குருவாயுரப்பன்……
பல்லவி
குருவாயுரப்பன் திருப்பாதம் பணிந்தேன்
பெருமைக்குரிய மார்கன்வில் தலத்துறையும்
அனுபல்லவி
வருமிடர் தீர்த்தெனை வாஞ்சையுடன் காக்கும்
திருமால் கேசவன் ஶ்ரீமன் நாராயணன்
சரணம்
உருவில் சிறியவன் கீர்த்தியில் பெரியவன்
இருவினைப் பயனகல எனக்கருளும் கேசவன்
கருணைக் கடலென அடியார்கள் போற்றும்
அருமாகடலமுதன் ஶ்ரீக்ருஷ்ணன் கோவிந்தன்
*****
“மார்கன்வில் குருவாயூரப்பன் கோவில்”
அருள்மிகு குருவாயூரப்பன் கோவில் என்னும் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் நியூ ஜெர்சியின் மார்கன்வில் நகரம், உல்லிடவுன் சாலையில் அமைந்துள்ள ஒர் இந்துக் கோவிலாகும்.30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலைச் சுற்றி பசுமையான புல்வெளிகள் மற்றும் காடுகள் அமைந்துள்ளன. இக் கோவிலின் இராஜகோபுரம் ஐந்து நிலை உடையது. கோபுரம் முழுவதும் பல்வேறு புராணங்களை நினைவுறுத்தும் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. உயரமான படிக்கட்டுகள் வழியே சென்றால் கோபுர வாயிலை அடையலாம். கோபுரத்தின் முன்னர் உயர்ந்த கொடிமரம் உள்ளது. பக்கவாட்டு நுழைவாயில் வழியே கோவிலுக்குள் செல்லலாம். கோவிலின் மகாமண்டபத்திற்கு செல்ல படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. குருவாயூரப்பன் இக்கோவிலின் மூலவர் ஆவார். சிவலிங்கம், ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடேஸ்வரர், ஐயப்பன் மற்றும் சத்தியநாராயண ஸ்வாமி உள்ளிட்ட துணை தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன. கன்யாகா பரமேஸ்வரி, துர்கா, காயத்திரி, சிவகாமியுடன் நடராஜர், மகாகணபதி, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், இலட்சுமணருடன் பத்ராசல சீதா இராமர், இராதே கிருஷ்ணர், ஆண்டாள், அன்னவரம் சத்யநாராயணர், ஹனுமன், கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களுக்கும் இங்கு துணை சன்னதிகள் உள்ளன. அனைத்து சன்னதிகளும் நுணுக்க மான வேலைப்பாடுகளோடு அழகாக அமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றுப் பாதைகளில் பகவத் கீதை ஆங்கிலம் மற்றும் சமசுகிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment