வைகுந்தவாசனே…….
பல்லவி
வைகுந்தவாசனே மணிவண்ணா உனைப்பணிந்தேன்
வைகல் வேளையில் வானவர் துதித்துப் போற்றும்
அனுபல்லவி
செய்கையால் பலப்பல அரக்கர்களை வீழ்த்தி
மெய்க்கீர்த்தி பெற்ற திருமாலே கேசவனே
சரணம்
வையத்துள் பலப்பல குறும்புகள் செய்தவனே
மெய்ப் பொருளே உனைநான் சிக்கெனப்பிடித்தேனே
பையத்துயிலும் பாற்கடல் வாசனே
தெய்வநாயகனே நீயுமெனைப் பற்றிடுவாய்
வைகுந்தா மணிவண்ணனே* என்பொல்லாத் திருக்குறளா என்னுள்மன்னி,*
வைகும் வைகல்தோறும்* அமுதாய வானேறே,*
செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
செய்குந்தா* உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.
முக்கியமான சொற்களுக்கு மட்டும் பொருள் தருகிறேன், டிவிட்டரில் @haranprasanna கேட்டதற்கிணங்க :-)
வைகுந்தா - பரமபதத்தில் வாசம் செய்பவன்
மணிவண்ணன் - நீலமாணிக்க நிறத்தவன்
பொல்லாத் திருக்குறளா - பொல்லாத குறும்புகள் செய்பவன்
மன்னி - ஒன்றி நிலைபெற்று விடுவது
வைகும் வைகல் தோறும் - விடியும் காலை ஒவ்வொன்றிலும்
வானேறு - தேவர்களின் அரசன்
”குந்தா” என்பதற்கு 3 பொருள் கள் உண்டு.
வெண்மையான குருக்கத்தி மலர் போன்றவன் - தூய்மையானவன்
குந்தம் வேல் ஆயுதத்தையும் குறிக்கும் (வேலால், அசுரர்க்குத் தீமைகள் செய்பவன்)
வைகுந்தப் பதவியை (மோட்சத்தை) அளிக்க வல்லவன்
சிக்கென - அழுத்தமாக
வைகுந்தன், மணிவண்ணன் என்ற நாமங்களைக் கொண்ட, குறும்புகள் பல செய்த, கோள்கள் பல சொன்ன, பொல்லாதவனே! அமுதத்துக்கு ஒப்பான வான் அரசனே! என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் என்னுள் நிறையவும், உன்னைச் சரணடைந்தவர்களின் துயர் நீக்கவும், அரக்கர்களை அழிக்கவும் உனை வேண்டினேன். உன்னைப் பற்றிய என்னை நீயும் அழுத்தமாகப் பற்றிக் கொள்வாயாக!
இத்திருவாய்மொழி பாசுரத்தில், பரமனுக்கு மிக மிக உகந்த அடியாரான நம்மாழ்வார், பக்திப் பேருவகையில், பெருமாளுக்கே instructions தருகிறார் :-)
முதலில், பெருமாள் தன் மனதில் நீங்காமல் தங்கி (மன்னி) விட வேண்டும்
அடியவரின் குறைகளை நீக்கி, தீயவரை (அசுரர்க்கு) அழிக்க வேண்டும்
தன்னைப் பெருமாள் சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஆழ்வார் பெருமாள் திருவடியை பற்றி விட்டார் (பூரண சரணாகதி) எனினும், பரமனும் தன் பங்குக்கு தன்னைக் கைக்கொள்ள வேண்டும் என்கிறார். இதன் தத்துவம் பரந்தாமன் விருப்பத்தின் பேரில் தான் பரமபதம் (மோட்சம்) வாய்க்கும் என்பது, அடியார் எத்தகைய முயற்சிகள் மேற்கொண்டாலும் அவன் விருப்பமே அதற்கு வழி வகுக்கும்! சிலபல சமயங்களில், அடியாராகவே இல்லாமல் / எவ்வித முயற்சியும் கைக்கொள்ளாமல் கூட சிலருக்கு மோட்சம் கிடைக்கும், பெருமாளுக்கு விருப்பமிருக்கும் பட்சத்தில் :-)
No comments:
Post a Comment