Friday, 3 March 2023

செம்பொன்னரங்கனே……


                                    செம்பொன்னரங்கனே……


                                            பல்லவி

                           செம்பொன்னரங்கனே திருவரங்கநாதனே

                           நம்பியுனைத்துதித்தேன் ஶ்ரீ நரசிம்மனே

                                           அனுபல்லவி

                           உம்பர் முனிவர் பணி தேவாதி தேவனே

                           வெம்பவக் கடல் கடக்க நீயேயெந்தன் துணை

                                               சரணம்                           

                            நம்பத்தகுந்த அம்புயநாபனே

                            அம்பரம் நடுவுறங்கும் எம்பிரான் கேசவனே

                            கம்பமுடனலறிய கரியின் துயர் தீர்த்தவனே

                            ஊழி முதல்வனே உலகேழுமாள்பவனே                              

                            

 நரசிம்ம சரணாகதி

அரங்கனின் பெருமைகளைப் பேசிக் கொண்டே வந்த பெரியாழ்வாருக்கு, தன் மனம் ஐம்புலன்களிலே சென்றதைக் குறித்து வெறுப்புக் கொண்டு, 'என் பிழையைப் பொறுக்க வேண்டும்; எனக்கு அருள் செய்ய வேண்டும்' என்று, வாக்குத்தூய்மை என்ற திருமொழியின் மூலம் அரங்கனை வேண்டுகின்றார்.

நம்பனே! நவின்றேத்த வல்லார்கள்* நாதனே! நரசிங்கமதானாய்! உம்பர்கோன்! உலகேழுமளந்தாய்!* ஊழியாயினாய்! ஆழி முன்னேந்தி கம்ப மா கரி கோள் விடுத்தானே!* காரணா! கடலைக் கடைந்தானே! எம்பிரான்! என்னை ஆளுடைத்தேனே!* ஏழையேன் இடரைக் களையாயே.

வாக்குத்தூய்மை 5-1-9

நம்பத் தகுந்தவனே! நாவினால் அவனை வணங்குபவர்களுக்கு அன்பனே! நரசிம்ம அவதாரம் செய்தவனே! தேவர்கள் தலைவனே! ஏழு உலகங்களையும் அளந்தவனே! பிரளய காலத்தில் இருந்தவனே! முன்பு சக்கரத்தை ஏந்தி, நடுங்கும் பெரிய யானையின் துயர் நீக்கியவனே! உலகப் படைப்புக்குக் காரணமாய் இருப்பவனே! கடலைக் கடைந்தவனே!  எனது தலைவனே! அடிமையான என்னை ஆளும் போக்கியம் உடையவனே! இந்த ஏழையின் துன்பத்தை நீக்குவாயாக!

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், இந்தப் பாசுரத்தில் பெரியாழ்வார் இறைவனின் திருவிளையாடல்களைக் போல இருக்கும். ஆனால், உண்மையில் இந்தப் பாசுரம், சரணாகதிப் பாசுரம்!  நாம் ஒருவரிடம் சரணடைய வேண்டுமானால், நமக்குத் தான் சில குணங்கள் வேண்டும் என்று நினைக்கிறோம்! ஆனால், யாரிடம் சரணடைகிறோமோ அவருக்கும் சில குணங்கள் (9) இருக்க வேண்டும்!  இந்த குணங்களை, கதைகள் மூலம் (நமக்கு?!) சொல்லி, 'இந்த குணங்கள் உன்னைத் தவிர வேறு யாரிடமும் இல்லை; எனவே தான் உன்னைச் சரணடைந்தேன்! எனக்கு அருள் செய்!' என்கிறார் பெரியாழ்வார்!

நாம் சரணாகதி அடைபவர், முதலில் நம் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருக்க வேண்டும்!

