இடர் களையும் பதிகம்
முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் அருளியது
பாடல் எண் : 03
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.
பொருள் விளக்கம் :
திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிச் சரண்புக அவனைக் கொல்ல வந்த வலிமை பொருந்திய கூற்றுவனைச் சினந்து, "என் அடியவன் உயிரைக் கவராதே" என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும் பூவும், நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.
பட அரவணிந்த……
பல்லவி
பட அரவணிந்த பரமசிவனே
விடமுண்ட கண்டனே எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
பட அரவின் மேல் துயிலும் கேசவன் நேசனே
சுடலைப்பொடி பூசிய நெடுங்களம் சிவனே
சரணம்
திடம் கொண்டுனைப் பணிந்த பாலன்
கடன் செய்துன்னடி தொழுது நிற்கும் பாலன்
இடர் களைய காலனைக் காலாலிடறிய
அடலேறே பூவொடு நீர் சுமந்துனைத் துதித்தேன்
No comments:
Post a Comment