Thursday, 17 February 2022

உன்னருள் தந்து…..

 காமாக்ஷி ஆவிர்பாவ தினம் !

மாசி பூரம் ஸ்பெஷல் !

காப்பு

மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத்

துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே - திங்கட்

புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங்

கயமுகவைங் கரனிருதாள் காப்பு.

நூல்

சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி

சோதியா நின்ற வுமையே.

சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்

துன்பத்தை நீக்கி விடுவாய்.

சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்

துயரத்தை மாற்றி விடுவாய்

ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ

சிறியனால் முடிந்திராது

சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்

சிறிய கடனுன்னதம்மா.

சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி

சிரோன்மணி மனோன்மணியு நீ.

அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி

யனாத ரட்சகியும் நீயே,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அன்னை காமாட்சி உமையே.


பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது

பாடகந் தண்டை கொலுசும்,

பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட

- பாதச் சிலம்பி னொலியும்,

முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்

மோகன மாலை யழகும் ;

முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்

முடிந்திட்ட தாலி யழகும் ,

சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்

செங்கையில் பொன்கங்கணம்,

ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற

சிறுகாது கொப்பி னழகும்,

அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை

அடியனாற் சொல்லத் திறமோ,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்

குறைகளைச் சொல்லி நின்றும்,

கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ

குழப்பமா யிருப்ப தேனோ

விதியீது,நைந்துநான் அறியாம லுந்தனைச்

சதமாக நம்பி னேனே

சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க

சாதக முனக் கிலையோ

மதிபோல வொளியுற்ற புகழ்நெடுந் கரமுடைய

மதகஜனை யீன்ற தாயே.

மாயனிட தங்கையே பரமனது மங்கையே

மயானத்தில் நின்ற வுமையே

அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன்

அன்பு வைத்தென்னை யாள்வாய்,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்தும்நான்

