Tuesday, 8 February 2022

பரமேச்வரனை…….

🙏ஸ்ரீ வைத்தியநாத அஷ்டகம் வரிகள்:

ஸ்ரீராமஸௌமித்ரி ஜடாயுவேத

ஷடானனாதித்ய குஜார்ச்சிதாய

ஸ்ரீநீலகண்டாய தயாமயாய

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

கங்காப்ரவாஹேந்து ஜடாதராய

த்ரிலோசனாய ஸ்மரகாலஹந்த்ரே

ஸமஸ்த தேவைரபி பூஜிதாய

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

பக்தப்ரியாய த்ரிபுராந்தகாய

பினாகினே துஷ்டஹராய நித்யம்

ப்ரத்யக்ஷலீலாய மனுஷ்யலோகே

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக

ப்ரணாஸகர்த்ரே முனிவந்திதாய

ப்ரபாகரேந்த்வக்நிவிலோசனாய

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

வாக்ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீனஜந்தோ:

வாக்ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி முகப்ரதாய

குஷ்டாதி ஸர்வோன்னதரோ கஹந்த்ரே

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

வேதாந்த வேத்யாய ஜகன்மயாய

யோகீஸ்வரத்யேய பதாம்புஜாய

த்ரிமூர்த்திரூபாய ஸஹஸ்ரநாம்னே

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

ஸ்வதீர்த்தம்ருத் பஸ்மப்ருதங்கபாஜாம்

பிஸாசது:க்கார்த்திபயாபஹாய

ஆத்மஸ்வரூபாய ஸரீரபாஜாம்

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய

ஸ்ரக்கந்த பஸ்மாத்யபிஸோபிதாய

ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

வாலாம்பிகேச வைத்யேச

பவரோக ஹரேதிச

ஜபேந் நாமத்ரயந் நித்யம்

மஹாரோக நிவாரணம்…

மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ

மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ

மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ

மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ….🙏

Vaidyanatha ashtakam  அர்த்தம்:🙏

ஸ்ரீராமன், லட்சுமணன், ஜடாயு, நான்கு வேதங்கள், ஆறுமுகன், சூரியன் மற்றும் தனது ரோகத்தைப் போக்கிக்கொள்ள விரும்பிய அங்காரகன் போன்றவர்களால் பூஜிக்கப்பட்டவரும், விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், கருணையே வடிவானவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.

கங்கையின் பிரவாகத்தை சிரசில் தாங்கியவரும், சந்திர மண்டலத்தையும் சிரசில் தரித்தவரும், மூன்று கண்களை உடையவரும், மன்மதனையும் காலனையும் வதம் செய்தவரும், எல்லா தேவர்களாலும் பூஜிக்கப்பட்டவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.

பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவரும், திரிபுர ஸம்ஹாரம் செய்தவரும், பினாகம் என்ற வில்லை தரித்தவரும், தினமும் துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்கிறவரும், மனிதர் வாழும் உலகத்தில் எல்லோருக்கும் புலப்படும்படியாகப் பலவித லீலைகளைச் செய்தவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.

பாதம் முதல் தலை வரையிலும் ஏற்படக்கூடிய எந்த ஒரு நோயையும் நாசமாக்குகிறவரும், மகரிஷிகளால் ஆராதிக்கப்பட்டவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரையும் முக்கண்களாகக் கொண்டவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.

பேச்சுப் புலன், காது, கண், கால் முதலிய அங்கங்களை இழந்தவருக்கு அவற்றை மீண்டும் கொடுத்து சுகத்தை அளிப்பவரும், குஷ்டம் முதலிய மிகப் பெரியதான ரோகங்களைப் போக்குகின்றவருமான ஸ்ரீவைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.

வேதாந்தங்களால் அறியத் தகுந்தவரும், உலகில் உள்ள எல்லா பொருட்களுமாக இருப்பவரும், யோகீஸ்வரர்களால் தியானம் செய்யத்தக்க சரணங்களை உடையவரும், பிரம்ம-விஷ்ணு வடிவாய் விளங்குபவரும், ஆயிரம் நாமங்களை உடையவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.

தனது தீர்த்தமாகிய சித்தாம்ருத தீர்த்தத்தில் நீராடுவதாலும், தனது வைத்தீஸ்வரன் கோயிலில் கொடுக்கப்படும் மருந்து உருண்டைகளாலும், தனது விபூதியினாலும், தன் கோயிலில் உள்ள வேப்பமரத்தின் அடியிலுள்ள மண்ணினாலும், தனது குளத்து மண்ணினாலும், பிசாசு, ரோகம் போன்ற துக்கங்களையும் மனக் கவலையையும், பயத்தையும் போக்குகின்றவரும் சரீரத்தை அடைந்தவர்களுக்கு அந்தராத்மாவாய் இருப்பவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.

