Friday, 1 July 2022

யமுனை நதிக்கரையில்


   யமுனை நதிக்கரையில்……


         பல்லவி

 யமுனை  நதிக்கரையில் குழலூதி நிற்கும்        

 ஜகந்நாதன் கடைக்கண்கள் எனைக் காக்க வேண்டும்

       அனுபல்லவி

அமுதம் ததும்பும் இடைக்குல கோபியரின் 

கமலமலரிதழைச் சுவைக்கும் வண்டாய் விளங்கும்

        சரணம்

கமல மலர்க்கரங்களில் புல்லாங்குழலேந்தி

தமது சிரத்தில் மயில் பீலியணிந்து

அமரேந்திரன் சிவன் நான்முகன் கணபதி 

கமலாசனி துதிக்கும் கமல மலர்ப் பாதன் 


சமுத்திரக் கரையில் நீலாச்சல  மலைமீது

அமர்ந்து சகோதரர் பலராமர் மற்றும்

அழகுத் தங்கை சுபத்திரையுடனே

அமரருக்கீடான அடியார்க்கு காட்சி தரும்


கமல மலரைப் பழிக்கும் திருமுகம்

கருநீல மேனி கருணைக் கடலவன்

திருமகள் கலைமகள் பணிந்திடும் திருமகன்

அருமறை உபநிடதங்கள் போற்றும்


அமுதக்கடலுதித்த திருமகள் நாயகன்

தேர்வலம் வருகையில் இன்னிசை முழங்க

வேதியர் பாங்குடன் வேதங்களோதி வர

ஆதரவுடனே அவர்களை நோக்கும் 


கமலக்கண்ணனின் பாத கமலங்கள்

கமலாசனனின் சிரசை அலங்கரிக்க

கமல மலர்க் குளமெனும் ராதாராணியை

கமலநாபன் கரங்கள் தழுவிட


அமர பதவியோ பொன்னோ பொருளோ

அழகிய தாரமோ எதுவும் வேண்டேன்

உமாபதி சிவன் துதிப்பது போலவே

கேசவனவன் நாமம் துதிக்கும் வரம் தந்து


சமுத்திரமெனவே  திகழுமெந்தன்

பாவச்சுமைகள் நீங்கிட வேண்டியும்

பவவினை பயன்கள் விலகிடச் செய்யவும்

அமரருக்கரசன்  தேவாதி தேவன்


No comments:

Post a Comment