பேரான ஸ்தலமு மறியேன்

பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்

போற்றிக் கொண்டாடி யறியேன்,

வாமியென்றுனைச் சிவகாமி யென்றே சொல்லி,

வாயினாற் பாடியறியேன்,

மாதா பிதாவினது பாதத்தை நானுமே

வணங்கியொரு நாளுமறியேன்,

சாமியென்றே எண்ணிச் சதுருடன் கைகூப்பிச்

சரணங்கள் செய்து மறியேன்,

சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு,

சாஷ்டாங்க தெண்ட னறியேன்,

ஆமிந்த பூமியிலடியனைப் போல்மூடன்

ஆச்சி நீ கண்ட துண்டோ,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான்

பிரியமாயிருந்த னம்மா,

மெத்தனம் உடையை என்றறியாது நானுன்

புருஷனை மறந்தனம்மா,

பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்

பராமுகம் பார்த்திருந்தால்,

பாலன் யானெப்படி விசனமில்லாமலே

பாங்குட னிருப்பதம்மா,

இத்தனை மோசங்களாகாது ஆகாது

இது தர்மமல்ல வம்மா

எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ

யிதுநீதி யல்லவம்மா,

அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோ

அதை யெனக்கருள் புரிகுவாய்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ

மணி மந்தர காரிநீயே

மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ

மலையரையன் மகளானநீ,

தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ,

தயாநிதி விசாலாட்சி நீ

தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ

சரவணனை யீன்ற வளும் நீ,

பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில்

பேர்பெற வளர்த்தவளும் நீ,

பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ

பிரிய வுண்ணாமுலையு நீ

ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ

அகிலாண்டவல்லி நீயே

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்

புத்திகளைச் சொல்லவில்லையோ,

பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை

பிரியமாய் வளர்க்க வில்லையோ,

கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்

கதறி நானழுத குரலில்,

கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன்

காதினுள் நுழைந்த தில்லையோ

இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா

இனி விடுவதில்லை சும்மா,

இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும்

இதுதரும மல்ல வம்மா,

எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார்

ஏதும் நீதியல்ல வம்மா,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


முன்னையோ சென்மாந்திர மென்னென்ன பாவங்கள்

மூடனான் செய்த னம்மா

மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டு

மோசங்கள் பண்ணி னேனோ

என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே

இக்கட்டு வந்த தம்மா

ஏழைநான் செய்தபிழை தாம்பொறுத்தருள் தந்து

என்கவலை தீரு மம்மா

சின்னங்களாகுது ஜெயமில்லையோ தாயே

சிறுநாணமாகு தம்மா,

சிந்தனை களென் மீதில் வைத்து நற்பாக்கியமருள்

சிவசக்தி காமாட்சி நீ

அன்னவாகனமேறி யானந்தமாக உன்

அடியன் முன் வந்து நிற்பாய்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


எந்தனைப் போலவே செனன மேடுத்தோர்க

ளின்பமாய் வாழ்ந் திருக்க,

யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்

உன்னடியேன் தவிப்பதம்மா,

உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்

உன் பாதஞ் சாட்சியாக

உன்னையன்றி வேறு துணை இனியாரை யுங்காணேன்

உலகந்தனி லெந்தனுக்கு

பின்னை யென்றெண்ணி நீ சொல்லாமலென் வறுமை

போக்கடித் தென்னை ரட்சி

பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்

பிரியமாய்க் காத்திடம்மா

அன்னையே யின்னமுன் னடியேனை ரட்சிக்க

அட்டி செய்யா தேயம்மா,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


பாரதனி லுள்ளளவும் பாக்கிபத்தோ டென்னைப்

பாங்குடனி ரட்சிக்கவும்,

பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த

பாலருக் கருள் புரியவும்

சீர்பெற்ற தேசத்தில் சிறுபிணிகள் வாராமல்

செங்கலிய ளணு காமலும்,

சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து

ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,

பேர்பெற்ற காலனைப் பின்றொடர வொட்டாமற்

பிரியமாய்ச் காத்திடம்மா.

பிரியமாயுன் மீதில் சிறியனான் சொன்னகவி

பிழைகளைப் பொறுத்து ரட்சி.

ஆறதனில் மணல் குவித்தரிய பூசை செய்தவென்

னம்மை யேகாம்பரி நீயே

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது

இப்பூமி தன்னி லம்மா,

இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்

இனிஜெனன மெடுத்திடாமல்,

முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்

முக்காலும் நம்பினேனே,

முன் பின்னுந்தோணாத மனிதரைப் போலநீ

முழித்திருக்காதே யம்மா,

வெற்றி பெறவுன் மீதில் பக்தியாய் நான் சொன்ன

விருத்தங்கள் பதினொன்றையும்

விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை

விமலனாரேசப் போறார்,

அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்

அருங்குறை யைத் தீருமம்மா,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


                                                             உன்னருள் தந்து…..


                                                                       பல்லவி

                                                      உன்னருள் தந்து எனைப் பாடவைப்பாயே

                                                      அன்னையே காமக்ஷி  கேசவன் சோதரி

                                                                      அனுபல்லவி

                                                      முன்னமுன் மகனை ஐங்கரனைத் துதித்தேன்

                                                      அன்னவன் தலைமகன் கணபதியே காப்பு

                                                                        சரணங்கள் 

                                                       சிந்தையில் உன்னிரு பதம் வைத்துத் துதிப்பவர்க்கு

                                                       தொந்ததரவு துயர் நீக்கித் தந்தருள்வாயுன்  கருணை

                                                       இந்த நல் வெள்ளியிலுனைத் துதிப்பவர்க்கு

                                                       சுந்தரியிடர் பிணி கவலைகள் போக்கிடுவாய்  

   

                                                       சொந்தவுன் மைந்தன் எந்தனைக் காப்பது

                                                       அந்தரியே தாயேயது உன்  கடமையன்றோ

                                                       அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்      

                                                       அன்னை காமாக்ஷி உமையே


                                                       பத்துவிரல் மோதிரமும் முத்து மூக்குத்தியும்

                                                       பாடகத்தண்டை கொலுசும் அதனுடன்

                                                       ரத்தினப் பதக்கம் வைத்த மாலையழகும்

                                                       காதில் கம்மலுடன் செங்கையில் பொன் வளையலும்  

      

                                                       அத்துடன் வைடூரியம் புஷ்பராகத்தினால் செய்த

                                                       புத்தம் புதுத் தாலியுடன் மிளிருமழகே

                                                       அத்தி வரதனின் அழகு சோதரியே

                                                       அழகான காஞ்சி வாழ் உமையே காமாக்ஷியே


                                                       கதியென நினந்துனை தினம் கொண்டாடினேன்

                                                       அதிகமாய் வறுமை தந்து குழம்ப வைப்பதேனோ

                                                       சதமென உனையே நம்பினேனன்னையே

                                                       இதமுடன் ரட்சிக்க உனக்கு மனமில்லையோ


                                                       மதகஜராஜனையீன்றவளே தாயே

                                                       மயானத்திலுலவுகின்ற மாகாளி பைரவியே

                                                       அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்                                     

                                                       அம்மையே காமாக்ஷி உமையே

  