விஷம் அருந்தியதால் நீலமான கண்டத்தை உடையவரும், ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவரும், மாலை, சந்தனம், விபூதி ஆகியவற்றால் பிரகாசிக்கின்றவரும், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் என்ற நல்ல பாக்கியங்களைக் கொடுக்கின்றவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.🙏

🙏(மேலே சொல்லப்பட்ட எட்டு ஸ்லோகங்களை உளமாறச் சொல்வோருக்கு) வாலாம்பிகைக்கு நாதனானவரும், வைத்தியர்களிலேயே மிகவும் சிறந்தவரும், ஜனன, மரணமென்ற ரோகத்தைப் போக்குகின்றவரும் ஆகிய வைத்யநாதரின் மூன்று நாமாக்களையும் (வாலாம்பிகேச, வைத்யேச, பவரோக ஹரேதிச) தினமும் ஜபிப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கொடிய நோய்கள் விலகும். இந்த அஷ்ட ஸ்லோகம் மகான்களால் தொன்று தொட்டு ஜபிக்கப்பட்டு வருகிறது என்பதே இதன் சிறப்பை விளக்க வல்லது…


                                                      பரமேச்வரனை…….


                                                          பல்லவி

                                            பரமேச்வரனை வைத்திய நாதனை

                                            கரம் கூப்பி சிரம் தாழ்த்தி தினம் நமஸ்கரித்தேன்

                                                        அனுபல்லவி

                                            பிரமனும் கேசவனும் வணங்கிடும் ஈசனை

                                            பரமேச்வரி வாலாம்பிகை நேசனை

                                                              சரணம்

                                            சரவணன் சூரியன் ஜடாயு நான்மறை

                                            ஶ்ரீராமனிலக்குவன்  இவர்களினுடனே

                                            ரோகம் நீங்கிட விரும்பி அங்கரகனும்

                                            கரம் பணிந்தேத்தும் ஆலமுண்டகண்டனை


                                            கங்கையை சிரசில் ஏந்திய  கங்காதரனை

                                            திங்கட் பிறையை சூடிய முக்கண்ணனை

                                            அங்கமில் மதனைக் காலனை வதைத்தவனை

                                            எங்குமுள்ள தேவர்கள் துதித்திடும் சங்கரனை     


                                            அடியார்களிடத்தில் அன்பு கொண்டவனை

                                            கொடிய திரிபுரனை கொன்றழித்தவனை

                                            நெடிய பிநாகமெனும் வில்லேந்தி நின்றவனை

                                            பூவுலகில் பல லீலைகள் புரிந்தவனை


                                            பாதம் முதல் தலைவரை வரும் பிணிகள் தீர்ப்பவனை                                                                     

                                            ஆதவனை சந்திரனை நெருப்பைக் கண்காளயுடைய

                                            ஏதமிலாதவனை முனிவர்கள் துதிப்பவனை

                                            பூதகணங்களின் நாதனை சிவனை

                                             

                                            கண் காது வாய்ப் பேச்சு கால்களிழந்தவர்க்கு

                                            வண்ணமிகு சிகிச்சை தந்து குணமுறச்செய்பவனை

                                            வெண் குட்டம் பெருநோய்க்கு மருந்தளித்துக் காப்பவனை     

                                            எண்ணிலாக் குறைகளை பிணிகளைக் களைபவனை


                                            வேத வேதாந்தங்களறியும் பொருளானவனை

                                            மாதவனும் பிரனுமாய் வடிவெடுக்கும் பரமனை

                                            சாதித்தப் புண்ணியர் துதிக்கும் பதமுடையவனை

                                            ஓதிட ஆயிரம் நாமங்களுடையவனை

                                             

                                            புண்ணிய திருக்குளத்தில் நீராடியவர் தரும்

                                            திண்ணிய மருந்துருண்டை உண்பவர்க்கெல்லாம்

                                            திண்ணமாய் ரோகங்களனைத்தும் நீங்கிடும்

                                            எண்ணத்திலேற்படும் பயங்கள் விலகிடும்


                                            மாலை சந்தனம் திருநீறணிந்தவனை

                                            நீலகண்டனை விடை வாகனனை     

                                            சாலச் சிறந்த மனையும் மங்கலமும்

                                            கோலமுடனளித்திடும் வாலாம்பிகைநாதனை

                                                                                   

                                            

No comments:

Post a Comment