Sunday, 27 February 2022

ஆச்சரியமானவளே

 பூச்சொரிதல் ஸ்பெஷல் ! 

சக்தி வழிபாட்டிற்குரிய ஸ்தலங்கள் பலவற்றில் தமிழகத்திலே 'சாய்ஞ்சா கண்ணபுரம், சாதிச்சா சமயபுரம்' எனும் வாக்கிற்கிணங்க பிரத்யக்ஷ தெய்வமாக தன் கண்ணசைவினாலேயே கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்தவண்ணம் காவிரி நதி பாயும் சோழ நாட்டிலே திருச்சியிலிருந்து வடக்கே 6 கி.மீ. தொலைவிலுள்ள கண்ணபுரம் எனப்படும் சமயபுரத்திலே அமர்ந்த நிலையிலுள்ள எழிற்கோலத்திலே அழகுறக் காட்சி தருகிறாள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன். ‘சாதிச்சா சமயபுரம்' எனும் பெருவாக்கிற்கிணங்க, சமயபுரத்திலே தனக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஸ்ரீமாரியம்மனின் லீலா வினோதங்கள் எண்ணிலடங்காதவை. கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு ஆடிமாதம், தைமாதம், நவராத்திரி இவைகளெல்லாம் விசேஷமெனில் மாசி மாதம் வரும் பூச்சொரிதல் விழாவோ மிகமிக விசேஷமானது. இப்பூச்சொரிதல் விழாவின்போது லட்சக்கணக்கான மக்கள் திரளாக வந்திருந்து ஸ்ரீமாரியம்மனின் மேல் பூவைச் சொரிந்து அம்மனை வழிபடுவர். மாசி மாதம் கடைசி ஞாயிறன்று பூச்சொரிதல் உற்சவம் நடைபெறுகிறது. பூச்சொரிதல் நாள் முதல் பங்குனி மாதம் வரை ஒவ்வொரு ஞாயிறன்றும் பூச்சொரிதல் விழா நடைபெறும். பூச்சொரிதல் நாள் முதல் 4 வாரங்களுக்கு ஸ்ரீமாரியம்மனுக்குப் பச்சைப் பட்டினி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறதாம். பூச்சொரிதல் விழாவின் தாத்பர்யம்: ஊரெங்கும் 'மாரி' போடும் சமயங்களிலே உடம்பில் ஏற்படும் முத்துக்களைத் தானே ஏற்று அந்தப் பூ முத்துக்களை பூப்போல ஸ்ரீமாரியம்மன் உதிர்த்து விடுதலால் உள்ளத்தில் எழும் அந்த நன்றியுணர்வை பக்தர்கள் அந்த மாரியம்மனுக்கு வௌதக்காட்டும் செயலின் வௌதப்பாடே பூச்சொரிதல் விழா. பூச்சொரிதல் விழாவில் முதல் பூ திருவரங்கம் ஸ்ரீஅரங்கநாதரிடமிருந்து வந்து சொரியப்பட்ட பின்னரே எல்லா ஊர்களிலிருந்தும் வரும் பூக்கள் அம்மனுக்கு பூச்சொரியப்படுகிறது. பூச்சொரிதலுக்கு உதிரிப் பூக்களே பயன்படுத்தப்படுகிறது. சென்னை சிம்சனிலிருந்தும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு லாரியில் பூக்கள் பூச்சொரிதலுக்கு அனுப்பப்படுகிறதாம். பூச்சொரிதல் உற்சவம் காலைமுதல் இரவு வரை நடைபெறும்பூச்சொரிதலில் சொரியப்படும் பூவானது ஸ்ரீமாரியம்மனின் சிரசிலிருந்து போடப்படும். இவ்விழாவில் ஸ்ரீமாரியம்மனின் திருமுகத்தை மட்டுமே காண்பிக்கும் அளவுக்கு அம்மன் பூக்குவியலில் மூழ்கித் திளைப்பாள். பூச்சொரிதல் விழாவில் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுடன் உடன்பிறந்த சகோதரிகள் அறுவரில் முதல் பூ சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கே. ஏனெனில் பெரியம்மை போடும் மூத்தவளுக்கு அதை எடுக்கத் தெரியாதாம். சமயபுரம் ஸ்ரீமாரியம்மனே அந்த முத்துக்களை உதிர்த்தலால் முதல் மரியாதை இந்த மாரியம்மனுக்கு என்று சொல்லப்படுகிறது. அடுத்து இரண்டாவது பூ அன்பிலூர் மாரியம்மனுக்கும், மூன்றாவது பூ நார்த்தாமலை மாரியம்மனுக்கும்கடைசி பூ பெரியம்மை போடும் பெரியவளான பாலக்காடு மாரியம்மனுக்கு என்று சொல்லப்படுகிறது. இப்பூச்சொரிதல் விழா ஆரம்பமான பின்னர்தான் ஊரெங்கிலுமுள்ள வேம்பு மரங்களிலே வேப்பம்பூவானது அரும்பு கட்ட ஆரம்பிக்குமாம். பூச்சொரிதல் விழாவின் முடிவில் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையில் தேரோட்டமும், அதற்கடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. சித்திரை மாதக் கடைசியில் வசந்த விழாவும், வைகாசி மாதம் முதல் தேதியில் பஞ்சபிரகார உற்சவமும் நடைபெறுகிறது.


                                       ஆச்சரியமானவளே…..


                                                   பல்லவி

                              ஆச்சரியமானவளே சமயபுரத்தாளே

                              தீச்சட்டி ஏந்தி வரும் பக்தருக்கருள்பவளே

                                              அனுபல்லவி   

                              பூச்சொரிதல் காண்பவளே கண்ணபுரம் மாரி   

                              பேச்செல்லாம் நீயே கேசவன் சோதரியே

                                                   சரணம்

                              மூச்செல்லாம் நீயே முத்துமாரித் தாயே

                              காச்சலெல்லாம் போக்கி நலமளிப்பவளே

                              ஏச்சுப் பேச்சில்லாத பேச்சி மகமாயி

                              கோச்சடையான் நாயகியே உன் பாதம் பணிந்தேன்

                                 

                                      

No comments:

Post a Comment