பகவானை கருணைக்கடல் என்பர். கடலிலிருந்து எவ்வளவு தண்ணீர்
எடுத்தாலும், கடல் தண்ணீர் குறைவதில்லை; அதுபோல், பகவான்
யாருக்கு எவ்வளவு கருணை காட்டினாலும், அவனிடமுள்ள கருணை
குறைவதில்லை.
-
அவனது கருணையைப் பெற, அவனை வழிபடலாம் நாம். அதை விட,
அவனையே சரணடைந்து விட்டால் போதும், காப்பாற்றுகிறான் அவன்.
அர்ஜுனனுக்கு இதைத்தான் சொன்னார் பகவான்… “அர்ஜுனா… என்னை
சரணடைந்து விடு; உன்னை நான் காப்பாற்றுகிறேன்…’ என்றார்.
-
இதை, சரணாகதி தத்துவம் என்கின்றனர். ராமாயணத்தில்
இந்த சரணாகதி தத்துவம் உள்ளது. ராமனை சரணடைந்து உயிர்
தப்பினான் காகாசுரன்; ராமனை சரணடைந்து ராஜ்ய சுகம் பெற்றான்
விபீஷணன். இப்படியாக சரணாகதிக்கு ஏற்றம் உள்ளது. நம்மால் எதுவும்
செய்து விட முடியாது.
-
அதனால், “பகவானே… நீதான் கதி. உன்னையே சரணடைகிறேன்.
நீ என்ன செய்கிறாயோ, அதை செய்… நான் ஏற்றுக் கொள்கிறேன்…’ என்று
பகவானை சரண டைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை.
“எல்லாம் என் சாமர்த்தியம்; பகவானால் என்ன செய்ய முடியும்?’ என்று
வீம்பு பேசினால், தோற்பது நாம் தான்.
-
பனைமரம் நிமிர்ந்து நின்றாலும், பெருங்காற்று அடிக்கும்போது வேரோடு
பெயர்ந்து விழுகிறது. அதே சமயம், நாணல் வளைந்து கொடுத்து, மீண்டும்
நிமிர்ந்து நிற்கிறது. அதுபோல, பகவானிடம் வீராப்பு பேசி பயன் இல்லை;
-
எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்து, சரணாகதி ஆகிவிட்டால் போதும்,
அவன் காப்பாற்றுவான்.
ஏனென்றால், அவன் கருணைக் கடல். ஒரு சின்ன தீபத்திலிருந்து ஆயிரம்
தீபம் ஏற்றினாலும், சின்ன தீபத்தில் ஜோதி குறைவதில்லை.
அது போல், பகவான் எவ்வளவு பேருக்கு கருணை காட்டினாலும்,
அவனிடமுள்ள கருணை குறைவதேயில்லை.
-
நாம் செய்ய வேண்டியது சரணாகதி ஒன்று தான். பக்தியுடன், “பகவானே…
நீதான் கதி! என்னால் ஒன்றுமில்லை…’ என்று சொல்லி, அவனை சரணடைந்து
விட்டால் காப்பாற்றுவது அவன் கடமை.
-
சரணாகதி ஒன்று தான் பகவானின் கருணையைப் பெற வழி.
உன்னைச்சரணடைந்தேன்….
பல்லவி
உன்னைச்சரண டைந்தேன் ஶ்ரீராமா
என்னைக் காத்தருள வேண்டுமென வேண்டி
அனுபல்லவி
பன்னக சயனன் நாராயணனும் நீயே
சென்ன கேசவனாய் நான் வணங்கும் மாதவனே
சரணம்
எடுக்க எடுக்கப் பெருகும் சுனை நீர் போலவே
கொடுக்க க்கொடுக்கப் பெருகுமுன் கருணை
அடுத்தடுத்து எத்தனை தீபங்களேற்றினாலும்
கடுகளவும் குறையாத ஒளிவிளக்கு நீயன்றோ