திரிபுர சுந்தரி! முல்லைப் பற்களுடையவளே! சனந்தனர் ஆகியோரால் வந்திக்கப் பெற்றவளே! தாயே! பொன்னங்கத்தினளே! தேவி!
- உன்னை வருணிக்க பிரமன் முதலான வானோருக்காகிலும் தரமா? நான் எம்மாத்திரம்?
- கலகலவென்றுள்ள முகக் களையினைக் கண்டு, அல்லியரசன் புவிக்கு வாரானாயினன்
- ஒளிருமுனது எழிலினைக் கண்டு, அன்றே, காதல் மன்னன் காணாமற்போயினன்;
- உறுதியான உனது மாட்சிமையினைக் கண்டு, கடலரசன் சலனமற்ற உருவத்தோனாயினன்;
- பலமான தீரத்தினைக் கண்டு, பொன் மலையோன், தான் சிலை வடிவாகினன்;
- கண்களைக் கண்டு வெட்கி, கெண்டை மீன்கள், கடல் வாசம் செய்யலாயின;
- உனது புன்னகையின் ஒளி பட்டு, சிவன் ஒப்பற்ற தூயோனாகினன்;
- மின்னும் நகைகளையும் ஆடையின் ஒளியினையும், மின்னல்கள் கண்டு, நிமிடமும் நில்லாதாயின;
- உனது குரலைச் செவி மடுத்து, வாணி கணவனின் நாவினில், தான் புகலாயிற்று;
- புனிதப்படுத்தும் விருதினைக் கண்டு, தொண்டர்களின் பாவங்கள் ஓடலாயின;
- எவ்வமயமும், உனது தயையினால், நற்கவிகள் அனைத்து காவியங்களையும் இயற்றலாயினர்;
- மா மணாளனின் தங்கையென, மகிழ்ச்சியுடன், சான்றோர் பகரலாயினர்;
- உள்ளத்தினில் உணர்ந்து, உனது திருவடியினில், தியாகராசன், பேறெனக் கொள்ளலாயினன்.
திரிபுரசுந்தரியே…..
பல்லவி
திரிபுரசுந்தரியே பொன்மயமானவளே
பரிமளமேயுனைநான் வர்ணிக்க இயலுமோ
அனுபல்லவி
சரி நிகர் சமமாய் எவருமில்லாதவளே
விரிசடையோன் மடியமர்ந்த கிரியரசன் மகளே
சரணம்
நான்கு முகமுடைய பிரமனுக்குமியலவில்லை
ஐந்து முகம் கொண்ட சங்கரனுமறியவில்லை
ஆறுமுகத்தோனுக்கு எடுத்தியம்பத் தெரியவில்லை
ஆயிரம் நாவுடைய அனந்தனுக்கும் முடியவில்லை
திங்கள் தன் பிறைதந்து பேசாது மௌனமானான்
அங்கமில் மதனுமுன்னெழில் கண்டு மறைந்தான்
பங்கயமுன் உறுதி கண்டு கடலரசனலையிழந்தான்
பலமுடைய வடிவு கண்டு பொன்மலையும் சிலையானான்
கண்ணழகு கண்டு மீன்கள் அலைகடலில் மறைந்தது
புன்னகை ஒளியில் சிவன் மின்னலென வெளிச்சமானான்
மின்னுமாபரணமும் ஆடையின் ஒளியும்
மின்னலைப் பழித்து இல்லாமல் செய்தன
பாரதியுன் குரல் கேட்டு நாதன் நாவிலமர்ந்தாள்
பாவாணர் காவியங்கள் படைக்கத்தொடங்கினர்
யாராலும் முழுமையாய் சொல்லவொண்ணாப் பேரழகே
பார் புகழ் கேசவன் சோதரியே ஶ்ரீலலிதா
No comments:
Post a Comment