                                                       இப்புவியில் பிறந்து வளர்ந்த நான் தினமும்

                                                       ஒப்புயர்வில்லாப்  பெரியோரை வணங்கவில்லை

                                                       செப்பமுடனன்னை தந்தையப் பணிந்ததில்லை

                                                       எப்போதும் சிவகாமி உன் நாமம் சொன்னதில்லை


                                                       கைகூப்பி தண்டனிட்டு குரு பாதம் பணிந்ததில்லை

                                                       வையகத்திலெனைப் போலொரு மூடனைக் கண்டதுண்டோ

                                                        அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்                                     

                                                       அம்மையே காமாக்ஷி உமையே


                                                       பெத்த  தாயென்றே நானுனை நம்பினேன்

                                                       பித்தனாயுன் கணவன் அத்தனை மறந்தேனம்மா
            
                                                       இத்தனை தாமதம் செய்து தர்மமல்ல
    
                                                       மெத்தனம் காட்டாமல் ரட்சிக்க வாருமம்மா

                                                 
                                                       புத்திரனத்திமுகனை நினைந்தெனை மறந்தாயோ
                                                      
                                                       சித்தத்தில் அவன்போலெனை வைத்துக்காத்திடுவாய்                  

                                                       அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்                                     

                                                       அம்மையே காமாக்ஷி உமையே


                                                       மாதவன் கேசவன் சோதரியே மரகதமே

                                                       மணி மந்திரப் பொருளே மாயா ரூபிணியே

                                                       மலையரசன் மகளே உமா மகேச்வரியே                                                    
 
                                                       அலைமகளும் கலைமகளுமனைத்தும் நீயே


                                                       தாயே நீயே காசி விசாலாக்ஷி 
  
                                                       மதுரை மீனாக்ஷி பெரிய நாயகி
                                                         
                                                       சரவணனையீன்றவளும் ப்ரணவ வடிவும் நீ
                          
                                                       அரவணைத்தனைவரையும் காப்பவளும் நீயே

                   
                                                        ஆயி மகமாயி நீ உண்ணமுலையம்மையும் நீ

                                                        பேயுடனாடிடும் அத்தனிடம மர்ந்தவள் நீ 

                                                        தேயும் பிறையணிந்த அகிலாண்டவல்லி நீ

                                                        ஆனந்தவல்லி நீ பிரசன்னவல்லியும் நீ


                                                        பொல்லாப்பிள்ளையென்றாலும் தாயவனை

                                                        புத்திமதி சொல்லிப் பேணுவதில்லையோ
     
                                                        பேய்ப்பிள்ளையானாலும் தாய் தன்மகவை
                                                        
                                                        பிரியமுடன் பாசமாய்ப்  வளர்ப்பதில்லையோ

                                     
                                                        கல்லென நீ நின்றாலும் கடுகிலொரு துளியேனும்
         
                                                        காதில் விழவில்லையா தாயே தயவில்லையா
                                  
                                                        இல்லாத வன்மங்களென் மீதில் ஏனம்மா
        
                                                        இனி நானுனையே விடுவதில்லை சும்மா

 
                                                       இருவரும் தெருவினிலிறங்கி சண்டையிட்டால்

                                                       வரும் பழியனைத்தும் உனையே சேரும்
       
                                                       அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்                                     

                                                       அம்மையே காமாக்ஷி உமையே


                                                      முன் ஜென்மந்தனிலும் இப்பிறப்பிலும் நான்        

                                                      செய்த பிழையெத்தனையோ அத்தனையும் பொறுத்து

                                                      என்னை ரட்சிக்க  அன்ன வாகனமேறி

                                                      என் முன்னே வந்து நீ காட்சி தந்தெனைக் காப்பாய்

                

                                                      என்னைப்போலிப்புவியல் பிறந்த பல பேரும்

                                                      இன்பமாய் வாழ்ந்திருக்க நான் மட்டும்

                                                      துன்பத்திலுழலுவதேன் முன் வினைப் பயனோ

                                                      அன்னையே இதை மாற்றி நன்னலம் தந்தருள்வாய்

         

                                                      உன்னையே துதித்திடுமென்னை மார்க்கண்டன் போல்

                                                      உன் பாலனாயேற்று நலமனைத்தும் தருவாய்

                                                      அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்                                     

                                                      அம்மையே காமாக்ஷி உமையே


                                                      பாரினிலுனையே பாங்குடன் பணிந்தேன்

                                                      பேரிடர் பெருங்கலியணுகாமல் வளம் தந்து

                                                      பேர் பெற்ற காலன் பின் தொடராமல் காத்து

                                                      பிரியமுடன் சிறு கவி சொன்ன எனைக்காப்பாய்

   

                                                     ஆற்று மணலெடுத்து அழகான லிங்கம் செய்து

                                                     ஏற்றமுடன்  துதித்த ஏகாம்பரியுனத்துதித்தேன்  

                                                     அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்                                     

                                                     அம்மையே காமாக்ஷி உமையே


                                                        
                               
                                                       
       
                                  
                                    

                                                                       

                                                       

            

                                                      

No comments:

Post a Comment