
சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சிகிட்டும்.
காஞ்சி புரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.
வள்ளிகல்யாணசுந்தரர் :
இவரை வழி பட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும்,
கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும்.
திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.
பாலசுவாமி :
இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம்.
இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும்.
திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.
சிரவுபஞ்சபேதனர் :
இவரை வழிபட்டா ல் துன்பங்கள் விலகும்.
மனச்சஞ்சலம் அகலும்.
திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.
சிகிவாகனர் :
மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.
No comments:
Post a Comment