தினம் ஒரு பாசுரம் -4
மாலையும் வந்தது; மாயன் வாரான்; மாமணி புலம்ப வல்லேறு அணைந்த;
கோல நல் நாகுகள் உகளும் ஆலோ! கொடியன குழல்களும் குழறும் ஆலோ!
வால்ஒளி வளர்முல்லைக் கருமுகைகள் மல்லிகை அலம்பி வண்டாலும் ஆலோ!
வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ! என்சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே?
திருவாய்மொழி
சூழல் விவரிப்பை வைத்துப் பார்க்கையில், இப்பாசுரம் ஒரு மாஸ்டர்பீஸ் என்பேன். பாசுரத்தில் கூறும் காட்சிகளை மனதில் நிறுத்தி கற்பனை செய்து பாருங்கள்! நம்மாழ்வாரின் ஒப்பில்லா பக்தி மட்டுமல்ல, அவரது கவித்துவம், மொழி வீச்சு, ஆழ்ந்த புலமை புலப்படும், இவற்றை ஆழ்வார் மிக எளிதாக கைக்கொண்டதற்கு காரணம் என்னவோ, கண்ணன் பால் அவர் கொண்டிருந்த, கடலுக்கு ஒப்பான பேரன்பே. ”அந்தி சாயும் சமயமாகி விட்டது. ஆனால், கருவண்ண மேனியன் எங்கு சென்றானோ, நான் அறியேன். கழுத்தில் கட்டிய பெரிய மணிகள் குலுங்கி ஒலியெழுப்பும் காளைகளுடனான புணர்ச்சிக்குப்பின், (தாய்மையை எதிர்நோக்கிய) உற்சாகத்தில், பசுக்கள் கிறுக்குத்தனமாக துள்ளிக் குதித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றன. புல்லாங்குழலின் இசை கூட என்னைக் கொடுமைப் படுத்துவதாகவே இருக்கின்றதே! நிலவைப் பழிக்கும், (மலர்ந்த) முல்லை, மல்லிகை, கருமுகை மலர்களுக்கிடையே வண்டுகள் சிறகடிக்கும், ரீங்காரமிடும் ஓசையைக் கேட்கிறேன். கடல் ஆர்ப்பரித்து விண் நோக்கித் தாவி எழுப்பும் பேரொலியையும் கேட்கிறேன்! அவனை விட்டுப் பிரிந்த நான், இனி எதைச் சொல்லுவேன்? எங்ஙனம் பிழைத்திருப்பேன்!!!”(அதி அற்புதமான இந்த இயற்கை விவரிப்பின் வாயிலாக, சிற்றின்பங்கள் சார்ந்த இவ்வுலக வாழ்க்கையிலிருந்து உய்வதையே திருக்குருகைப் பிரான் வலியுறுத்துகிறார்)
சுந்தரன் கேசவன்…..
பல்லவி
சுந்தரன் கேசவன் எங்கு சென்றானோ
உந்திகமலனின்றி நானெங்கனமுய்வேன்
அனுபல்லவி
விந்தையாய் சூல்கொண்ட பசுக்கள் துள்ளித் திரிந்து
மந்தையாய் மணியொலி கிளப்பி வீடு திரும்ப
சரணம்
வந்து விட்டதந்தி சாயும் மாலை நேரம்
அந்தமுடன் நிலவொளியில் மலர்களுக்கிடையே
சுந்தரமாய் க்கருவண்டொலி கிளப்ப இன்னும்
முந்தும் வானோக்கியெழும் கடலலைகளிரைச்சலிட
No comments:
Post a Comment