அரங்கனிடமடியார்……
பல்லவி
அரங்கனிடமடியார் முக்தி பெரும் வரம் கேட்டார்
வரம் கேட்ட அடியாரை பார்த்தரங்கன் நகைத்தார்
அனுபல்லவி
பரமன் கேசவனோ அடியாரை நோக்கித் தன்
சிரமசைத்து பலவாறு கேள்விகளைக் கேட்டார்
சரணம்
சரணாகதியெனவோ பக்தி ஞான யோகமோ
வருமெனதடியார்க்குத் தங்க ஓரிடமோ
பரம ஏழைக்கன்ன தானமோ செய்தீரோ
சிரம் பணிந்தடியாரும் ஏதுமில்லை என்று சொன்னார்
பிறகெவ்வண்ணம் நீர் பரகதி வரம் வேண்டுகிறீர்
அரங்கன் கோபமுற்று அடியாரைக் கேட்டான்
வரம் வேண்டிய அடியார் கரம் கூப்பிப் பணிவோடு
அரங்கனை நோக்கி இவ்வாறு கேட்டார்
அரங்கனே ததிபாண்டன் வீட்டுப் பானைக்கு நீ
பரகதி எவ்வண்ணம் தர மட்டும் துணிந்தாய்
கரம் சிரமில்லாத பானையுனை எங்ஙனம்
வரம் கோரித் தவம் செய்து துதித்தது என்றான்
துரிதம்
கேள்விக்கு பதிலின்றி வாய் புதைத்தரங்கன்
தோள் குலுக்கி நின்று வாளாவிருந்தான்
No comments:
Post a Comment