"காமாக்ஷியும், காரணபரசித்ரூபிணியும், கருணையே வடிவானவளும், காஞ்சிபுரத்தை ஆச்ரயித்தவளும், சந்த்ரகலையை சிரஸில் சூடினவளும், கல்ஹாராதி புஷ்பங்களை சிரஸில் சூடினவளும், காது வரை நீண்ட பெரிய கண்களை உடையவளும், மந்தஸ்மிதமான முகத்தை உடையவளும், சூர்யசந்த்ரர்களை தாடங்கங்களாய்க் கொண்டவளும், சங்கு போல் கழுத்தினளும், கடின ஸ்தனத்தினளும், முத்துமாலைகள் அணிந்தவளும், இடது கையை தொங்க விட்டுக்கொண்டிருப்பவளும், வலதுகையில் கிளியை ஏந்தினவளும், புலப்படாத இடுப்பை உடையவளும், செசக்கச்சிவந்த தாமரை போன்ற பாதத்தால் ஜ்வலிப்பவளும், லக்ஷ்மியாலும் ஸரஸ்வதியாலும் சாமரம் கொண்டு வீசப்பட்டு ஸேவிக்கப்படுபவளும், பக்தர்களிடத்தில் வாத்ஸல்யம் நிரம்பினவளும், ஸ்வர்ண நிறத்தினளும், ஏகாம்ரநாதனின் இடது துடையில் வஸிப்பவளும், ஸதாநந்தஸ்வரூபிணியுமான அம்பாளை ஸதா த்யானிப்போம்!!"
காரண காரணியை…..
பல்லவி
காரண காரணியை காமாக்ஷியை
பூரணியை நாரணியை சதா துதித்தேன்
துரிதம்
நாரணன் நான்முகன் நமச்சிவாயனும்
நாரதரிந்திரன் நரர் சுரர் நந்தியும்
சுகசனகாதியர் முனிவர்களுடனே
மாரனலைமகள் கலைமகள் வணங்கிடும்
அனுபல்லவி
ஆரணங்கை மறை புகழும் அன்னபூரணியை
ஓராயிரம் பெயருடைய கேசவன் சோதரியை
சரணங்கள்
சூரிய சந்திரரை காதணியாய்க் கொண்டவளை
காருண்ய வடிவை கனகமயமானவளை
பூரண நிலவின் கலையணிந்த தாரகையை
பேராம்பல் பூக்களை சிரசிலணிந்தவளை
நீராய் நெருப்பாய் நிலனாய்க் காற்றாய்
தாரணியாய் பேரொளியாய் அனைத்துமானவளை
மாரன் வைரியின் மடிமீதமர்ந்தவளை
சீரடியார் நலம் பேணும் வாரணமுகன் தாயை
பேரழகுடைய திருமகளும் கலைமகளும்
சீருடன் இருபுறம் நின்று கவரி வீச
மாராப்பாய் முத்துமாலை பெருந்தனத்தில் புரள
ஏரார்ந்த கண்ணியை சங்குக் கழுத்துடையாளை
ஆரும் காணாத அழகு இடை உடையவளை
ஓர் கரத்தில் கிளியேந்தி மறு கரத்தைத் தொங்கவிட்டு
சீரடியாய் செந்தாமரைத் திருவடி அமைந்தவளை
பாரோர் புகழ்நதேத்தும் அன்னை பராசக்தியை
No comments:
Post a Comment