Friday, 24 March 2023

கண்ணன்…..

 கண்ணார கண்டேன் கண்ணனை -2 பல தடைகளை தாண்டி நுழைவாயில் உள்ளே சென்று மீண்டும் ஒரு செக் . ஆம் . சீவேலி  .  ஆகையால் உள் பிரகாரத்தில் ஒதுங்கி  நின்றபோது சின்னகுயில் சித்ராவை பார்த்தோம்.

 நீண்ட தந்தங்களுடனான பெரிய யானை சன்னதிக்கு நேரே வந்து நின்றது . சில பூஜைகள் நடைபெற்றது. கூட்டம் அதகம் ஆகையால் அடியேனுக்கு சரியாக தெரியவில்லை. சிறிது நேரத்தில் யானை தனது கால்களை மடித்து  நம்பூதிரி ஏற லாவகமாக நின்றது . உள்ளிருந்து வந்தான் குருவாயூரப்பன். ஆஹா யானை மீது ஒய்யாரமாக குட்டி கிருஷ்ணன் ஆனந்தமாய் மந்தஹாச புன்னகை தவழ  , அந்த தாமோதரனை அணைத்தபடி நம்பூதிரி  . இவர்களை ஆனந்தமாய் சுமந்தபடி அசைந்தாடி கஜராஜன் நடை போட , கண் கொள்ளை காட்சி . இவர்களுக்கு முன் விளக்கேந்தியபடி ஒருவரும் பின்னே இருவரும் வந்தனர் . இவர்களை  மக்கள் ஹரே ராம ஹரே கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டே தொடர்ந்தனர். அடித்த வெயிலை யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை. கால்கள் அவன் பின்னால் தானாக நடைப்போட்டன. நாம கோஷம் முழங்க குருவாயூரப்பன் வருவது மெய்சிலிர்க்க வைத்த  தருணம்.   மிக அருகில்  சிறிய உற்சவ மூர்த்தியை  நான்கு திருக்கரங்கள் இடக்கையில் சங்கு ஏந்தி  வலக்கையில் சக்கரமும் ஏந்தி ஒத்த மாலை கழுத்தில் கதாயுதம் தாங்கி இடுப்பில் அரைஞாண் கயிறு இசைபாட  மூன்று அடுக்கு குடையின் கீழ்  ,வெயில் பட்டு தங்கம் மேலும் ஜொலிக்க மந்தஹாச புன்னகை தவழ  வந்து என் நெஞ்சில் குடிபுகுந்தான் அச்சுதன். ( எத்தனை தடங்கல்கள் . அத்தனைக்கும் பதிலாக இந்த புறப்பாடு தரிசனம் பாக்கியம் பரம பாக்கியம். வீடியோவில் உள்ள காட்சியை கண்ணால் மட்டும் படம் பிடித்தேன் . நேரில் கண்டேன். வீடியோ உபயம் குகூள்) பிரதட்சணம் முடித்து  கலைத்து போய் உள்ளே போக, பதினைந்து நிமிடத்தில் பொது மக்களை தரிசிக்க உள்ளே அனுமதித்தனர். குட்டி கிருஷ்ணாவுக்கு திருமஞ்சனம் . அதனால் திரு ஆபரணங்கள் சார்த்தவில்லை . கண்ணார கண்டு  நெஞ்சார உண்டு வாயார கதறினேன் கண்ணா கண்ணா .அங்கேயும் துவாரபாலகர்கள் போல இரண்டு லேடீஸ் வா அம்மே என்று கை பிடித்து இழுத்து தள்ள கணபதி சன்னதியில் விழுந்தேன் . அதில் ஒருவர் மட்டும் கொண்டு போன வெண்ணெய் உருகுவது கண்டு  துடைக்க துணிக் கொடுத்தார்.

கணபதியை சேவித்து கொஞ்சம் நகர்ந்தால் நம்ம ரெங்கன் ஒய்யாரமாக பூதேவி தாயார் மடியில் தலை வைத்து சயனம் . திருவடியில் ஸ்ரீதேவி தாயார். பரிவார தேவதைகளுடன் காட்சி . எங்கு சுத்தினாலும் ரெங்கனை சேவி . அது இது தானா . பொறுமையா நின்னு நிதானமா சேவித்து வெளியே வர தாமரை கண்ணனை கண்டோ  என சேச்சி விளிக்க அது எதானோ என்று தேட சிக்கவே இல்லை. பார்த்தால் சுவரில் சித்திரமாக "யான் இங்குண்டு "என சிரிக்கிறான் கள்ளன். திருப்தியா சேவித்து உள் பிரகாரம் விட்டு வெளி வந்து கொஞ்சம் மூச்சு விட்டோம் .

பகவதி அம்மன் சேவித்து மீண்டும் லைன். முதல்லேருந்தா ..........

பிகு : நீங்களும் என்னுடன் சேவிக்க நினைத்து  ஏதோ  பகிர்நதுள்ளேன். யானைகளின் பெயர்கள், உற்சவத்தின் பெயர் இன்னும் நிறைய தெரிந்துக்கொள்ள ஆசை உங்கள்  உமா என்கிற சரண்யா, ஸ்ரீரங்கம்

                                                       கண்ணன்…..


                                                           பல்லவி

                                   கண்ணன் குருவாயுரப்பன் பவனிவரக்கண்டேன்

                                   கண் முன்னே ஒளிவடிவில் காட்சி தரும் கேசவன்

                                                       அனுபல்லவி

                                   பண்ணிசையும் மேள தாளங்களும் முழங்க

                                   மண்ணையுண்ட வாயன் தண்மதி முகத்தோன்

                                                          சரணம்

                                   அண்ணாந்து பார்க்கும் வண்ணம் அழகிய கஜராஜன்

                                   சன்னிதியின் முன் நிற்க அதிலேரி நம்பூதிரி

                                   தன் கரத்தில் தாங்கும் குருவாயுரப்பனெனும்        

                                   சின்னக் கண்ணனழகுடனே கொலுவிருக்க     


                                   முன்னே விளக்குடனும் பின்னே இருவர் வர    

                                   நாராயணாவெனும் நாம முழக்கங்களுடன் வர

                                   அருகில் உற்சவர் நான்கு திருக்கரங்களுடனே

                                   சங்கு சக்கரமும் கதையும் கரத்திலேந்தி


                                   இடுப்பில் அரைஞாண் அழகுடனிசைபாட      

                                   அடுக்கடுக்கான மூன்று குடையின் கீழ்

                                   தங்கப் பட்டாடை வெயிலில் பள பளக்க

                                   அங்கம் தக தகக்க வருமந்த அச்சுதன்                                             


           

No comments:

Post a Comment