வாசகன் நினைவுகள் (1)..........
கோவிட்19 ஊரடங்கு , லாக் டௌன் என்று வீட்டிலேயே முடங்கி கிடக்கும்
நேரத்தில், சரி, பழைய புத்தகங்கள், சேர்ந்து போன பழைய பேப்பர்களைப் பார்த்து “ பழையன
கழிதலை செய்வோம் எனத் தொடங்கினேன். அப்ப கிட்டிய சுவாரசியமான( எனக்கு ) வற்றை
முகநூலில் பதிவு செய்யலாமென்று தொடங்கினேன். அதன் விளைவுதான் இந்தப் பதிவு.
என் இனிய நண்பன் மாலனோடு தொடங்கிய வாசகன் பத்திரிகையின் பிரதி ஒன்று கிட்டியது.
அதனால் இந்த பதிவை “ வாசகன் நினைவுகள்...” என்று துவங்கியுள்ளேன்.
ஆஹா அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே ...நண்பனே...
1972 ஆம் வருடம் என்று நினைவு. ஒரு நாள் மாலைப் பொழுதில் சென்னை மாநகரப் பேருந்தில்
அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தேன். பேருந்தில் அதிக கூட்டமில்லை.
நானமர்ந்தவண்ணம் பயணித்திருந்தேன். கையில் வைத்திருந்த அந்த மாதக் கணையாழிப்
பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அருகில் சம வயதுள்ள ஒருவர் நின்றபடி பயணம்
செய்து கொண்டிருந்தார். அவர் கையிலும் அம்மாத கணையாழி இதழிருந்தது. நான்
அண்ணாந்து பார்த்து புன்னகைத்தேன். அவரும் மெலிதாகப் புன்னகை சிந்தினார். அடுத்த
நிறுத்தத்தில் என்னருகில் அமர்ந்திருந்தவர் இறங்கினார். நின்றிருந்தவரை அமருமாறு
சமிஞ்ஞை செய்தேன். அருகே அமர்ந்து கொண்டார். கையிலிருந்த கணையாழியில் நான்
எழுதியிருந்த கடிதம் பிரசுரித்திருப்பதை காண்பித்தான். அவர் அதை வாங்கி தானெழுதிய
கவிதை வந்திருப்பதை காண்பித்தார். தன்னை நாராயணன் என்று அறிமுகப்படுத்திக்
கொண்டார். அப்படி பேருந்தில் கணையாழியைப் பாலமாக க்கொண்டு தொடங்கியது எங்கள்
நட்பு. அதன் பிறகு நிறைய நிறைய மாலைப் போதுகளில் சந்தித்துக் கொண்டோம்.
இப்படி நெருங்கிப் பழகிய காலத்தில் நாமேன் ஒரு சிறு பத்திரிகை தொடங்கக் கூடாது
என்று இருவருமே ஒருமுகமாக சிந்தித்தோம். அப்படி தோன்றியது தான் “ வாசகன்” எனும்
சிற்றிதழ். எங்கள் வாசகன் பத்திரிகைக்கு “ வாசகன்” என்ற லோகோ டைட்டிலை மாலன்
நண்பர் “மனோபாலா”விடமிருந்து பெற்றுத் தந்தார். அப்போது நண்பர் மனோபாலா
அவர்கள் சென்தினை திருவல்லிக்கேணியில் குடியிருந்தார். இதுதான் வாசகனின்
துவக்கம்.