சரணாலயம் அத்தியாயம் 4
அடுத்த அத்தியாயத்துக்குள் புகுமுன் முதியோரில்லம் பற்றிய சில செய்திகளைப் படித்தறிந்து கொள்வோம். கடந்த பத்தாண்டுகளில், விரும்பியோ அல்லது விருப்பம் இல்லாமலோ முதியோர் இல்லங்களில் கடைசிக் காலத்தைக் கழிக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
இந்திய மக்களில் இளைஞர்கள் அதிகம் என்பதும் உண்மைதான். அதேநேரத்தில், உலகில் உள்ள வயதானோர் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், உலகில் அதிகமான வயதானோர் வாழும் இரண்டாவது நாடாகவும் இந்தியா உள்ளது. காலம் செல்லச் செல்ல இது மேலும் அதிகரிக்கும். இந்தியாவில் இன்னமும் 72% முதியோர் தங்களின் பிள்ளைகளின் குடும்பத்தோடுதான் வாழ்கின்றனர் என்பது சந்தோஷமான செய்திதான். எனினும், ‘குளோபல் ஏஜ் வாட்ச்’ எனும் அமைப்பின் ஆய்வின்படி, முதியோர் நலம் பேணுகிற நாடுகளின் பட்டியலில் இந்தியா கடைசி வரிசையில் உள்ளது. இந்தியாவின் முதியோரில் 80% கிராமவாசிகள். 40% வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள். 73% பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். 90% பேருக்கு அரசின் எந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் போய்ச் சேரவில்லை. வெந்ததைத் தின்போம்; விதி வந்தால் சாவோம் என்ற மனப்போக்கில்தான் இந்திய முதியோர்கள் பொதுவாக வாழ்ந்துவருகின்றனர் என்கிறது ஒரு சர்வே. உலக மக்கள் தொகையில் 8 சதவிகிதத்தினர் முதியோர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 2050ம் ஆண்டில் 15 வயதுக்குட்டவர்களை விட முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஜ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி உலக முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு முதியோர்களை குறித்த செய்திகளை பட்டியிலிடும் போது உலகிற்கு நம்மை அறிமுகப்படுத்திய அம்மா, அப்பாவை மறந்து விட்ட கொடூர உள்ளங்களும் இந்த சமுதாயத்தில் இருப்பதையும் குறிப்பிட வேண்டியதுள்ளது. 'தாயின் சிறந்த கோயிலும் இல்லை. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்றெல்லாம் பெற்றோருக்கு புகழாரம் சூட்டும் நம்நாட்டில் தான் பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் அவலமும் அரங்கேறுகிறது. வறுமையின் காரணமாக பெற்றோர்கள் புறக்கணித்ததாக 60 சதவிகிதத்தினர் சொல்கிறார்கள். வறுமையின் நடுவே தான் அந்த பெற்றோர்கள் அவர்களை வளர்த்தார்கள் என்பது மட்டும் 60 சதவிதத்தினருக்கு ஏன் புரியவில்லை. மற்ற 40 சதவிகிதத்தினர் வேலையின் காரணமாக நகரத்துக்குக்கு குடியேறியதால் பெற்றோரை கவனிக்க வீடுகளில் இடவசதியில்லை. கிராமங்களிலிருந்து நகரத்துக்கு பெற்றோரை அழைத்து வர முடியவில்லை என்று ஏதாவது ஒரு காரணம் சொல்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரைக்கும் புறக்கணிக்கப்படும் முதியவர்களை அரவணைக்க 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றன. இதில் சில இல்லங்கள் கட்டண அடிப்படையில் செயல்படுகின்றன. சென்னையில் மட்டும் 180 இல்லங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இல்லங்களில் தங்கி இருக்கும் ஒவ்வொரு முதியோருக்கும் ஒரு தனிக்கதை இருக்கிறது. பெற்ற குழந்தைகளுக்காக ஓடாய் உழைத்து தேய்ந்த பெற்றோரை இளைய சமுதாயம் ஏற்றுக் கொள்ள மறுப்பது வேதனைக்குரியது. மகன், மகள், மருமகள், பேரன், பேத்தி என உறவின் வட்டம் விரிந்திருந்தாலும் பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல் ஒரு அறைக்குள் முடங்கி கிடக்கும் முதியோர்கள் பலர். அந்த அறை சிறைவாசம் கொடுமையானது. கொடூரமானது.
