தினம் ஒரு பாசுரம்-8
செஞ் சொல் கவிகாள் உயிர் காத்து ஆட் செய் மின் திருமாலிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே!
- திருவாய்மொழி
என்ன ஒரு அற்புதமான பாசுரம்! நம்மாழ்வார், நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்குருகையில் (ஆழ்வார் திருநகரி) அவதரித்தவர். மதுரை திவ்யதேசமான திருமாலிருஞ்சோலை (என்ன ஒரு அழகான இடப்பெயர்! கள்ளழகர் திருக்கோயில் என்பர்) அப்பன் சுந்தரராஜப் பெருமாள் மீது ஆறாக் காதல் கொண்டிருந்ததால், அப்பெருமாள் மீது அவர் அருளிய பாசுரங்களில் தேன் சொட்டும்.
இப்பூலகில் அவர் வாழ்ந்த 33 ஆண்டுகளிலேயே நான்மறைகளின் சாரத்தை கவிதை ரசம் சொட்டும் செந்தமிழில், திருவாய்மொழி, திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி ஆகிய கிரந்தங்கள் வாயிலாக நமக்கு அருளிய ஆதிகுரு ஆவார்.
இப்பாசுரத்தில் ஒளிரும், ஓர் ஒப்பில்லா தமிழ்க்கவிஞனின் கற்பனை வளம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அது மட்டுமல்லாமல், செம்மையாகக் கவிதைகள் இயற்றும் கவிஞர்கள் உள்ளத்தில் திருமால் வந்து தங்கி விடுகிறான் என்ற பாசுரச் செய்தி, பரமனுக்கு அடுத்தபடியாக, தமிழுக்கு எத்தகைய உயரிய இடத்தை ஆழ்வார் அளித்திருக்கிறார் என்பதை பறைசாற்றுகிறது அல்லவா!
தமிழைப் போற்றி வளர்த்ததில் வைணவ, சைவ பக்தி இலக்கியங்களுக்கு பெரும்பங்கு உண்டு என்பது நான் சொல்லித் தெரியவேண்டிய சங்கதி இல்லை!
செஞ் சொல் = செம்மையான சொற்கள் கொண்டு கவி பாடும்
கவிகாள் = கவிஞர்களே
உயிர் = உங்கள் உயிரை
காத்து ஆட் செய் மின் = பாதுகாத்துக் கொள்வீர்
திருமாலிருஞ்சோலை = திருமாலிருஞ்சோலையில் வாசம் செய்கின்ற
வஞ்சக் கள்வன் = ஏமாற்றுக்கார (சூது நிறைந்த) கள்வன் (deceitful but delightful fellow :-))
மாமாயன் = பெரிய மாயங்கள் அறிந்தவன் (குட்டிக் கண்ணனாக மண்ணை உண்டு யசோதைக்கு வாயில் உலகங்களைக் காட்டிய மாயம் ஒன்று போதுமே)
மாயக் கவியாய் வந்து = மாயமான கவிஞனாய் வந்து
என் நெஞ்சும் உயிரும் = எனது உள்ளத்திலும் உயிரிலும்
உள் கலந்து = ஒன்றறக் கலந்து
நின்றார் = என்னருகில் இருப்போர் கூட
அறியா வண்ணம் = அறியாத வகையில்
என் நெஞ்சும் உயிரும் = எனது மனதையும், உயிரையும்
அவை உண்டு = உண்டு
தானே ஆகி நிறைந்தானே = எனது அனைத்துமாய் நிறைந்து நின்றானே!
தேயாத புகழ் மேவும்……
பல்லவி
தேயாத புகழ் மேவும் திருமாலிருஞ்சோலை வளர்
மாயனைக் கேசவனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
ஆயர் குலத்துதித்த மாயக் கண்ணனை
காயாம்பூ வண்ணனை கமலநாபனை
சரணம்
மாயக்கவியாய் வந்தென் மனம் புகுந்தானை
ஓயாதென்னருகிருப்போரறியாவண்ணம்
தூயோனென்னெஞ்சமுமுயிருமுண்டு
மாயமாயெனையே ஆண்டு கொண்டவனை
No comments:
Post a Comment