தண்மதி பிறையணிந்த…..
பல்லவி
தண்மதி பிறையணிந்த அம்பிகையுனையே
எண்ணத்திலிருத்தி மலர்த்தாள் பணிந்தேன்
துரிதம்
சுரபதி பசுபதி சரச்வதியின்பதி
ஶ்ரீபதி ரதிபதி தேவ சேனாபதி
கணங்களின் அதிபதி நிதிபதி அனைவரும்
கரம் பணிந்தேத்தும் திரிபுரசுந்தரி
அனுபல்லவி
பெண்ணணங்கே பேரழகே கேசவன் சோதரி
விண்ணோரும் மண்ணோரும் போற்றுமீச்வரியே
சரணம்
வண்ண மஞ்சள் பூசிய வடிவான திருமுகத்தில்
திண்ணமுடன் அழகுத் திலகமிட்டு த்தலை சீவி
கண்களுக்கழகுடன் அஞ்சனம் தீட்டி
கன்னத்தில் கரிய திருஷ்டிப் பொட்டு வைத்து
காதிரண்டில் குண்டலமும் வைரத்தோடுமிட்டு
வெண்சங்குக் கழுத்தில் வைரமணி மாலையிட்டு
பொன் மாலை பூ மலை அணிமணிகள் புனைந்து
தலைசீவி பின்னலிட்டு தாழம்பூவுடனே
மலர்ந்த மலர் பலவுமதனுடனே சூடி
நெற்றிச்சுட்டியிட்டு காதில் மாட்டலிட்டு
தாமரை, மல்லிகைப் பூமாலையணிந்து
இல்லாத இடுப்பில் ஒட்டியாணம் பூட்டி
கமல மலர்ப் பதங்களில் செம்பஞ்சு பூசி
வெள்ளிக் கொலுசுடன் மெட்டியுமிட்டு
மின்னும் வைர மூக்குத்தியுடனே
என் மனக் கோயிலில் எழுந்தருள வேண்டினேன்