2011ஆம் ஆண்டு முதல் முதியோர் உதவி தொகையை அரசு வழங்கி வருகிறதென்று சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தின் பயன்பெற முடியாமல் நடையாய் நடக்கும் முதியோர்கள் பலர். இதிலும் ஆயிரத்தெட்டு நடைமுறைகள். அரசு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு ஒரங்கப்பட்ட முதியோர்கள் பலர் இருக்கிறார்கள். முதியோர்களின் நலனுக்காக கடந்த 2007ல் முதியோர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி சட்டபூர்வமான வாரிசுகள் பெற்றோரை கவனிக்கவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வு 70 சதவிகித முதியோர்களிடம் இல்லை. மீதமுள்ளவர்கள் தன்னுடைய குழந்தைகள் மீது நடவடிக்கை எடுக்க விரும்புவதில்லை. இதனால் இந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கடந்த 2010 ஜூன் மாதத்தில் சென்னை பட்டாளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற முதியவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது மகன் குமார் கைது செய்யப்பட்டார். இந்த சட்டத்தின் கைது செய்யப்படுபவர்களுக்கு 3 மாத சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. சொந்த பிள்ளைகளால் பெற்றோர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் தனிக்குடும்ப முறை. கூட்டுக்குடும்பம் என்றால் வயதானவர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர். ஆனால் இன்றைய அவசர கலியுகத்தில் கணவனும், மனைவியும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் பெற்றோர்களை கவனிக்க அவர்களுக்கு நேரம் இல்லை. வசதி வாய்ப்புகள் இருந்தும் சில முதியோர்களை தனிமை வாட்டுகிறது. மனம்விட்டு பேச வீட்டில் யாரும் இல்லாததால் சில முதியோர்கள் தாங்களே விரும்பி முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து கொள்கிறார்கள். சில குடும்பங்களில் மாமியார், மருமகள் பிரச்னை காரணமாக இல்லங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இன்னும் சில குடும்பங்களில் சொத்து பிரச்னையும் முதியோர் இல்லங்களுக்கு பெற்றோர்கள் செல்ல வழிவகிக்கிறது. இப்படி ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒரு சூழ்நிலை காரணமாக முதியோர் இல்லங்கள் இன்று நிரம்பி வழிகின்றன. ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 கோடிக்கும் அதிகமாக இருக்கிறார்கள். கடந்த சில தசாப்தங்களில் இந்தியாவில் குடும்ப அமைப்புகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாறிவிட்டதால், அவர்களுடைய எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கிறது. பெரிய கூட்டுக் குடும்பங்கள், சிறிய தனிக் குடும்பங்களாக மாறிவிட்டன. பெருமளவிலான இந்தியக் குடும்பங்கள், தங்கள் பெற்றோர் வாழும் நகரில் வசிக்கவில்லை. ஆனால், கடந்த பத்தாண்டுகளில், விரும்பியோ அல்லது விருப்பம் இல்லாமலோ முதியோர் இல்லங்களில் கடைசிக் காலத்தைக் கழிக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்த மாதிரி சூழலில்தான் என் நண்பர் கல்யாணராமன், சரணாலயம், முதியோரில்லத்தில் வசதியுள்ளவர்கள் வழும் பகுதியில் அறையெடுத்துத் தங்கியுள்ளார்.
