#வசைமாலை
தெய்வத்தை மிக நெருக்கமாக பார்க்கும் நாம் அவர்களை புகழ்ந்து பாடுகிறோம். அதே போல் துயருரும் வேளையில் திட்டவும் செய்கிறோம் ... அதையே பாடல் வடிவாக அமைத்துள்ளேன். இசைமாலையை ஏற்பது போலவே #வசைமாலையையும் அவள் ஏற்பாள் ... இது எனது சொந்த அனுபவங்கள் கொண்டு எனது குலதெய்வமான பெருஞ்சேரி #மாரியம்மன் மீது எழுதப்பட்டது. ஆயினும் பொதுவாக அன்னை என்றே எல்லா இடங்களிலும் அமைந்துள்ளதும் அவள் விருப்பமே.
#பெருஞ்சேரி -- மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் மங்கைநல்லூர் என்ற கிராமத்தை அடுத்துள்ள கிராமம். இங்குள்ள வாகீஸ்வரர் வாக்கு வள்ளல் மயிலாடுதுறை நான்கு வள்ளல்களில் ஒருவர். #செம்பியன் மாதேவியாரால் திருப்பணி செய்யப்பட்ட கோவில். பெரிய கோவில் அருகிலேயே சிறிய தனிக்கோவிலாக இந்த அம்மையார் கோவில் உள்ளது...
0. காப்பு
ஆற்றங்கரையருகில் அரசமரநிழலடியில்
வீற்றிருக்கும் வேழமுகத்தவனே உனைப்பணிந்தும்
ஆற்றாமல் உலகமெலாம் நிறைந்திருக்கும் உன்தாயை நான்பணிந்தும்
போற்றித்தான் என்ன பயன்கண்டேன் பூரணமே
1. "காவாய்" என நான் கடலிடைப்பட்ட
நாவாய் போல் அலைந்து கதறியழுதும்
மோவாய் முகம்தூக்கி நீயெனைப் பாராமல்
தாயாய் இருந்தென்ன தருமமோ நானறியேன்
2. பெரிதாக வாழ்பவர்கள் எனைச்சுற்றி மகிழ்ந்திருக்க
கரியாகி நான்கிடக்கும் வாழ்வுதனை நீசுமத்த
பேயென் நிலை கண்டால் பெரிதும் மனமிரங்கும்
தாயே உன் தயவு என்ன தருமமென்ன நானறியேன்
3. பட்டும் பலநகையும் படையலுடன் பெருஞ்சோறும்
கட்டுப்படுத்தியதோ அம்மா உன் கருணையதை
கெட்டி உனைப்பிடித்தும் கீழ்த்தரமாய் நானிருக்க
வட்டிபோல் நீமட்டும் வளர்ந்திருக்க நானறியேன்
4. ஊரில் உள்ள எல்லோர்க்கும் முத்தான மகவிருக்க
பாரில் எந்தன் தாய்க்கு மட்டும் நத்தளித்த நல்லவளே
காரிருளில் அலையவிட்ட கண்மணியே உன்னைப் பலர்
பேரோளியாய் போற்றுவதன் பின்கதையை நானறியேன்
https://m.facebook.com/story.php?story_fbid=4835408236578661&id=100003285965847
#வசைமாலை
5. கல்லென்று பலர்உரைத்தும் கருத்தில் அதை ஏற்காமல்
அல்லும் பகலும்எல்லாம் உனைத் துதித்தேன் - ஆனாலும்
புல்லொத்த வாழ்வுதனை புவியதனில் எனக்களித்த
வல்லவளே உன் வன்மம் என்னவம்மா நானறியேன்
6. ஊரே செழித்திருக்க உலகமெலாம் வாழ்ந்திருக்க
உற்றார் களித்திருக்க உன்மைந்தன் நான் மட்டும்
"பாரேன்" எனப்பலரும் கைகொட்டி மகிழ்ந்திருக்க
தாயே நீ செய்ததென்ன தருமமோ நானறியேன்
7. நித்தமுன்னை நான் கண்டு நித்தமுந்தன் பேர்சொல்லி
பித்தனைப்போல் நானிங்கே வாழ்ந்திருக்க
மத்தவரையெல்லாம் எனக்கு மேலேநீ வைத்திருக்க
பெத்தவளாய் நீயிருக்கும் பெருமையென்ன நானறியேன்
8. மாளாத செல்வமுடன் மற்றவர்கள் வாழ்ந்திருக்க
ஆளாகி நானிருந்தும் ஆதரவு இல்லாமல்
தாளாத துயரமுடன் தனயனிங்கே தனித்திருக்க
தாயே நீ சுகித்திருக்கும் தைரியத்தை நானறியேன்
9. செல்லக்குழந்தை கையில் செல்வத்தை வைத்திருந்தால்
செல்லாப்பொருள் தந்து செல்வத்தை பிடுங்குதற்போல்
கல்விக்கடல் தந்தென் வயதழகு வாலிபத்தை
இல்லாமல் செய்த தாயே உன் இதயத்தை நானறியேன்
தாயே பெருஞ்சேரி….
