இருவினைப் பயன்களைய…..
பல்லவி
இருவினைப்பயன்களைய வரவேண்டுமெனவே
இருகரம் கூப்பி கேசவனை வேண்டினேன்
அனுபல்லவி
தருமம் தழைக்க பல அவதாரமெடுத்தவனை
திருவின் நாயகனை ஶ்ரீமன் நாராயணனை
சரணம்
திருத்தோள் நான்கும் சிவந்த வாயும்
கரு நிறமும் கமலக் கண்களும் கையில்
திருச்சக்கரமும் வெண்சங்குமேந்தும்
பெருத்த உருவமும் கொண்ட திருமார்பனென்
புறமறக் கட்டிக்கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறைமுறை யாக்கை புகல்ஒழியக் கண்டுகொண் டொழிந்தேன்
நிறமுடை நால்தடந்தோள் செய்யவாய் செய்ய தாமரைக்கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே
பொ-ரை :- புறத்திலே ஒன்றும் தோன்றாதவாறு நலமுறக் கட்டிக் கொண்டு வருத்துகின்ற கொடிய இரண்டு வினைகளாலே சரீரத்தில் முறை முறையாகப் புகுதல் தவிரும்படியாக, நிறத்தையுடைய விசாலமான நான்கு திருத்தோள்களையும் சிவந்த திருவாயினையும் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களையும் அறத்தையே செய்கின்ற சக்கரத்தைத் தரித்த அழகிய திருக்கையையும் கரிய மேனியையுமுடைய சுவாமியைக் கண்டுகொண்டேன் என்கிறார்.
No comments:
Post a Comment