“ கல்யாணராமன் “
Widower , rich man, two sons and a daughter, grand children, socially upward, held a very high post,Lost his wife, a cancer patient, has good friends, sailing in similar situations. Had a loyal servant. Helping tendency, has faith in god., இப்படி கல்யாண ராமனை வர்ணிக்கலாம். காவேரிப் பாட்டியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பின் தொட்டடுத்துள்ள இன்னொரு மூன்று மாடிக்கட்டடத்திலிருக்கும் நண்பர் கல்யாணராமனைக் காணச்சென்றேன். அந்தக்கட்டடத்தில் சகல வசதிகளுமுள்ள அறைகள் உண்டு. இரண்டு ரூம், மூன்று ரூம்,என்று வசதிக்கேற்ப எடுத்துக் கொண்டு பல முதியவர் வாழுமிடம்.கல்யாணராமன் மனைவியை இழந்தவர் ( ஆண் விதவை!?) ( widower). அவர் மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டு, ஓரண்டு அவதியுற்ற பின் இறந்தார். மனைவி இறந்ததுமே அவர் வாழ்வு தடம் புரண்டது. அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகளை நல்ல இடத்தில் மணம் செய்து கொடுத்த பின் அவள் கணவனுடன் வெளிநாட்டில் வசிக்கிறாள். அவர் ஒரு multinational company யில் மிகப் பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். நன்கு உழைத்து மகள்,மகன்கள் கல்யாணத்தை நல்லபடியாக நடத்திவிட்டு சொந்தவீடு தோட்டம் துரவுடன் வாழ்ந்து வந்தார். மனைவி இறந்த பின் வாழ்வில் சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது. போதாக்குறைக்கு மகன்கள் இருவரும் அவருக்கு அனுசரணையாக இல்லை. அதனால் இருவரையும் தனிக் குடித்தனம் வைத்துவிட்டார். மூத்த பையனுக்கு குழந்தைகள் இல்லை. மனைவி சொல்லே மந்திரம் என்று வாழ்பவர். மனைவியாக வந்தவள் பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவள். பெரிய உத்யோகத்திலிருப்பவள். கணவனைவிட பல மடங்கு அதிக சம்பளம் வாங்குகிறாள். மேனாட்டு நாகரீகம், பணப்பித்து ,அந்தஸ்த்து மோகமென வாழ்பவள். அதனால் அவனுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. இரண்டாவது மகனுக்கு ஒரு மகனும் மகளுமிருந்தனர். அந்த மகனொரு ஊதாரி. எப்பவும் வரவுக்கு மேல் செலவு செய்து விட்டு தந்தையிடம் பணம் கேட்டு நச்சரித்து வாழ்பவன். இரண்டாவது மருமகள் சிறிது நல்ல மாதிரி. ஏழைக்குடும்பத்திலிருந்து வந்தவள். நெளிவு சுளிவறிந்து குடும்பத்தை நல்லபடி நடத்த படாத பாடுபட்டு வந்தாள். அவளிடம் கல்யாணராமனுக்கு நிறைய அனுதாபமுண்டு. பேரப் பிள்ளைகளிடம் பரிவோடும் பாசத்துடனுமிருந்தார். எனினும் மகனின் நடத்தையால் எப்பவும் குடும்பத்தில் சண்டை சச்சரவு. மனைவியை உதாசீனமாக நடத்துதல், சமயத்தில் வன்முறை இப்படி அமைதியில்லாத குடும்ப சூழல். அதனால் இரண்டு பிள்ளைகளுடனுமே நிம்மதியாக இருக்க முடியாத நிலையில் சரணாலயத்தைச் சரணடைந்தார். மகள் அழைத்தாலும் வெளிநாட்டில் வாழ விருப்பமில்லாமல் இங்கு தனிமையில் வாழ்ந்து வருகிறார். இப்படி பலதரப்பட்ட பிரச்சினைகளோடு இந்த முதியோரில்லத்தில் வாழ்பவர் பலர். அவ்வப்போது ஒவ்வொருராக க்காண்போமே.
No comments:
Post a Comment