Tuesday, 12 August 2014

திரிவிக்கிரமன்


                                       திரிவிக்கிரமன் 


                                                  பல்லவி

                 மூவரும் ஒன்றாகிப் பாடிப்பரவிய
                  கோவிலூர் உலகளந்த பெருமானைத்  துதித்தேன்


                                                 அனுபல்லவி

                   மூவடி மண் கேட்டு மாவலியை  வென்றவனை
                  கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தவனை

                                                   சரணம்
             
                    தேவி பூங்கோவல் நாச்சியாருடனிருக்கும்
                    தேவாதி தேவனை பரவாசு தேவனை
                    பாவங்கள் தீர்ப்பவனைக் கேசவனை மாதவனை
                    மூவுலகும் பணிந்தேத்தும் ஸ்ரீமன் நாராயணனை





திருக்கோவலூர் ! ஒரு நாள் இரவு பொய்கை ஆழ்வார் நுழைகிறார். நல்ல மழை. ஒரு வீட்டின் கதவை தட்டி தங்க இடம் கேட்கிறார். அவர்கள் இடைகழியில் ( ரேழி என்று சொல்லப்படும் முன் வாசல் அறை ! ) தங்கிக்கொள்ள சொல்லிவிட்டு, உள்ளே சென்று விடுகின்றனர். சிறிது நேரம் கழித்து பூதத்தாழ்வார் மழையில் நனைந்து வந்து இடம் கேட்க, பொய்கையார் " இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம் !" வாருங்கள் என்று உள்ளே அழைக்கிறார். இன்னம் சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் வந்து கதவை தட்டி இடம் கேட்க, பொய்கையார் " இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் !" உள்ளே வாருங்கள் என்று அழைக்க, மூவரும் அந்த இடை கழியில் நின்று கொண்டு, ஸ்ரீமன் நாராயணனது கல்யாண குணங்களை பற்றி போற்றி பேசிக்கொண்டிருந்தனர். அந்த இருட்டில் தங்களை நாலாவதாக யாரோ நெருக்குவது போல் தெரிய, யார் என்று கண்டு பிடிக்க விளக்கு ஏற்றினார்கள் அழகிய தமிழில் !

பொய்கையார் " வையம் தகளியா, வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக " என்று இந்த பூமியை அகலாகவும், திரை கடலை நெய்யாகவும், சூரியனை விளக்காகவும் - ஒரு அற்புத விளக்கை ஏற்றுகிறார்.

பூதத்தார் " அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தை இடு திரியாக, நன்புருகி ஞான சுடர்விளக்கு " ஏற்றுகிறார்.

பொய்கையார் ஏற்றிய விளக்கு நமது கண்களுக்கு புலனாககூடிய விஷயங்களை வைத்து சொல்லப்பட்ட விளக்கு - புற இருளை நீக்க உதவும் விளக்கு ! பூதத்தார் ஏற்றிய விளக்கு அன்பை அகலாகவும் ஆர்வத்தையே நெய்யாகவும், இன்புருகு சிந்தையை திரியாகவும் வைத்து ஏற்றப்பட்ட ஞான விளக்கு - இது அக இருளை போக்குவதற்கு.

இரண்டு விளக்குகளும் ஏற்றப்பட்டவுடன் அந்த வெளிச்சத்தில் வந்திருப்பவரை அடையாளம் கண்டு சொல்கிறார் பேயாழ்வார். ஆம் ! வந்திருந்தவர்கள் திருக்கோவலூர் த்ருவிக்ரமனாகிய பெருமாளும் அவரது மகாலட்சுமி தேவியும் தான் ! " திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் .... என்னாழி வண்ணன் பால் இன்று ! " என்று பாடி மகிழ்கிறார் பேயாழ்வார்.

திருக்கோவலூர் பெருமானுக்கு "தேஹளீசர் " என்று திருநாமம். அதாவது "இடைகழியே தோன்றிய பெருமான் ! "

இந்த மூன்று ஆழ்வார்களும் "முதல் ஆழ்வார்கள் " என்று அழைக்க படுகின்றனர் ! இவர்கள் அவதரித்தது ஐப்பசியில் - முறையே திருவோணம் / அவிட்டம் / சதயம் நட்ஷதிரங்களில் ! இவர்கள் ஒவ்வொருவரும் பாடிய 100 பாசுரங்கள் முறையே "முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி " என்று வழங்கபடுகின்றன.

முதலாழ்வார்கள் திருவடிகளே சரணம் ! தேஹளீசர் திருவடிகளே சரணம் !





No comments:

Post a Comment