Friday, 22 July 2022

எதுவும் சதமல்ல……

 ஶ்ரீ அபயாம்பிகை சதகம்-

பாசுரம்-79-


  தனதென் றிருப்பர் உலகமதில் 

              தந்தை யோடுதாய் தனதாமோ

   தனந்தான் தனதோ அகம்தனதோ

               தழுவும் மனையாள் தனதாமோ

   எனதென் றிருந்த பாழும்உடல்

                இதுதான் தனதோ மனம்தனதொ

   எல்லாம் உலக விருத்தியினால்

                 இதம்போற் கரவில் இசைந்திருப்ப

   உனது பதத்தை யான்பிடித்தேன்

           உணர்ந்தோத்திருக்க வகையெடுத்தேன்

   உடலும் மனமும் வினைவசத்தால் 

            ஒடுங்கி தளர்ந்து துடிக்குமையோ

    மனதின் நீங்கி எனதுவச

              மாகக் கருணை யதுபுரிவாய்

    மயிலா புரியில் வளரீசன்

               வாழ்வே அபயாம் பிகைத்தாயே.

( அருளியவர்- நல்லத்துக்குடி கிருஷ்ணமூர்த்தி ஐயர்) 

           என்தாய், தந்தை, கைபிடித்த மனைவி, எனது மகன்,மகள், உறவினர்,என 

  செல்வம், வீடு மனை, தாயே என கர்வத்துடன்,சுற்றி, சுற்றி வந்தேன் தெரிந்து கொண்டேன், இவை எல்லாம், நிரந்தமில்லை,கண நேரம் இன்பம் தரும்,போதை என்று.விட்டில் பூச்சி விளக்கின் ஒளிவட்டத்தை,சுற்றி, சுற்றி வந்து அதிலேயே,மடிவது போல்,வாழ்கையில் இன்பம் தருவது போல், துன்பத்தையே தருகின்றது.

 தெரிந்து கொண்டேன் தாயே,எனவே  உனது மலர்பாதங்களை பற்றிக்கொண்டேன்.

   உலக இச்சையில் மனதை பறிகொடுத்து, மயங்கி,உடலும்,மனதும், சோர்வுற்று,ஓய்ந்து,

எல்லாம் வினைப்பயன் எனத் தெரிந்து கொண்டேன்.

 தாயே; மனதின் அழுக்குகளை,நீக்கி என் மனதை, என் வசமாக்கி,உனது இரு மலர்ப் பாதங்களை,பிடித்து, நின்று நிரந்தர ஆனந்தத்தை தரும்,முக்தியை தந்தருள்வாய்,

மயிலாடுதுறையின், ஈசனின் மனதிற்கினிய மயிலே, தாயே, அபயாம்பிகையே, சரணம்,

சரணம். கருத்து- சந்தானம் மாம்பலம்.


                                                  எதுவும் சதமல்ல……


                                                         பல்லவி

                                         எனதென்று எதுவும் சதமல்ல தாயே

                                         உனதருளாலறிந்து கொண்டேன் அபயாம்பிகையே

                                                       அனுபல்லவி 

                                         வனமாலையணிந்த கேசவன் சோதரி

                                         உனது பதம் துதித்தேன் எனை நீயே ஆதரி

                                                         சரணம்

                                        தனம் புகழ் பதவி தந்தையும் தாயும்

                                        எனது உடலென்று இருப்பது எதுவும்

                                        மனவெளியில் தெரியும் மாயையன்றி வேறில்லை

                                        கனவே இவ்வாழ்வென்று தெரிந்து மனம் தெளிந்தேன்


                                       விட்டில் பூச்சியென்று அறியாது நானும்

                                       பட்டாம் பூச்சியென உலக சுகங்களில்

                                       மட்டற்ற மகிழ்வோடு சுற்றித்திரியுமெனை

                                       கட்டவிழ்த்தென் இருள் நீக்கி ஆண்டருள்வாயே            

                                       

                                       

                                    

No comments:

Post a Comment