பல்லவி
தாயே பெருஞ்சேரி மாயே மாரியம்மா
சேயென் குறை தீர்க்க நீயே வாருமம்மா
அனுல்லவி
காயாம்பூ வண்ணன் கேசவன் சோதரியே
ஓயாதுன் பதமே அனுதினமும் துதித்தேன்
காப்பு
தாயவளைப் பாடிடவே தயை வேண்டிப் பணிந்தேன்
நீயுமருள் தருவாய் அரசமரத்தடியிருக்கும்
சேயே கணபதியே வாரணமுகத்தோனே
ஆயபயனேதுமுண்டோ நானறியேன் பூரணமே
சரணம்
மூவருக்கும் முதலே ஆதி பழம் பொருளே
தாவி வந்துனையே தாயென்றே வேண்டினேன்
ஆவலுடன் பணிந்த எனை அரவணைத்துக் காக்காமல்
பாவியெனச் சொல்லி பரிதவிக்க விடலாமோ
அருகிருப்போர் பலரும் ஆனந்தமாய் வாழ
உருகியுனைத்துதிக்கும் நான் மட்டும் கருகிடவே
சருகாகிக் கிடக்குமென் நிலைகண்டு நீயும்
கருணையின்றிப் பார்ப்பது தருமமோ முறையோ
ஆடையாபரணங்கள் அருஞ்சுவைப் படையல்கள்
மேடையில் கண்டுன் கடைக்கண் சென்றதுவோ
கோடையில் வறண்ட குளம் போல் நானிருக்க
ஓடையெனப் பெருகி நீயோடும் பொருளறியேன்
நாட்டிலுள்ள அனைவருக்கும் நல்லதொரு மகவிருக்க
வீட்டிலுள்ள தாய்க்கு மட்டும் சருகளித்த திருமகளே
வாட்டி வதைத்தலையவிட்ட கண்மணியே உன்னை இன்னும்
மேட்டிமையாய் போற்றும் கூற்றினை என் சொல்வேன்
சிலையென்று பலர் சொல்ல அதை நானுமேற்காமல்
விலையுயர்ந்த பொருளென்றே ராப்பகலுமுனைத்துதித்தேன்
அலைக்கழித்துலகில் விலையிலா வாழ்வளித்தாய்
குலமகளே உன் கோபம் என்னவென்று நான்றியேன்
சீருடனுற்றார் உலகோர் அனைவரும் வாழ்ந்திருக்க
பாரினில் மகிழ்ந்திருக்க உன் பிள்ளை நான் மட்டும்
நேரும் நெறியுமின்றி ஊர் சிரிக்க வாழ்வதென்ன
நேரிழையே தாயே தருமமிதுவோ சொல்
சித்தத்திலுனை நினைந்து நித்தமுமுனைத் துதித்தேன்
அத்தனை செய்த எனைப் பித்தனாயலையவிட்டு
மத்தவர்க்கருள் தந்து மெத்தனமாய் நீயிருந்தாய்
பெத்தவளே நீ செய்யும் செயலின் பொருளறியேன்
ஏராளம் பொருளுடனே மற்றவர்கள் இன்பமுடன்
தாராளமாகத் தரணியில் வாழ்ந்திருக்க
சீராளனுன் மகனோ துயருடனே தனித்திருக்க
நேரிழையே தாயேயுன் காரியத்தை என் சொல்வேன்
பிள்ளை கையில் பெரும் பொருள் வைத்திருந்தால்
கள்ளத்தனம் செய்து கைப் பொருளைப் பறிப்பதுபோல்
பள்ளி பெருங்கல்வி தந்தென் வாலிபமிளமை
அள்ளிச் சென்றதேன் தாயே இன்றுவரை நானறியேன்
.....
No comments:
Post a Comment