பதிலுக்கு எதுவும் எதிர்பாராமல், நமக்கு உதவி செய்வதையே நோக்கமாகக் கொள்பவன், எம்பெருமான் ஒருவனே! அவனே, எல்லாக் காலங்களிலும், எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் நம்பத் தகுந்தவன்!

அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான் - அவனிடம் நாம் செல்ல வேண்டும்! அவ்வளவே!

(இப்படி, பதிலுக்கு எதுவும் எதிர்பார்க்காது, நம்பி வருபவர்களுக்கு, மழை போல் அருளைப் பொழியும் அவன் குணத்திற்கு, அவாப்த ஸமஸ்த காமத்வம் என்பர் வடமொழியில்)

சில சங்கடங்களால், அவனிடம் செல்ல இயலவில்லை என்றால் என்ன செய்வது

அப்படி ஒரு சங்கடம் சிலருக்கு உண்டு! திரௌபதியைப் போல!

அந்தச் சபையினில் அவள் நிலைமை? இருந்தாலும் சங்கடம்! தன் மானம் பறிபோகிறது! வெளியே ஓடிச் சென்றாலும் மானம் போய்விடும் - கணவன்(கள்) சொல்லைத் தட்டியவள் என்று!

அவளால் முடிந்த மனித முயற்சி எல்லாம் செய்து விட்டாள் அவள்! கடைசியில், அவளுக்கு (நம் எல்லோருக்கும் தான்) இருக்கும் ஒரே வழி - அவனைக் கூப்பிடுவது தான்!

அவனை நம்பி, அவள் 'கோவிந்தா!' என்றழைக்க, அவன் வரவில்லை!

இந்தச் சின்னக் காரியத்துக்கு அவன் வரத் தேவையில்லை என்று நினைத்தான் அவன்! வந்தது, அவளுக்கு அந்த சமயத்தில் மிகத் தேவையானது! நீஈஈஈஈஈஈளமான புடவை!

'வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கவில்லை', 'நேரில் வந்து அழைக்கவில்லை', ’முறையாக அழைக்கவில்லை', ’அவள் கல்யாணத்திற்கு என்னை அழைக்கவில்லை', ’என் வீட்டுக் கல்யாணத்திற்கு அவர்கள் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை', ’ஏன் முதலிலேயே என்னைக் கூப்பிடவில்லை?', போன்ற கோபம் எல்லாம் இல்லை அவனுக்கு!

கூப்பிட்ட ஒரே காரணத்திற்காக, உதவி செய்தான் அவன்!

திரௌபதிக்கு அன்று மானப் பிரச்சனை என்றால், பிரகலாதனுக்கோ, உயிர்ப் பிரச்சனை!

பின்னே, சிறிய மலையுடன், நாக பாசத்தால் கட்டி, கடலில் எறிந்தால், இருக்காதா என்ன!

அந்த சமயத்தில், பிரகலாதன் செய்யக் கூடியது - செய்தது - ஒன்று தான்! அவன் நாமத்தைச் சொல்வது!சொன்னான் அவன் - பிரகலாத ஸ்துதியை! உயிர் தப்பியது!

இப்படி, பிரகலாதனைப் போல், திரௌபதியைப் போல், நன்கு கற்று, அவன் பெயரைச் சொல்பவர்களுக்கு ('நவின்று ஏத்துவார்களுக்கு') அவன் பிடித்தவன் ('நாதன்') என்கின்றார் பெரியாழ்வார்!

ஒரு முறை அவன் நாமத்தைச் சொல்லப் பழகி விட்டால், பின் அவன் நம்மை விடமாட்டான்! அவன் அருளாவிட்டாலும், அவன் நாமம் அருளும்!

அவ்வளவு ஸெளலப்யம் (எளிமை) அவன்!

எனவே, அவதாரங்கள் பல இருந்தாலும், நரசிம்மனையே முதலில் அழைத்து, அவனிடம் சரணாகதி செய்கிறார் பெரியாழ்வார்!

No comments:

Post a Comment