ஹரிகோவிந்தா
வைகுண்டத்தில் ஒரு நாள் சற்று ஏகாந்தமாக அமர்ந்திருந்த மகாவிஷ்ணு, தம் அருகே பவ்யமாக நின்று கொண்டிருந்த கருடனிடம், கருடா, இந்த உலகில் எத்தனைவகையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார். மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் எம்பெருமானே! என்றார், பெரிய திருவடி.
இத்தனை கோடி மனிதர்களை மூன்றே பிரிவில் அடக்கிவிடலாமா? ஆச்சரியமாக இருக்கிறதே? எப்படி? என்று ஒன்றும் தெரியாதவர்போல் கேட்டார் திருமால். ஐயனே... தங்களுக்குத் தெரியாததில்லை. இருந்தாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். முதல் வகை மனிதர்கள், பறவையும் அதன் குஞ்சுகளும் போன்றவர்கள். பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு, இறைதேடி எடுத்துவந்து ஊட்டுவதை மட்டுமே கடமையாகச் செய்யும் பறவைக் குஞ்சுகளுக்கு தங்களுக்கு ஊட்டப்படும் இரைதான் தெரியும். தன் தாய், தகப்பன், உறவெல்லாம் எதுவும் தெரியாது. வளர்ந்ததும் அதுவாகவே பறக்க முயற்சி செய்யும் சில தோற்று விழுந்து மடியும், மீந்து போனவை வாழும் வரை வாழும். இந்த வகை மனிதர்கள், ஏழ்மையுடன் போராடுவார்கள். கிடைத்தால் உண்பார்கள் இல்லையா, பட்டினி, அவர்களுக்கு கடவுளைப் பற்றியே கூட தெரியாது. வாழ்வார்கள். மடிவார்கள்.
இரண்டாம் வகையினர், பசுவும் அதன் கன்றையும் போன்றவர்கள் பகவும் கன்றும் தனித்தனியே கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப்பார்த்தும் பசு கன்றைப்பார்த்தும் சத்தமிடும். தாயின் மடியிலிருந்து பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று, கன்றுக்குத் தெரியும். ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் சிறு கயிறு, அதனைத் தடுக்கும். கன்று இழுத்து இழுத்துப் பார்த்து, விடுபட வழி தெரியாமல் ஏங்கும். அது போல மக்களில் ஒரு சாரார் மோட்சத்தை அருளக் கூடியவள் நீங்களே என்பதை அறிவர். ஆனாலும் உம்மிடம் வர முடியாமல் பாசம் என்றும் கயிறில் மாட்டிக்கொண்டு இருப்பர். அவர்களது மனம் மட்டும் உம்மை எண்ணி ஏங்கித் தவிக்கும்.
மூன்றாம் வகையினர், கணவன், மனைவி போன்றவர்கள். முன் பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஒருவன், முதலில் அவளிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டான். ஆனால் அவளோ, உடையுடுத்துவதுமுதல், சமைப்பது வரை அனைத்தையும் அவனுக்குப் பிடித்த வகையில் செய்து பாசமும் பரிவும் காட்டி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள். அதன் பின்னர் அவன், அவள் அன்பில் கரைந்து ஒருபோதும் அவளைப் பிரியாமல் இருப்பதையே விரும்புவான். அதுபோல ஒரு சாரார் உம்மைக் காணாமலே பிறர்மூலம் உணர்த்தப்பட்டு, உம்மையே நினைத்து வாழ்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைத் தாங்கள் முதலில் சோதிக்கிறீர்கள். அப்போதும் அவர்கள் மாறாமல் பக்தி செலுத்துவது கண்டு, அவர்களை உங்களுடைய அருள் மழையால் நனைவிக்கிறீர்கள். எல்லாச் செயல்களிலும் உறுதுணையாக அவர்கள் அருகிலேயே இருக்கிறீர்கள்! சொல்லி முடித்த கருடனை அன்புடன் பார்த்துப் புன்கைபுரிந்தார். புருஷோத்தமன்.
ஓம் நமோ நாராயணாய !!!
படித்தேன்!ரசித்தேன்!பாடல் புனைந்தேன்!
பரந்தாமன் ஒருநாள்……
பல்லவி
பரந்தாமன் ஒருநாள் கருடனிடம் கேட்டான்
பரந்த இவ்வுலகில் எத்தனை வகை மனிதரென
அனுபல்லவி
நரர்களுள் மூன்று வகை உண்டென்ற பதிலை
அரவினெதிரி பறவையரசன் சொன்னான்
சரணம்
இரை தேடும் பறவை போல் உறவுடையோர் சிலர்
இரை தரும் தாய்ப்பறவை உறவறியாரவர்
தரை மீது ஏழ்மையுடன் வாழ்வார் சாவார்
இறையையும் அறியாமல் வாழ்வார் சாவார்
பசுவும் கன்றும் போல் சிலர் வாழ்வு
பசுவும் கட்டுண்ட சிசுவும் பசியறியும்
பசுபதி பாசமெனும் தத்துவத்துளிவையடங்கும்
வசுதேவனுனைச்சேர ஏங்கும் மனங்கள்
சதிபதியென வாழுபவர் சிலர்
பதியின் குறிப்பறிந்து வாழும் சதியை
பதி புரிந்து பரிவுடன் ஏற்பது போலருள்
நிதி தந்தரவணைக்கும் கேசவனும் நீயே
No comments:
Post a Comment